96 பட வெளியீட்டில் சிக்கல்! குறுக்கே நிற்கும் விஷால்?

0

அசல் நெய்யினால் செய்யப்பட்ட காதல் மைசூர்பாகுதான் 96 திரைப்படம். காதலில் விழுந்த அத்தனை பேருக்கும் இப்படம் ஆனந்த தாலாட்டு. அற்புத மூலிகை. அடங்காத பேருணர்ச்சி. இன்னும் இன்னும் நிறைய…

அப்படிப்பட்ட படத்தை நான்கு நாட்களுக்கு முன்னாலேயே பத்திரிகையாளர்களுக்கு திரையிட்டால், மிச்சத்தை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று நம்பிய தயாரிப்பாளரும் இயக்குனரும் அவ்வாறே செய்தார்கள். முடிவு? வாயெல்லாம் இனிப்பு. மனசெல்லாம் இனிப்போ இனிப்பு. விமர்சனத்தை படித்த ரசிகர்கள், படித்த கணத்திலேயே தியேட்டருக்கு போய் முன்பதிவு செய்துவிட்டார்கள். அதுமட்டுமல்ல… விஜய் சேதுபதியின் படங்கள் எதுவும் அதிகாலை 5 மணி ஷோ ஓப்பன் ஆனதும் இல்லை. இன்று அதற்கான ஏற்பாடும் நடந்தது.

தேர் கிளம்பும் நேரம் பார்த்து ஊருக்குள் அடிதடி. இந்த அதிகாலை ஷோ கேன்சல். அதுமட்டுமல்ல, இன்று படமே வெளியாகுமா என்கிற அச்சமும் எழுந்துள்ளது. இதற்கெல்லாம் யார் காரணம்? எது காரணம்?

இரண்டு கேள்விகளுக்கும் சேர்ந்த ஒரே பதில்… விஷால்!

96 படத்தின் தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால், விஷால் நடிக்க ‘கத்திசண்டை’ என்ற படத்தை தயாரித்தார். இவர் பக்கம் ஏகப்பட்ட குளறுபடிகள். படம் வெளியாகிற நேரத்தில் விஷாலுக்கு ரெண்டு கோடி பாக்கி. அடுத்த படத்தில் அதை சரிகட்டி விடுவதாக கூறியிருந்தாராம் நந்தகோபால். சரியாக 96 வெளியாகிற நேரம் பார்த்து செக் வைத்துவிட்டார் விஷால். வட்டியோடு சேர்த்து மூன்றரை கோடி கொடுத்தால்தான் படத்தை வெளியிட முடியும் என்கிற சூழல் நிலவுகிறது.

ஒரு நல்லபடம். மனசை டச் பண்ணுகிற படம். கேவலம் பணத்திற்காக நிற்பதா என்ற நினைத்த விஜய் சேதுபதி, தன் சம்பளத்திலிருந்து ஒரு கோடி ரூபாயை விட்டுக் கொடுக்க முன்வந்திருக்கிறாராம். அந்த பணத்தை விஷாலிடம் கொடுத்தால் கூட பேலன்ஸ் பணம் குறுக்கே நிற்கிறது.

பஞ்சாயத்து ஸ்டார்ட் ஆகியிருக்கிறது. மிச்சத்தை அடுத்த படத்தில் வாங்கிக் கொள்வதாக விஷால் இறங்கி வந்தால் ஒழிய 96 க்கு விமோசனம் இல்லை.

தயாரிப்பாளர் சங்கத் தலைவரே ஒரு படத்தின் ரிலீசை தடுப்பாரா? சேச்சே… அப்படியெல்லாம் ஆகாது என்று நம்பிக் கொண்டிருக்கிறது கோடம்பாக்கம். என்ன நடக்கப் போவுதோ?

Leave A Reply

Your email address will not be published.