மலேசிய விமானம் மாயம்: செயல்பாட்டில் இருக்கும் பயணியின் செல்போன்

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி 239 பயணிகளுடன் சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம், நேற்று முன்தினம் அதிகாலையில் காணாமல் போனது. கடல் மற்றும் ஆகாயமார்க்கமாக 3 நாட்களாக தேடியும் அந்த விமானம் கண்டுபிடிக்கப்படவில்லை.

தெற்கு சீனக்கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்த அந்த விமானம், விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்ததால், விபத்தில் சிக்கி அனைவரும் உயிரிழந்தார்களா? அல்லது விமானம் கடத்தப்பட்டதா? என்று பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

இதற்கிடையே, வியட்நாம் அருகே உள்ள தோ சூ தீவுக்கு தென்மேற்கு பகுதியில் விமானத்தின் வால் பகுதி மற்றும் கதவு பகுதிகள் உடைந்து கிடந்ததை அந்நாட்டு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அது, காணாமல் போன மலேசிய விமானத்தின் பாகங்களாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. காணாமல் போன விமானத்தில் இருந்து உதவி கேட்டு எந்த அழைப்பும் வரவில்லை.

ரேடார் தொடர்பில் இருந்து மறைந்தபோது கடைசியாக பறந்த பகுதியில் உள்ள கடலில் ஆயில் மிதந்ததை மலேசிய அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். எனவே, நடுவானிலேயே விமானம் வெடித்து சிதறியிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இந்நிலையில், காணாமல் போன விமானத்தில் பயணம் செய்த ஒரு சீன பயணியின் செல்போன் இன்னும் பயன்பாட்டில் உள்ளதாக அவரது உறவினர்கள் புதிய தகவலை வெளியிட்டுள்ளனர். அவரது செல்போன் நம்பரை தொடர்பு கொண்டபோது, மணி ஒலித்துக்கொண்டே இருப்பதாகவும், யாரும் அதை எடுத்து பேசவில்லை என்றும் தெரிவித்தனர்.

அந்த பயணிக்கு டயல் செய்யும் காட்சி பீஜிங் தொலைக்காட்சியில் வெளியாகி உள்ளது. எனவே, செல்போன் சிக்னல்களை வைத்து விமானத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்றும், இதற்காக செயற்கைக் கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும் பயணிகளின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Soulmates foundation Awards 2014. 9.3.14 Photos II

[nggallery id=292]

Close