சார் ப்ளீஸ்… நீங்க பண்றது தப்பில்லீங்களா?

0

வயித்துப்பாட்டுக்கு கூவுறதையெல்லாம் சினிமா கணக்குல சேர்த்தால் வருஷத்துக்கு முன்னூறு படம் தேறும். அப்படி சேர்க்காம விட்டுட்டா, தமிழ்சினிமாவுல நூத்துக்கு ஒரு படம் கூட தேறாது. எப்பவாவதுதான் இந்த அழுக்கு சமூகத்தை, அதை சுற்றி நடக்கும் அவலத்தை, நம்மை கடந்து போகிற கண்றாவியை, நின்று நிதானமாக நம் மண்டைக்குள் ஏற்றுகிற படங்கள் வரும். ‘சரியா சொன்னாண்டா…’ என்று தன்னை மீறி கைதட்டுவான் ரசிகன். நமக்கென்னவோ ‘மிக மிக அவசரம்’ அப்படிப்பட்ட படமாக இருக்கும் போல தோன்றுகிறது. நேற்று இயக்குனர் சேரனால் வெளியிடப்பட்ட அந்த டீசர் காக்கி சட்டையின் கறையை பளிச்சென கண்முன் காட்டியது.

ஹஸ்கி வாய்சில் ஒரு போலீஸ் அதிகாரி லேடி கான்ஸ்டபுளுடன் பேசும் டயலாக்தான் முதலில். செல்போனில் அந்த மணிச் சத்தம் ஒலிக்கும் போதெல்லாம் அந்த பெண்ணின் மனசு என்ன பாடு பட்டிருக்கும். அவளை எவ்வளவு அச்சம் சூழ்ந்திருக்கும் என்பதையெல்லாம் அடுத்தடுத்த காட்சிகளில் அழுத்தமாக காட்டுகிறார் நாயகி ஸ்ரீ பிரியங்கா. தனக்கு உடன்படாத லேடி கான்ஸ்டபுளை அந்த போலீஸ் அதிகாரி என்ன பாடு படுத்துகிறார் என்பதுதான் கதையாக இருக்க வேண்டும்.

முரட்டு வாழை இலையின் மூலையில் முதலில் வைக்கப்படும் ஸ்வீட்டின் தரமே சொல்லிவிடும். மிச்ச ஐட்டங்கள் எப்படி இருக்கப் போகிறதென்று? இந்த டீசர் ‘விருந்துக்கு தயாராகுங்க ரசிகர்களே’ என்பது போலவே இருப்பதுதான் சிறப்பு. அறிமுக இயக்குனர் சுரேஷ் காமாட்சி, பட வெளியீட்டுக்குப் பின், முதல் தர இயக்குனர்கள் வரிசைக்குள் வந்துவிடுவார் என்றே தோன்றுகிறது.

கொள்ளைக்குப் பேர் போன வெள்ளை வண்டிகள், இப்போது வெள்ளைத்தோல்களுக்கும் ஆசைப்படுவதை பளிச்சென்று சொல்ல வரும் இப்படம், என்னென்ன பின் விளைவுகளை ஏற்படுத்தப் போகிறதோ?

அதற்கும் சேர்த்தே தமிழகம் வெயிட்டிங்…

Leave A Reply

Your email address will not be published.