ரொம்ப பயந்துட்டியா கொமாரு? சைக்கிளோடு ஒரு பல்டி

0

‘ஒத்த வெரல காட்டுனா போதும், மொத்த தமிழ்நாடும் சரண்டர்…‘ அப்படியொரு நண்பா நண்பிகள் கூட்டத்தோடு இருக்கிறார் விஜய். ஆனால் டெல்லியிலிருக்கிற அந்த ஒற்றை பாகன் இந்த மொத்த யானைக்கூட்டத்தையும் சிதற விடுறானே, என்ன பண்றது? (என்ன பண்றது? இன்கம்டாக்ஸ் டிபார்ட்மென்ட் அவங்களுதாச்சே?)

நேற்று நடந்த தமிழ்நாடு சட்ட மன்ற தேர்தலும், அங்கு வாக்களிக்க வந்த விஜய்யின் அலப்பறையும் ஆல் இண்டியா அனலைஸ் ஆகிவிட்டதுதான் ஹைலைட். வழக்கமாக தன் படகு காரில் வந்திறங்காமல், கருப்பு சிவப்பு கலரில் வடிவமைக்கப்பட்ட சைக்கிளில் வந்திறங்கினார் விஜய். சைக்கிளின் கலர் மட்டும் பிரச்சனையில்லை. அவர் சைக்கிளில் வந்ததே பிரச்சனை என்று முணுமுணுக்க ஆரம்பித்தது அரசியல் வட்டாரம். ஏன்?

பெட்ரோல் அந்த விலை விக்குது. பார்த்து வோட்டுப் போடுங்க என்று சொல்லாமல் சொல்கிறார் விஜய். அது ஒரு குறியீடு என்றெல்லாம் கொளுத்திப் போட ஆரம்பித்தார்கள் ரசிகர்கள். சோஷியல் மீடியாவில் இதுவே ஒரு விவாதப் பொருளும் ஆனது. ‘பார்றா.. என் தலைவனோட கெத்த‘ என்று விஜய் ரசிகர்கள் ஆர்வத்தோடு கிளம்பி பச்சக் பச்சக் என்று உதய சூரியனுக்கு குத்த ஆரம்பித்தார்கள்.

விவசாயிகள் பிரச்சனை, நீட் பிரச்சனை, மீத்தேன் பிரச்சனை என்று தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சனைக்கெல்லாம் வருஷக்கணக்கில் சவ்வாக இழுக்கும் பிஜேபி மனசு, இந்த பிரச்சனையை மட்டும் இழுவையில் விடுவதாக இல்லை. உடனே கருத்து சொன்னார் குஷ்பு. யாரும் கற்பனையில் அடிச்சு விட வேண்டாம். விஜய் சைக்கிளில் வந்தது தற்செயல்தான் என்றார். பி.ஜே.பி யின் முக்கிய பிரமுகரான வானதி சீனிவாசனும் இது குறித்து பேசினார். அதற்குள் விஜய்க்கே சிலரிடம் இருந்து போன் போனதாகவும், உடனடியாக சைக்கிள் விவகாரம் குறித்து விளக்கமளிக்க கூறியதாகவும் தகவல்.

நாம புடிச்சது சாதாரண மண்ணு பிள்ளையார்தான். ஆனால் அதை உச்சி பிள்ளையார் கோவில் சைசுக்கு பில்டப் பண்றாங்களே என்று அரண்டே போனார் விஜய். உடனடியாக அவரது மக்கள் தொடர்பாளர் ரியாஸ் மூலம் மீடியாக்களுக்கு விளக்கம் கொடுக்க சொன்னார்.

வோட்டு சாவடி இருக்கிற இடம் மிகவும் குறுகலான சந்து என்றும், அங்கு கார் போய் திரும்புவதில் சிக்கல் இருப்பதால் சைக்கிளில் வந்ததாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

விஜய் நினைத்திருந்தால் மோட்டார் பைக்கில் சென்றிருக்க முடியும். ஆனால் சைக்கிளில் வந்ததே சங்கிகளை கதற விடதான். ஆனால், நாலாபுறத்திலிருந்தும் நெருக்கடி வரும் என்று அவரே நினைத்திருக்க மாட்டார். ஆக, நேற்றைய பேசு பொருள் எலக்ஷன் அல்ல… விஜய்யும் அஜீத்தும்தான்.

ஆனாலும் முன் வச்ச காலை, பின் வச்சுட்டீயே கொமாரு?

Leave A Reply

Your email address will not be published.