அட்ரா மச்சான் விசிலு விமர்சனம்

1

‘கட் அவுட்டுக்கு பால் ஊற்றுகிற கலாச்சாரத்துக்கு ஒரு கெட் அவுட் சொல்ல மாட்டீங்களா ராசாக்களா?’ என்று சமூக ஆர்வலர்கள் ரத்தக் கண்ணீர் வடிப்பது இப்போதல்ல…எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே இருக்கிறது. இருந்தாலும் ஒரு ரசிகனின் மனசு, இன்னொரு ரசிகனுக்குதான் தெரியும் என்பதை போல உணர்ந்து உணர்ந்து இப்படத்தை வடித்திருக்கிறார் திரைவாணன். தன்னுடைய தலைவனுக்காக சூடம் கொளுத்துகிற ஒவ்வொரு ரசிகனும், தன் வீட்டு உலையிலிருந்தே தீயை திருடுகிறான் என்பதை சுத்தியலால் அடித்த மாதிரி சுளீர் சுளீரென சொல்லியிருக்கிற விதத்தில், திரைவாணனுக்கு ஒரு கும்பிடு!

கும்பிட்ட அந்த கையை கும்பிட்ட வேகத்தில் இறக்கி வைக்கவும் தூண்டுகிறது படத்தில் இவர் உதாரணத்திற்காக காட்டியிருக்கும் ஒரு நடிகரின் சாயல். சுற்றி வளைப்பானேன்…? படத்தில் பந்தாடுவதற்கு இவரால் கொண்டு வரப்பட்ட பலியாடு, சூப்பர் ஸ்டார் ரஜினியேதான்! ‘பன்னிங்கதான் கூட்டமா வரும். யானை சிங்கிளாதான் வரும்…’ என்று முதல் காட்சியிலேயே ரஜினியின் புகழ்பெற்ற வசனத்தை பேசியபடிதான் அறிமுகம் ஆகிறது பவர்ஸ்டார் சீனிவாசனின் கேரக்டர். அதற்கப்புறம் இவரை ‘வச்சு செய்யும்’ எல்லா காட்சிகளும், ரஜினியின் முந்தைய படங்களின் ஸ்பூப்ப்ப்ப்….(?) குறிப்பாக அந்த முரட்டுக்காளை சீன். ‘வெள்ளம் வந்தப்போ கூட தன்னை வாழ வைத்த மக்களுக்கு பத்து பைசா தரலியே?’ என்கிற வசனம், இப்போதும் ரஜினி குறித்து சமூக வலைதளங்களில் குமுறப்படுகிற விஷயம்தான். (நான் அவரை சொல்லல என்று வேஷ்டியை அவிழ்த்துப் போட்டு தாண்டினாலும், வெள்ளை வெளேர்னு சிரிக்குதே உண்மை?)

பவர்ஸ்டார் சீனியின் அதிதீவிர மதுரை ரசிகர் மன்ற கண்மணிகளான மிர்ச்சி சிவா, சென்ட்ராயன், அருண்பாலாஜி மூவரும், அவருக்காக நாங்க என்னெல்லாம் செய்யுறோம் என்பதை காட்டுவதற்காகவே இன்டர்வெல் வரை இழுக்கிறார்கள். மிடில் கிளாஸ் மாதவன்களான இவர்கள், ரசிகர் மன்ற செலவுக்கு பணம் புரட்ட எப்படியெல்லாம் தவிக்கிறார்கள் என்பது, கதையல்ல… நிஜம்! இவர்கள் போலீசில் சிக்கும்போதெல்லாம், “யேய்… வெட்டியா தலைவன் தலைவன்னு ஊர் சுத்தாதீங்க. யப்பா திருந்துங்கடா” என்று இன்ஸ்பெக்டர் ராஜ்கபூர் மன்றாடுவது, மிக சரியான அப்ரோச். ஒரு கட்டத்தில் அவரது அட்வைசின் பேரில், அங்கே இங்கே புரட்டி பவர் நடித்த படத்தின் மதுரை ஏரியா உரிமையை வாங்கும் இந்த ரசிகர்களுக்கு முதல் ஷோவிலேயே பட்டை நாமம்.

தலைவரை நம்பி படத்தை வாங்குனோம். அவர் நம்மை கைவிட மாட்டார் என்று சென்னைக்கு நம்பிக்கையோடு வருபவர்களுக்கு பவர் சொல்லும் பதிலும் அதில் கலந்திருக்கும் அலட்சியமும், அந்த வெறி பிடித்த ரசிகர்களை திருந்த வைக்கிறது. அதற்கப்புறம் தானும் திருந்தி சில பல அதிரடி சேட்டைகள் மூலம் தலைவனையும் திருத்துவதோடு படம் முடிய, தியேட்டரை விட்டு வெளியே வந்தால்… அங்கு தென்படும் நடிகர்களின் வினைல் போர்டுகள் எல்லாம், பத்த வச்சுட்டியே பரட்டை…என்பது போலவே பார்க்கின்றன. இந்த படத்தை நம்பி பத்து பேரு திருந்துனா கூட நஷ்டம் எங்களுக்கல்லவா என்று அந்த வினைல்கள் அழுவது போலவே பிரம்மை. இதுதான் ‘அட்ரா மச்சான் விசிலு’ படத்தின் நீதிக்கு கிடைத்த வெற்றி.

நடுவில் தன் பள்ளி கால தோழியை கல்யாணம் செய்து கொள்ள சிவா முயல்வது, காதலி வீட்டில் முட்டுக்கட்டை என்று நாலைந்து டூயட்டுகளுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் டைரக்டர். ஆங்காங்கே போர். ஆங்காங்கே ஜோர். அதிலும் மிர்ச்சி சிவாவின் அலட்டிக் கொள்ளாத பாடி லாங்குவேஜ், யுனிவர்சிடியில் விழுந்து விழுந்து பிராக்டீஸ் பண்ணினாலும் யாருக்கும் அமையாத வரம். டான்ஸ் காட்சிகளில், இவருக்கு தோதாகவே நடனம் அமைக்கப்பட்டுள்ளது சிறப்போ சிறப்பு (?)

இவருக்கு காதலியாக நைனா சல்வார். கொழுக் மொழுக் என்று தமிழர்களுக்கு பிடித்த நிறத்திலும், பிடித்த சதையளவுடனும் இருக்கிறார். நடிப்புக்கும் நல்ல மார்க் கொடுத்துவிடலாம்.

நம்ம தலையில ஃபுல் வெயிட் ஏத்திட்டாய்ங்க… நாளைக்கோ மறுநாளோ வீட்ல கல் விழுந்தா நம்ம மண்டையிலதான் தக்காளி சட்னி என்பது புரிந்திருந்தும் அந்த ரோலை ஏற்றுக் கொண்டமைக்காக பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு ‘துணிச்சல் நாயகன்’ என்ற பட்டத்தை தாராளமாக வழங்கலாம். அதே நேரம், “நடிப்பா… அது கிராம் என்ன விலை?” என்று கேட்கிறார் மனுஷன்.

படம் தோல்வியடைந்ததும், எல்லா பழியையும் டைரக்டர் மேல்தானே போடுவார்கள்? “எங்கடா என்னை டைரக்ட் பண்ண விட்டீங்க? நான் சொன்ன ஒரு சீனாவது படத்துல இருந்திச்சா” என்று குமுறும் வேல்முருகன் கேரக்டர், கோடம்பாக்கத்தின் ஹீரோ டைரக்டர் சுதந்திரத்தை புட்டு புட்டு வைக்கிறது.

இனிமேல் ஆம்புலன்ஸ் ஏதாவது கிராஸ் பண்ணினால், உள்ளே அந்த ஹீரோவின் பணம் இருக்குமோ, இந்த ஹீரோவின் பணம் இருக்குமோ என்று எண்ண வைத்துவிட்டது அந்த ஆம்புலன்ஸ் மேட்டர். பவருக்கு மேனேஜராக நடித்திருக்கும் சிங்கமுத்து, கொஞ்சம் நாய்ஸ் பொல்யூஷனை குறைத்திருக்கலாம். இருந்தாலும், அரைகுறை மயக்கத்துடன் அவர் ஆஸ்பிடலில் கிடப்பதும் கண்ணெதிரிலேயே மனைவி மதுமிதா கொடுக்கும் மரியாதையை கண்டு அவர் கொடுக்கும் ரீயாக்ஷனும் எக்சலென்ட். ஹீரோவை மட்டுமல்ல, ஆர்ட்டிஸ்ட் மேனேஜர் யூனியனும் இந்நேரம் நறநற ஆகியிருக்கும் சிங்கமுத்துவின் கேரக்டர் கண்டு!

பாடல்களில் அப்படியே கரைந்து போக வைக்கிறார் ரகுநந்தன். குறிப்பாக அந்த கடலோர பாடலில் கோரியோகிராப் செம அழகு. டான்ஸ் மாஸ்டர் சாந்தியை வெகு நாட்களுக்கு பிறகு திரையில் பார்க்க முடிகிறது. வரிகளுக்கு ஏற்ற அபிநயத்துடன் அசத்தி விட்டார் அசத்தி.

சுயநல ஹீரோவையும், வெட்டி ரசிகர்களையும் காட்டி புத்திமதி சொன்னதற்காக ஒரு சபாஷ். அது மண்டையில ஏறுச்சா என்பதை காட்டுவதற்காக மறுபடி ஒரு படம் எடுப்பீங்களோ?

விசிலு சப்தம் இன்னும் கொஞ்சம் பலமா கேட்டிருக்கலாம்!

-ஆர்.எஸ்.அந்தணன்

1 Comment
  1. gap says

    Neengalum hero thaan. thoosi thatinal AMV

Leave A Reply

Your email address will not be published.