கல்வீச்சு… கண்ணாடி உடைப்பு… ரவுடிகளால் உறக்கமின்றி தவித்த நடிகர்கள்! விடிய விடிய திக் திக்

0

அநேகமாக தமிழ்சினிமாவின் எல்லா சங்கங்களும் ஏழைரையால் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அதுவும் நடிகர் சங்கத்தில் நேற்று நடந்த அடிதடி, அநாகரீகத்தின் உச்சம்! கல்லெறிந்தது யார்? மண்டை உடைந்தது யாருக்கு? யாருக்கு யாரால் பிரச்சனை? யாருக்கு யார் ஆறுதல் சொல்வது? இப்படி எதுவும் புரியாமல் அல்லாடிக் கொண்டிருந்தார்கள் அத்தனை பேரும். பொதுக்குழு துவங்குவதற்கு முன்பே, உள்ளே வர துடித்துக் கொண்டிருந்த சுமார் 200 பேரும் யாருடைய ஆட்கள் என்று புரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தனர் பொறுப்பாளர்கள்.

ராதாரவி, சரத்குமார், ஜே.கே.ரித்தீஷ், கருணாஸ் ஆட்கள் ஓரிடத்தில் திரண்டதுதான் உச்சக்கட்ட ரகளை!

வெளியே காரை நிறுத்திவிட்டு உள்ளே போன கருணாசுக்கு கொஞ்ச நேரத்திலேயே அந்த டமால் சவுண்ட் கேட்டிருக்கும். அவரது கார் கண்ணாடியை உடைத்துத் தள்ளியது ஒரு கும்பல். போலீஸ் விசாரணையில் ஒருவர் கைது செய்யப்பட்டார். அந்த ஒருவரும் ஜே.கே.ரித்திஷின் ஆதரவாளர் என்கிறது போலீஸ். ரித்திஷ் தரப்பும் கருணாஸ் தரப்பும் மாறி மாறி போலீசில் புகார் கொடுத்திருக்கிறார்கள்.

சங்கத்தின் கூட்டம் உள்ளே நடந்து கொண்டிருக்கும் போதே, வெளியிலிருந்து பறந்து வந்த கல், இரண்டு துணை நடிகர்களின் மண்டையை பதம் பார்த்துவிட்டது. நல்லவேளையாக அவர்களுக்கு உடனே முதலுதவி அளிக்கப்பட்டது. விஷயத்தை பெருசு பண்ணினால் இன்னும் கலவரம் வெடிக்கும் என்பதால், அமைதிகாத்தது விஷால் குரூப்.

ஏற்கனவே எடுத்த முடிவின்படி, சரத்குமார், ராதாரவி இருவரையும் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நிரந்தரமாக நீக்குவதாக தீர்மானம் நிறைவேற்றினார் விஷால். அன்று மாலையே அவரது அலுவலகத்தில் கல் எறியப்பட்டது. வெளியே நின்றிருந்த காரும் நொறுக்கப்பட்டது. இந்த களேபரங்கள் எல்லாம் நடப்பதற்கு முதல் நாள் இரவு, காமெடி நடிகர் மனோபாலாவின் வீட்டிலும் கல் எறிந்தது ஒரு கும்பல். ஏனாம்? செயற்குழு கூட்டத்தில், இவர் ரித்தீஷ் பற்றி எதோ கமென்ட் அடித்தாராம். இப்படி வீட்டு மேலே கல் எறிவது சரத்குமார் கோஷ்டியா, ரித்தீஷ் கோஷ்டியா, ராதாரவி கோஷ்டியா என்றெல்லாம் அறிய முடியாமல் தத்தளித்துப் போனார்கள் சங்கப் பொறுப்பாளர்கள்.

எந்த நேரத்திலும் தங்கள் மீதோ, தங்களது வீட்டின் மீதோ தாக்குதல் நடத்தப்படலாம் என்கிற எச்சரிக்கை உணர்வால் இரவு முழுவதும் உறங்காமலே விழித்திருந்தார்களாம் இவர்கள். போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது அவர்களுக்கு. இப்படி கற்களை வீசித் தாக்குவதற்காகவே வெளியூரிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரவுடிகள் பலர், நேற்றிரவு முழுவதும் ஆயுதங்களுடன் சுற்றி திரிந்தார்கள். ஆனால் எல்லார் வீட்டு முன்பும் போலீஸ் இருந்ததால், திட்டத்தை இன்னொரு நாளைக்கு வைத்துக் கொள்ளலாம் என்று அமைதி காத்து வருவதாக கூறப்படுகிறது.

இவ்வளவையும் மீறிதான் சங்கத்தை வழி நடத்த வேண்டியிருக்கிறது. ஐயோ பாவம் விஷால்!

 

Leave A Reply

Your email address will not be published.