நைஜீரியாவில் மனித உடல்களுடன் திகில் வீடு கண்டுபிடிப்பு: பொதுமக்கள் முற்றுகை

0

நைஜீரியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஓயோ மாநிலத்தில் வாடகைக்கு மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் தங்கள் உறுப்பினர்களில் சிலரைக் காணவில்லை என்றும் அவர்கள் கடத்திச் செல்லப்பட்டிருக்கலாம் என்றும் காவல்துறையிடம் புகார் அளித்திருந்தனர். இது குறித்து தேடுதல் வேட்டையில் இறங்கியபோது, இபடன் என்ற இடத்தில் ஒதுக்குப்புறமாக இருந்த ஒரு வீட்டை சந்தேகித்த போலீசார், கடந்த சனிக்கிழமை அன்று அந்த வீட்டை சுற்றிவளைத்தனர்.

உள்ளே சென்று சோதனையிட்டபோது அங்கு எலும்புக்கூடுகளையும், அழுகிய நிலையில் இருந்த பிணங்களையும் கைப்பற்றியுள்ளனர். இதுமட்டுமின்றி 15க்கும் மேற்பட்டோர் அங்கு கட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளனர். மேலும் பலர் உடல் நலிந்த நிலையில் அங்கிருந்த புதர்களை சுற்றித் திரிந்ததையும் அவர்கள் கண்டனர்.

அந்த வீட்டிற்கு செல்லும் வழியெங்கிலும் மண்டை ஓடுகளும், எலும்புகளும் காணப்பட்டுள்ளன. அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசிக்கொண்டிருக்க ஏராளமான ஈக்கள் மொய்த்துக்கொண்டிருந்தன. மேலும், துணிகளும், தனிப்பட்ட உடமைப் பொருட்களும் ஆங்காங்கே சிதறிக் கிடந்துள்ளன.

செய்தியறிந்து அங்கே திரண்ட மக்கள் அங்கிருந்த காட்சிகளைக் கண்டு ஆத்திரமடைந்தனர். உள்ளே இருப்பவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று கூறி கட்டிடத்தின் உள்ளே நுழைய முயன்றனர். அவர்களைக் காவலர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் ஏற்பட்ட கலவரத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று கூறப்படுகின்றது. அங்கு வெளியில் நின்று கொண்டிருந்த பேருந்து ஒன்றினையும் ஆத்திரமடைந்த மக்கள் தாக்கி சேதப்படுத்தினர்.

‘திகில் வீடு’ என்று குறிப்பிடப்பட்ட இந்த வீட்டினை ஒரு கட்டுமான நிறுவனம் பயன்படுத்தி வந்ததாகவும், பின்னாளில் இது மந்திர, மாந்த்ரீக செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர். இரவு நேரங்களில் இங்கு மனித உடல் உறுப்புகள் விற்பனையும் நடைபெற்றிருக்கக்கூடும் என்று அவர்கள் கருதுகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணையைத் தொடங்கியுள்ள காவல்துறை, கடந்த ஞாயிறன்று வில், அம்பு, ஆயுதங்கள் போன்றவற்றை வைத்துக் கொண்டு ஐந்து பாதுகாப்பாளர்களுடன் அங்கு வந்த ஆறு பேரைக் கைது செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. நேற்று அந்தப் பகுதியை பார்வையிட்ட ஓயோ மாநில கவர்னர் அபியோலா அஜுமோபி, குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை வழங்கப்படும் என்று பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.