49 ஓ – விமர்சனம்

0

பொடரியில ஓங்கி தட்டி, “பொறுப்பிருக்காடா ஒங்களுக்கெல்லாம்?’’ என்று கேட்கிற ஒரே தகுதி, கிழட்டு சிங்கம் கவுண்டமணிக்குதான் இருக்கிறது! அவரை பொருத்தமான ஒரு படத்தில் நுழைத்து, பொட்டில் அறைந்த மாதிரி ஒரு கதையை சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குனர் பி.ஆரோக்கியதாஸ்! கவுண்டர் மட்டும் இல்லையென்றால் இந்த படம் காவேரி ஆற்றின் கடைசி அணை மாதிரி யார் மனசுக்குள்ளும் நிரம்பாமலே போயிருக்கும்.

“விளைச்சல் நிலத்தையெல்லாம் ரியல் எஸ்டேட் காரன்ட்ட கொடுத்து பில்டிங் கட்டிட்டா சோத்துக்கு என்னடா பண்ணுவீங்க?” இதுதான் படத்தின் மிக மிக அழுத்தமான பேஸ்மென்ட். இதற்குள் கவுண்டமணி ஆடியிருக்கிறார் பாருங்கள் ஒரு ஆட்டம்? எருமை கொம்புல சட்டையை காயப் போட்ட மாதிரி ஏக அதகளம்!

ஒரு அழகான கிராமம். வானம் பொய்த்து விவசாயமும் பொய்த்துப் போகிறது. விளைகிற கொஞ்ச நஞ்ச நெல்லையும் அடிமாட்டு விலைக்கு அள்ளிக் கொண்டு போகும் வியாபாரிகள் என்று விவசாயிகள் முகத்தில் எந்நேரமும் கவலை. அவர்களை நைசாக வளைத்து ஏமாற்றி விவசாய நிலங்களை கைப்பற்றிக் கொள்கிறார் அந்த ஊர் எம்.எல்.ஏ வின் வாரிசு. அதில் ரியல் எஸ்டேட் செய்து துட்டு பார்க்கிறது அந்த கோஷ்டி. மீண்டும் அவரிடமிருந்து எப்படி நிலங்களை மீட்டு விவசாயிகளுக்கே அளிக்கிறார் கவுண்டர் என்பதுதான் வேக வேகமான 49 ஓ.

ஒரு படத்தில் ஒன்றிரண்டு புதிய விஷயங்களை ரசிக்கும்படி சொல்லிவிட்டாலே இருக்கையை விட்டு நகர மாட்டான் ரசிகன்! இதில் மிக நீண்ட…, ஆனால் நிமிஷத்தில் நம்மை கடக்க வைக்கிற இரண்டு விஷயங்களை கையில் எடுக்கிறார் கவுண்டமணி. ஒன்று… ஆறடி தாய்மடி திட்டம்! வாழும்போதே தனக்கான சுடுகாட்டை நல்ல விலை கொடுத்து அட்வான்ஸ் புக்கிங் செய்து கொள்வது. “ஏம்ப்பா சுடுகாட்டு பக்கத்துல நிலம் வித்தா எவன் வாங்குவான்? அதுக்காகதான் இப்படியொரு ஐடியா” என்று அதற்கு முறையான விளக்கமும் கொடுத்துவிடுகிறார்கள் கவுண்டரின் திருவாயால். இது தொடர்பான காட்சிகளை கண்ணில் இரண்டு சொட்டு நீர் வராமல் ரசித்திருந்தால், இந்த மாமாங்கத்தின் இரும்பு மனுஷனாக அவரை அறிவித்துவிடலாம்!

இன்னொன்று… “ஐம்பதும் நூறும் எங்களுக்கு கொடுத்துட்டு நீ மட்டும் கோடி கோடியா கொள்ளை அடிப்பியா? அதனால் எல்லா கட்சியும் என் ஊருக்கு வா. பெஸ்ட் ஆஃபர் யாரு தர்றீங்களோ, அவங்களுக்குதான் எங்க ஓட்டு” என்கிற திட்டம். ஒரு ஓட்டுக்கு முப்பதாயிரம் வரைக்கும் பேரம் பேசுகிறார் கவுண்டர். கடைசியில் பேரம் படியாததால் ஒரு பிச்சைக்காரரை தேர்தலில் சுயேச்சையாக நிற்க வைக்க அவரையும் போட்டுத்தள்ளுகிறது எம்.எல்.ஏ வாரிசு. அதற்கப்புறம் கவுண்டர் எடுக்கும் ஆக்ஷனும், அரசியல்வாதிகளின் ரீயாக்ஷனும்தான் க்ளைமாக்ஸ்! எவ்வளவு காலம் ஆச்சு இப்படியொரு பொலிட்டிக்கல் சட்டையர் வந்து?

கொஞ்சம் அசந்தாலும் போதும். உச்சந்தலையில் பொங்கல் வைக்கும் அவரது ஸ்பெஷல் ஃபார்முலாவை இன்னமும் ஈரம் காயாமல் வைத்திருக்கிறார் கவுண்டமணி. அவரது குரல் கூட அப்படியே இருக்கிறது. ஆள்தான் சற்றே தளர்ந்து போய்! அவ்வளவு தளர்ச்சியையும் பொருட்படுத்தாமல் ஆடுவதும், வீறு கொண்டு நடப்பதுமாக பர்பாமென்ஸ் திலகம் ஆகியிருக்கிறார் மனுஷன். வசனங்கள் அவருடையதா? அல்லது இயக்குனருடையதா? நெருப்புப் பொறி பறக்கிறது. ஒரு கட்சியையும் விட்டு வைக்கவில்லை அவர். அவ்வளவு ஏன்? ஆட்சி கனவோடு நடித்துக் கொண்டிருக்கும் நடிகர்களையும் வாரி அடித்து வம்புக்கு இழுக்கிறார்.

கிராமத்து மனுஷங்க எப்படியிருப்பாங்க… என்கிற துல்லியத்தை மிக அசால்ட்டாக கடந்து போகிறார் இயக்குனர். ஒரு காட்சியில் ரியல் எஸ்டேட் விளம்பர நடிகர் நடிகைகள் ஊருக்குள் வந்து இறங்க, தன் மகளிடம் “நீ வீட்டுக்கு போம்மா” என்று அனுப்பி வைக்கிறார் கவுண்டர். உற்று கவனிப்பவர்களுக்கு ஓராயிரம் உண்மை புரியும்! ஜெயபாலன், திருமுருகன், பாலாசிங், குருசோமசுந்தரம், நான் கடவுள் ராஜேந்திரன் என்று நிறைய பழகிய முகங்கள். பர்பாமென்ஸ்களும் சிறப்பு.

இரண்டு அழகான பாடல்கள் காதுகளை விட்டு அகலுவேனா என்கிறது. இசை கே. பெரும் சலசலப்புக்கு நடுவே சிலுசிலுவென ஓடியிருக்கிறார் இவர். ஆர்ப்பாட்டமில்லாத படத்தொகுப்பு. கவுண்டர் கடைசியில் பேசும் அந்த உணர்ச்சிகரமான வசனக்காட்சியில் நடுநடுவே ஒரு சின்ன கட் கொடுத்து, அதிருகிற இசை பிட் ஒன்றை அங்கு சொருகுகிற வித்தையில் வசனத்தின் கனம் இன்னும் அடர்த்தியாகிவிடுகிறது.

குறிப்பாக 49 ஓ குறித்த கேள்விகளுக்கு பதில் சொல்வதற்காகவாவது, தேர்தல் ஆணையம் ஒட்டுமொத்தமாக உட்கார்ந்து இந்த படத்தை பார்க்க வேண்டும்!

கிட்டதட்ட மாட்டுத்தோல் பரம்பரை ஆகிக் கொண்டிருக்கும் நமக்கெல்லாம் இப்படியொரு சவுக்கடி படம் தேவைதான்!

ஆரோக்கியதாசின் இந்த 49 ஓ…. நாடே போற்ற வேண்டிய ஓ…ஹோ!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.