பட்டத்து யானை

யானையின் வால் இருக்க வேண்டிய இடத்தில் தும்பிக்கை இருந்தால் எப்படியிருக்கும். இந்த பட்டத்து யானையின் சரிபாதி தும்பிக்கையாக சந்தானமும் இருப்பதால், ‘இந்த படத்துக்கு யாருதான்யா ஹீரோ?’ என்கிற குழப்பம் முதல் பாதியில் வருகிறது. அந்தளவுக்கு நீக்கமற நிறைந்திருக்கிறார் அவர்! ‘அட பேனா மூக்கணுங்களா, நான் வர்றதையா வேணான்றீங்க?’ என்று செகன்ட் ஆஃப்பில் சந்தானம் வெகுண்டெழுந்து ஆஃப் ஆகிவிடுகிற அவஸ்தையும் நடக்கிறது. அதற்கப்புறம் படம் எப்படி? ஆனைக்கும் அடி சறுக்குமல்லவா? அதேதான்!

அந்த ஊர்லேயே பெரிய சமையல்காரர் என்று பெயரெடுத்த சந்தானத்திடம், அதே ஊரில் இருக்கிற பெரிய ரவுடியும் தன் கல்யாண ஆர்டரை கொடுக்கிறான். சொந்த பொங்கலிலே சூனியத்தை வைப்பானேன் என்று சந்தானத்தின் அப்ரசன்டுகள் அவரை விட்டு ஓட, இக்கட்டான நேரத்தில் கை கொடுக்கிறார்கள் விஷால் அண் கோவினர். இவர்கள் பண்ணுகிற குழப்பத்தில் ஊரைவிட்டே கிளம்புகிறது சமையல் கோஷ்டி. திருச்சிக்கு இடம் பெயர்கிற இவர்களில் விஷாலின் கண்ணில் விழுகிறார் ஐஸ்வர்யா. கண்டதும் காதல்.

விஷால் வெளியூருக்கு பஸ் ஏறினாலே அங்கே நாற்பது கொலைகளும், நாலைந்து ரேப் முயற்சிகளும் நடக்குமல்லவா? நடக்கிறது. வெகுண்டெழும் விஷால், காதலி ஐஸ்வர்யாவுக்காக முஷ்டியை தூக்க, வில்லன் ஹீரோ ‘வார்’ ஸ்டார்ட் ஆகிறது.

ஒரு ஆக்ஷன் படத்தில் என்னவெல்லாம் இருக்குமோ, அதையெல்லாம் கச்சிதமாக நிறைவேற்றி ஐஸ்சின் மனசில் விஷால் இடம் பெறுவதுதான் க்ளைமாக்ஸ்.

பூபதி பாண்டியன் படம் என்பதால் சிரிப்புக்கு கியாரண்டி. கொடுக்கிற ரூபாய்க்கும் வாரண்டி என்று உள்ளே நுழைகிறது ரசிகர் கூட்டம். ‘படமே பஃபே சிஸ்டம்தான். என்ன வேணுமோ, எடுத்துக்கோங்க’ என்று அத்தனை டைப் சீன்களையும் வைத்து படத்தை முடித்திருக்கிறார் ‘பூ’-பதி பாண்டியன்.

கையில் கரண்டி, கரைபுரண்டோடும் நகைச்சுவை, தேவைப்பட்டா நெருப்பையும் கக்குவோம்ல… என்று முழு தாக்குதலுக்கு தயாராகவே நிற்கிறார் விஷால். ஆஜானுபாகுவான உயரத்தை குறுக்கிக் கொண்டு இவர் செய்யும் காமெடி பாடி லாங்குவேஜ் நன்றாகவே வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. ஐஸ்வர்யாவிடம் பையை தொலைத்துவிட்டு, அது தொலைந்து போன துக்கம் கூட இல்லாமல் ஜொள்ளாபிஷேகம் செய்வதுதான் நெஞ்சு பொறுக்குதில்லையே டைப்! எந்த ஹீரோ அடித்தாலும் ‘மேலே ரோப் இருக்கு. சைட்ல பில்லோ இருக்கு’ என்றெல்லாம் யோசிக்கும் ரசிகனின் ஞானக் கண், விஷாலின் அடியை மட்டும் சிவனே என்று நம்புவதுதான் ஆச்சர்யம்.

அப்புறம், இந்த படத்தின் செகன்ட் ஹீரோ சந்தானத்தை பற்றி நிறையவே பேசியாக வேண்டும். ஒரு சமையல் வித்தைக் காரனுக்கு இருக்கிற அத்தனை அகங்காரத்தோடும் இவர் திரிவதே செம அழகு. பட்டு வேட்டி பட்டு துண்டோடு திருச்சிக்கு என்ட்ரி ஆகும் இவர், கடைசியில் அழுக்கு பனியன், லுங்கி என்று தள்ளப்படுகிற நிலைமை அதிர வைக்கிறது. அந்த நேரத்திலும் ‘உன்னை இப்படி பார்க்க முடியலைடா’ என்று அந்த குண்டு சிஷ்யன் கதறுவதை கலாட்டாவாக ரசிக்க முடிகிறது. வார்த்தைக்கு வார்த்தை இவர் ‘முதலாளி’ என்று உருகுவதை கேட்கும்போதெல்லாம் தியேட்டரே ‘கொல்…’

ஒரு சந்தானம் போதாதென போட்டோவிலும் ஒரு சந்தானம் வந்து விடுகிறாரா, அவருக்கும் ஒரு ஷாட் போட்டு சிரிக்க வைக்கிறார்கள் நம்மை.

ஒண்ணு வாங்கினா இன்னொன்னு இலவசம் மாதிரி, இப்படத்தில் மயில்சாமியும் இருப்பது டபுள் தமா(ஷ்)க்கா! ஒருவரிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே இன்னொருவரின் ஹேன்ட் பேக் ஜிப்பை கழற்றுவதாக நினைத்துக்கொண்டு… ஹையோ வேணாம்! சிரித்து சிரித்து கண்களில் அழுகையே வந்துவிடுகிறது. ஒரு பாடலை பாடி ஆடியும் இருக்கிறார். என்ன ஒரு ஸ்டெப். மயில்சாமிக்கான இடத்தில் எவர் எவரோ சம்பந்தமில்லாமல் உட்கார்ந்திருப்பதாகவே படுகிறது. எங்க தப்புன்னு யோசிங்க மயில்!

படத்தின் கதாநாயகி ஐஸ்வர்யாவை ‘என்னவொரு என்னவொரு அழகியடா…’ என்று வரியெடுத்து பாடுகிறார்கள். இப்பாடலின் லீட் கவனித்தால் புரியும். அப்படி பாடுவதே பார்வையற்றவர்கள்தான். என்னவொரு கோ–இன்ஸிடென்ட்!

ஒளிப்பதிவாளர் வைத்தியின் கேமிரா ஒரு பிளசன்ட் லுக்கை தருக்கிற அதே நேரத்தில் சண்டை என்று வரும்போது சட்டையை முறுக்கிக் கொண்டும் நிற்கிறது. வெல்டன். தமனின் இசையில் நாம் மேலே சொன்ன பாடல்தான் இந்த வருடத்தின் மகா மெகா ஹிட்டுகளில் இடம் பிடிக்கும். பின்னணி இசைக்கு சபேஷ் முரளியை அழைத்திருக்கிறார் பூபதிபாண்டியன். வந்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள் இருவரும்.

என்னதான் பட்டத்து யானையாக இருந்தாலும், பம்ப் செட்டில் குளிக்க வைத்த மாதிரிதான் இருக்கிறது படம்!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சொன்னா புரியாது – விமர்சனம்

ஊர்ல இருக்கிற பார்ல எல்லாம், லேடீசுக்கும் சம அந்தஸ்து கொடுக்கிற காலம் இது. இந்த ஃபாஸ்ட்புட் உலகத்தில் காதல் மட்டும் நோஸ்கட் ஆகாமலிருக்குமா என்ன? காதலையும் கல்யாணத்தையும்...

Close