பிரமோஷனுக்கு வராத நடிகர்களுக்கு கொலைகாரன் நிகழ்ச்சியில் கொத்து பரோட்டா!

0

போகிற போக்கை பார்த்தால் ஒன்றுக்கும் உதவாத பிரேம்ஜி, சதீஷ்களெல்லாம் கூட தங்களது பட பிரமோஷன்களை தவிர்க்கிற நிலை வரும் போலிருக்கிறது. இன்றைய டாப் ஹீரோக்கள் பலர் சினிமா பிரமோஷன்களுக்கு வருவதை கவுரவ குறைச்சலாக கருதுகிற அவலம் எப்போது முடியுமோ, அது அவர்களுக்கே வெளிச்சம்.

‘எல்லாம் மிதப்புதான்…’ என்று ஒற்றை வார்த்தையால் கடந்துவிட முடியாது இந்த பிரச்சனையை. தயாரிப்பாளர் சங்கமும், பிலிம் சேம்பர் நிர்வாகிகளும் எங்காவது மைக் கிடைத்தால் இது பற்றி முழங்கிவிட்டு போவது நேற்றும் தொடர்ந்தது! தயாரிப்பாளர் சங்கத்தின் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர் டி.சிவா. அவரும் ‘கொலைகாரன்’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இதுகுறித்து புலம்பினார். (ஆனால் பதவியில் இருக்கும் போது இதையெல்லாம் கவனத்தில் எடுத்துக்க மாட்டேங்குறீங்களே சார்)

‘கொலைகாரன்’ படத்திற்காக ஒரு நாள் முழுக்க ஒதுக்கி டி.வி பேட்டிகள் கொடுத்தாராம் அர்ஜுன். அதுமட்டுமல்ல, இந்த நிகழ்ச்சிக்கு அழைத்தவுடன் வரவும் ஒப்புக் கொண்டாராம். ‘வேறு எந்த முன்னணி ஹீரோக்களும் இந்தளவுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்களா’ என்று மனதார பாராட்டினார் படத்தை வெளியிடும் போஃப்ட்டா தனஞ்செயன்.

இதுபற்றி பேசிய டி.சிவா, “பாலிவுட் ஹீரோக்களெல்லாம் ஊர் ஊரா போய் ஆடிக்கூட பிரமோஷன் பண்றாங்க. ஆனால் இங்குதான் இந்த மாதிரி நிகழ்ச்சிக்கு ஒரு நடிகர் வர்றதையே பெருமையா பேசுற நிலைமை வந்திருக்கு. இது மாறணும். அவங்கவங்க படத்தின் பிரமோஷனுக்கு அந்தந்த படத்தின் ஹீரோக்கள் வரணும்” என்றார் கவலையாக!

இன்னும் எத்தனை நிகழ்ச்சிகளில் இத்தகைய புலம்பல்களை கேட்கப் போகிறமோ… அதுதான் பெரும் கவலை!

அதிருக்கட்டும்… விஜய் ஆன்ட்டனி கொலைகாரனாகவும், அவரை தேடிப்பிடிக்கிற போலீஸ் அதிகாரியாக அர்ஜுனும் நடித்திருக்கிற இந்தப் படத்தை முழுசாக பார்த்துவிட்டு வெளியிட முன் வந்திருக்கிறார் போஃப்டா தனஞ்செயன். படத்தை போட்டுக் காட்டி வியாபாரம் செய்கிற வழக்கம் ஒழிந்து பல வருடங்கள் ஆச்சு. அப்படியிருக்க இப்படியொரு தன்னம்பிக்கை அட்டம்ட்!

இதுலயாவது தேறிடுவீங்களா விஜய் ஆன்ட்டனி?

Leave A Reply

Your email address will not be published.