சதி பண்ணிட்டாங்க… தயாரிப்பாளர் தாணு கோபம்!

0

ஒண்ணு மண்ணா இருந்தாலும் தோற்ற பிறகு நட்பாவது, நலமாவது? நேற்று காலையில் தயாரிப்பாளர் தாணு பிரஸ்சை மீட் பண்ணிய போது இதுவரை அவரை இயக்கி வந்த எஸ்.ஏ.சி அங்கு வரவேயில்லை. அதற்கு முதல்நாள்தான் தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடந்தது. அதில் தாணு பெற்றது வெறும் இருநுற்றி சொச்சம் ஓட்டுகள்.

நியாயமாக வெற்றி பெற்றதே எங்கள் அணிதான். இந்த தேர்தலை நடத்திய நீதியரசர்கள்தான் தீர்ப்பை தவறா சொல்லிட்டாங்க என்கிற ரேஞ்சில் இருந்தது அவரது விளக்கம். ஒரு அறிக்கையை வாசித்தார் தாணு. அதில் விதி எண் 20 ஐ கேயார் அணி மீறி விட்டதாகவும் இது தொடர்பாக தேர்தல் பொறுப்பாளர்களான நீதியரசர்களை அவர் சந்தித்ததாகவும் கூறினார் தாணு.

அதற்கு முன் விதி எண் என்ன என்பதை அறிந்து கொள்வது முக்கியம். தேர்தலில் போட்டியிடுகிறவர்களும், அல்லது அவர் மீது பற்றுள்ளவர்களும் பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்கக் கூடாது. பேனர்கள், கட் அவுட்டுகள், வினைல் போர்டு வைக்கவோ போஸ்டர்கள் ஒட்டவோ கூடாது. தேர்தலில் போட்டியிடுவர்கள் தங்கள் விளம்பரத்திற்கு நோட்டீஸ் போடலாம். வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கலாம். ஆனால் எந்தவொரு வேட்பாளரையும் தரக்குறைவாக பேசவோ, எழுதவோ கூடாது. இதை மீறுபவர்கள் தேர்தலில் நிற்க தகுதியற்றவர்கள் ஆகிறார்கள்.

இதுதான் அந்த விதி. ஆனால் இவை அனைத்தையும் இரு தரப்புமே மீறியது. அதுபோகட்டும். விதி எண் 20 ஐ நேரடியாக மீறியது கேயார் அணிதான் என்பதற்கு உதாரணம் தேர்தல் தினத்தன்றும் அதற்கு முதல்நாளும் முன்னணி மாலை நாளிதழ்களிலும் அதிமுகவின் நாளேடான நமது எம்ஜிஆர் நாளிதழிலும் விளம்பரம் கொடுத்திருந்தார்கள் நடிகர் சங்க தலைவர் சரத்குமாரும், இப்ராஹிம் ராவுத்தரும்.

இதைதான் தவறென்று நீதியரசர்களிடம் சுட்டிக்காட்டினாராம் தாணு. யாருக்கும் சொல்லக் கூடாது என்று என் நெற்றிப் பொட்டின் மீது சத்தியம் வாங்கிக் கொண்டு நீதியரசர்கள் இருவரும் அப்போது ஒன்றை சொன்னார்கள். தேர்தல் முடிந்ததும் வாக்குப் பெட்டிகளை நீதிமன்றத்திடம் ஒப்படைத்துவிடுகிறோம். அவர்கள் பார்த்து முடிவு சொல்லட்டும் என்பதுதான் அது. ஆனால் அவர்கள் சத்தியம் மீறியதால் நானும் சத்தியத்தை மீறி இதை சொல்கிறேன் என்று பொங்கினார் தாணு.

நல்லவேளையாக அவரது பொங்கலுக்கும் புகைச்சலுக்கும் நடுவில் ஆறுதலாக ஒரு வாசகம் இருந்தது. நான் தயாரிப்பாளர் சங்கத்தை முடக்கும் நடவடிக்கையில் இறங்க மாட்டேன். எங்கள் அணியின் தோல்வி ஜனநாயகத்துக்கு விரோதமானது. நியாயமற்றது என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன் என்பதுதான் அந்த வாசகம்.

பழுத்த அரசியல்வாதிகளே சினிமாக்காரர்களிடம் பிச்சை வாங்க வேண்டும் போலிருக்கிறதே!

Leave A Reply

Your email address will not be published.