ஆழ்நிலை தியானம்: இறந்துபோன மதகுருவை ப்ரீசரில் வைத்து காத்திருக்கும் பக்தர்கள்

0

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒரு சிறு நகரம் நூர்மஹால். அங்குள்ள ஆசிரமத்தில் வாழ்ந்து வந்த அஷுதோஷ் மகாராஜ் (70) என்பவர் திவ்ய ஜோதி ஜக்ரதி சன்ஸ்தான் என்ற அமைப்பின் மத குருவாக இருந்துள்ளார். இவருக்கு உலகம் முழுவதிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் இருப்பதாகக் கூறப்படுகின்றது. ஆறு வாரங்களுக்கு முன்பு கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் தேதியன்று இவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். இவரது மரணம் மருத்துவர்களாலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இவர் ஆழ்ந்த தியானத்தில் இருப்பதாகவும், விரைவில் மீண்டும் எழுந்து வருவார் என்றும் நம்பும் அவரது பக்தர்கள் அவரது உடலை கடந்த ஆறு வாரங்களுக்கும் மேலாக குளிர்சாதன பெட்டியில் (ப்ரீசர்) வைத்துப் பாதுகாத்து வருகின்றனர். ஆசிரமத்தைச் சேர்ந்த சிலர் சொத்துகளில் உரிமை கொண்டாட நினைப்பதால் அவரது உடலை வெளிப்படுத்த மறுக்கின்றார்கள் என்று அவரது முன்னாள் டிரைவர் நீதிமன்றத்திற்கு சென்றார். ஆனால் அவரது இறப்பு உறுதி செய்யப்பட்டதை அறிந்த நீதிமன்றம் டிரைவரின் மனுவை நிராகரித்ததாக பஞ்சாப் மாநில கூடுதல் தலைமை வழக்குரைஞர் ரீதா கோஹ்லி தெரிவித்தார்.

பக்தர்களின் விருப்பமே செயல்படுத்தப்பட வேண்டும் என்று பஞ்சாப் அரசும் தெரிவித்துவிட்டதால் காவல்துறையும் இதில் தலையிடமுடியாது என்று குறிப்பிடப்படுகின்றது.

குரு மகராஜ் ஆழ்ந்த தியானத்தில் இருக்கும்போது ஆசிரம நியதிகளைப் பின்பற்றுவோருக்கு நன்றி தெரிவித்து அவரது இணையதளத்தில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. கண்களை மூடி தியானிக்கும்போது குருவுடன் பேசுவதாக உணரும் இந்த பக்தர்களோ அவர் மீண்டும் எழுந்து வருவதற்காகத் தாங்கள் காத்திருப்போம் என்று தெரிவிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.