ஏடிஎம் திருட்டு! இது எங்க ஊரு இருட்டு…

ஊருக்கு ஒதுக்குபுறமாக இருக்கும் ATM கள் எனி டைம் மணி மிஷின்களா, அல்லது எனி டைம் மர்டர் மிஷின்களா என்று சந்தேகப்படுகிற அளவுக்கு போய் கொண்டிருக்கிறது குற்றமும், கொலைகளும்! ஒரு ATM அறையை வைத்துக் கொண்டு 24 மணி நேரத்தில் அதற்குள் நடக்கும் பரபரப்பான சம்பவம் ஒன்றை படமாக்கியிருக்கிறார் ஆதித்யா பாஸ்கரன். ஆச்சர்யம் ஒன்று- இவர் இப்படத்தை இயக்குவதற்கு முன் ஒரு சினிமா ஷுட்டிங்கையும் பார்த்தவரல்ல! ஆச்சர்யம் ரெண்டு- மிஞ்சி மிஞ்சி போனால் 22 ஐ தாண்டாத வயசு! (மூன்றாவது ஆச்சர்யத்தை இவர் திரையில்தான் காட்ட வேண்டும். வேறு வழியில்லை. இப்போதைக்கு நம்பி வைப்போம்)

‘மய்யம்’ என்ற பெயரில் இவர் உருவாக்கியிருக்கும் படத்தை பிரபல ஓவியர் ஸ்ரீதர் தயாரித்திருக்கிறார். தமிழ்சினிமாவில் கமல்ஹாசன் தொடங்கி, கைப்புள்ள வடிவேலு வரைக்கும் எல்லாருக்கும் நன்கு பரிச்சயமும் நட்பும் கொண்ட ஸ்ரீதர் நினைத்திருந்தால், இதில் ஆளுக்கு அஞ்சு நிமிஷம் வந்துட்டு போங்க என்று அவ்வளவு பேரை நடிக்க வைத்திருக்க முடியும். ஆனால் கதைக்கு தேவையான கேரக்டர்களும், கதைக்குள் அடங்குகிற சீன்களுமாக படத்தை உருவாக்கியிருக்கிறாராம். ரூம் போட்டு விவாதிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த படத்தில் பங்குபெற்ற பதினைந்துக்கும் மேற்பட்ட டெக்னீஷியன்ஸ்கள் எல்லாருமே பல்வேறு கல்லூரிகளில் படிக்கும் ஸ்டூடன்ட்ஸ்.

அனுபவமில்லாத பசங்களை வச்சு படம் பண்ணிய அனுபவம் எப்படியிருக்கு? ஸ்ரீதரிடம் கேட்டால், தாடிக்குள்ளிருந்து புன்னகை எட்டிப்பார்க்கிறது. “யங் பிளட் எப்படியிருக்கும்னு இந்த படத்தை பார்த்து புரிஞ்சுப்பீங்க. அப்படி பிரமாதமா எடுத்திருக்காங்க. என்ன ஒண்ணு? அவங்களுக்கு பேட்டான்னா புரியாது. டைமிங்கனா தெரியாது. அவங்க பாட்டுக்கு எடுத்துகிட்டு இருப்பாங்க. தம்பிகளா… சீக்கிரம் முடிச்சு அனுப்பிருங்க. இன்னும் ஒரு மணி நேரம் நீடிச்சா ஒன்றரை லட்ச ரூபாய் எக்ஸ்ட்ரா ஆகும்னு சொல்லி சொல்லி விரட்ட வேண்டியிருந்துக்கு. மற்றபடி சுகமான அனுபவம் அது” என்றார்.

சென்னையிலிருக்கும் பத்து கல்லூரியிலிருந்து குறிப்பிட்ட மாணவ மாணவிகளை அழைத்து வந்து பிரத்யேக ஷோ போடும் திட்டத்திலிருக்கிறார் ஸ்ரீதர். நல்ல திட்டம்… வாலில் பற்ற வைத்தால் தலை வரைக்கும் சுடும் என்பதுதான் வியாபார டெக்னிக்! தமிழ் நாட்டிலிருக்கும் மொத்த கல்லூரிகளுக்கும் விஷயம் சென்று சேர இதைவிட சிறந்த திட்டம் வேறென்ன இருக்க முடியும்?

மய்யம் இம்மாதம் 16 ந் தேதி திரைக்கு வருகிறது! ஏடிஎம் ல கொள்ளையடிச்சாவது படத்தை பார்த்துடுங்க!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Sathuran – Official Trailer

https://www.youtube.com/watch?v=1Uh9doR9Lw4

Close