என்றென்றும் புன்னகை விமர்சனம்

‘குடி’யிருக்கும் கோவிலாகிவிட்டது தமிழ்சினிமா. குடியில்லா படமில்லை என்ற நிகழ்மொழிக்கேற்பதான் இந்த படமும். ஆனால் கிளாஸ் முழுக்க காதலும் கலகலப்பும் நிரம்பியிருப்பதால் இரண்டரை மணி நேரம்…. நிமிஷத்தில் காலி!

ஜீவா, வினய், சந்தானம் மூவரும் திக் பிரண்ட்ஸ். விளம்பர பட நிறுவனத்தை நடத்தி வரும் இவர்கள் ஓய்வு நேரத்தில் குடிக்கிறார்கள். ஆபிஸ் நேரத்தில் குடிக்கிறார்கள். அப்புறம்…. நேரம் கிடைக்கும்போதெல்லாம் குடிக்கிறார்கள். ஆனால் சிரித்து சிரித்து மட்டையாவது நாம்தான். அந்தளவுக்கு சிந்துகிற ஒவ்வொரு துளியும் ஒரு ஜோக்காகவே இருக்கிறது. இப்படியே போனால் என்னாவது? காதல் வேணுமே? ஓடிப்போன அம்மாவின் மீதுள்ள கோபத்தில் ‘கல்யாணமே வேண்டாம், பெண்களெல்லாம் பிசாசுகள்’ என்று முடிவெடுக்கிற ஜீவா, தன் லட்சியத்தை நண்பர்களுக்குள்ளும் புகுத்துகிறார். அவர்களும் போதையில், ‘சரி… மச்சி. நாங்களும் கல்யாணமே பண்ணிக்க மாட்டோம்’ என்று சத்தியம் செய்ய, சில நாட்களுக்குள்ளேயே மொத்த சத்தியமும் மட்டையாகிறது. சந்தானமும் வினய்யும் ஆளுக்கொரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார்கள். தனிமரமாகிற ஜீவா…. வேறு வழியில்லாமல் காதலித்துதானே ஆக வேண்டும்?

அந்த நிகழ்வைதான் ஒரு பூவின் மீது பட்டர்ஃபிளை அமர்வது போல அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் அகமது. (பார்றா… இவரு பேர்லேயும் மது?) புதிதாக வேலைக்கும் சேரும் த்ரிஷா மீது ஜீவாவுக்கு லவ் வருகிறது. ஆனால் அதை சொல்ல தடுக்கிறது லட்சியம். ஒருவழியாக வெளிநாட்டில் முகிழ்க்கும் காதலை, சென்னை ஏர்போர்ட்டில் வைத்து மறுபடியும் குதறி வைக்கிறார் ஜீவா. அழுகையும் அவஸ்தையுமாக ஜீவாவை விட்டு விலகும் த்ரிஷா மீண்டும் அவருடன் சேர்ந்தாரா? த்ரிஷாவுக்காக காத்திருந்த அமெரிக்க மாப்பிள்ளையின் கதி அதோகதிதானா? இதெல்லாம்தான் விறுவிறுப்பான கடைசி நிமிடங்கள்.

மற்றவர்களை விடுங்கள். சந்தானமும், த்ரிஷாவும்தான் படத்தின் கனமான காந்தக்கட்டிகள்! முதன் முதலில் வெளியிடப்பட்ட இப்படத்தின் ட்ரெய்லரில் ‘அஞ்சு பத்துக்கு போவலாம்னு இருக்கேன்’ என்றொரு பெண் பர்மிஷன் கேட்க, ‘ஏன்… நல்லாதான இருக்கே. ஆயிரம் ஐநுறுக்கே போகலாமே’ என்று சந்தானம் சொல்லி பெண்கள் அமைப்புகள் மத்தியில் பிரச்சனையாச்சு அல்லவா? அந்த காட்சியை நறுக்கிவிட்டார்கள் என்றால், புத்திசாலித்தனமாக மாற்றியிருந்தார் சந்தானம். அந்த பெண் வந்து நின்று பர்மிஷன் கேட்க, ‘வாம்மா… உன்னாலதான் அவ்வளவு பிரச்சனையும். நீ மொதல்ல கிளம்பு’ என்று கூறுகையில் புரிந்து கொண்டு சிரிக்கிறது தியேட்டர். சாப்பிட என்ன வச்சுருக்கே என்று மனைவியிடம் போனில் விசாரிக்கும் சந்தானத்திடம் கோபமாக, ‘ம்… விஷம் வச்சுருக்கேன்’என்கிறார் அவர். ‘நான் வர்றதுக்கு லேட்டாகும், நீ சாப்ட்டு படுத்துரு’ என்று சந்தானம் கவுன்ட்டர் கொடுக்க, ரகளையாகிறார்கள் ரசிகர்கள்.

இப்படி படம் நெடுக்க பேசியே கலகலப்பூட்டும் சந்தானம், ஒரு பத்து நிமிடம் ஃபுல் சரக்கடித்துவிட்டு பேசாமலே செய்யும் அலம்பல் இருக்கே, இந்திய சினிமா இதுவரை பார்க்காதது. இந்த ஒரு வித்தியாசமான காட்சியை எப்படி எடுக்க வேண்டும் என்று யோசித்த மொத்த படக்குழுவுக்கும், ஐடியா மன்னர்களுக்கும் ஆளுயர சரக்கு பாட்டில் கொடுத்து கவுரவிக்கலாம்.

‘ஏங்க… எல்லாரும் இருக்காங்க. இடுப்பை கிள்ளாதீங்க’ என்று மனைவி செல்லமாக சிணுங்க, வேலைக்காரி என்ட்ரியாகி, ‘நல்லா சொல்லுங்கம்மா. நானும் சொல்லிகிட்டேயிருக்கேன். கேட்க மாட்டேங்கிறார்’ போன்ற ஜோக்குகளும் நிரம்பி வழிகிறது. ஆனால் இவ்வளவுக்கு மத்தியில், மிக அழகான ஒரு காதலை பூக்க வைத்திருக்கிறார் இயக்குனர். இந்த ஸ்டைல் அப்படியே கவுதம் மேனன் ஸ்டைலாச்சா? மனம் லேசாகிவிடுகிறது.

ஏற்கனவே ‘விண்ணை தாண்டி வருவாயா’ படத்தில் இதுபோன்ற கேரக்டரில் ஊதி தள்ளியிருப்பார் த்ரிஷா. கிட்டதட்ட ரிப்பீட் இது. அவ்வளவு அற்புதமாக நடித்திருக்கிறார். இத்தனை வருடங்கள் கடந்த பிறகும் அதே அழகு குறையாமலிருக்கிற வித்தைக்கு எந்த கேரள ஆயுர்வேத மையம் காரணமோ, அவர்களுக்கு அகில உலக த்ரிஷா ரசிகர் மன்றம் சார்பில் ஒரு லட்சார்ச்சனை ப்ளீஸ்.

படத்தில் வருகிற ஆன்ட்ரியா போர்ஷன் அழுத்தமானது. இந்த ஷுட்டிங் முடியறதுக்குள்ள அவரை என் பின்னாலேயே சுற்ற வைக்கிறேன் என்று சபதம் போட்டு, அதற்காகவே ஒரு கிஸ் அடிக்க, பதிலுக்கு ஒரு அறைதான் கிடைக்கிறது ஜீவாவிடமிருந்து. அதற்கப்புறம் ஆன்ட்ரியா திட்டமிட்டு பழிவாங்கும் அந்த ஃபாரின் லொக்கேஷன் காட்சியும் அரத மாஸ். மன்னிப்புதான் கேட்கப் போகிறார் என்று பார்த்தால், இன்னும் நீ கிளம்பலையா என்கிறார் ஜீவா. பிடிவாத நடிகைகளின் ஈகோவுக்கு வைக்கப்பட்ட தீ அது. முழுநேர வில்லியாக நடிக்க முழு தகுதியுடன் ஆன்ட்ரியா. ட்ரை பண்ணுங்க.

மகன் தன்னிடம் ஒரு வார்த்தை பேச மாட்டானா என்று ஏங்குகிற அப்பாவாக நாசர். கடைசியில் அவரது முடிவும் நெஞ்சை தொடுகிறது.

இந்த படத்தின் ஆகப்பெரிய அற்புதம் இசை. ஹாரிஸ் ஜெயராஜின் பின்னணி இசை கூட பிரமாதம் இல்லை. அந்த ட்யூன்கள்…? அழகோ அழகு. மதியின் ஒளிப்பதிவில் உள்ளூராகட்டும்… வெளிநாடாகட்டும்… கண்கொள்ளாக்காட்சியாக இருக்கிறது. அளவான ‘கட்டிங்’ பிரவீன் கே.எல்.ஸ்ரீகாந்தின் எடிட்டிங்.

இப்படத்தில் வரும் காதல், மடி நிறைய பூத்த மத்தாப்பூ! மற்றவை ‘என்றென்றும் வெடிச்சிரிப்பு’

-ஆர்.எஸ்.அந்தணன்

3 Comments
  1. rrmercy says
  2. rrmercy says

    குடி’யிருக்கும் கோவிலாகிவிட்டது தமிழ்சினிமா. குடியில்லா படமில்லை
    super sir. added to that.
    1. birthday celebration with cake cutting. recent movies ( raja rani, கல்யாண சமையல் சாதம்). can’t they thing new scenes.

    1. Snake says

      why don’t you sit home and play with yourself. i bet you are fun at the parties oh wait you have no friends, because you sound like a bitter person.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பிரியாணி விமர்சனம்

எடுத்த எடுப்பிலேயே பிரேம்ஜியின் கைபர் போலன் கண‘வாய்’க்குள்ளிருந்துதான் துவங்குகிறது படம். அவ்வளவு பெரிய வாயை அவர் திறக்காவிட்டால் கூட திறந்தது போலதான் இருக்கும். இந்த லட்சணத்தில் இவ்வளவு...

Close