ஏ.எம்.ரத்னம் வீட்டில் துக்கம்! போனில் கூட விசாரிக்காத அஜீத்?

0

‘தனியொருவன்’ என்ற தலைப்புக்கு மிக சரியாக பொருந்தக்கூடிய ஒரே ஸ்டார் அஜீத் மட்டும்தான்! தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தே பழகிவிட்டாரா, அல்லது பழக்கப்படுத்திவிட்டாரா என்பது அவருக்கே வெளிச்சம். அவர் உறுப்பினாராக இருக்கும் நடிகர் சங்க தேர்தலுக்கே ஓட்டுப் போட வரவில்லை அவர். அதற்கான சரியான காரணம் இன்று வரை யாருக்கும் தெரியவும் இல்லை. “பெரிய ஹீரோவாச்சே… ஏன் சார் வரலே” என்று கேட்கிற திராணியும் நடிகர் சங்கத்திற்கு இல்லை.

இதெல்லாம் கூட பிரச்சனையில்லை. நாளைக்கு மாறலாம். அல்லது மாறாமலும் போகலாம். ஆனால் தன்னை வைத்து மூன்று படங்களை தயாரித்த ஒரு தயாரிப்பாளரின் வீட்டில் துக்கம் என்றால், “என்னாச்சு சார்?” என்றோ, “சீக்கிரம் இந்த துயரத்திலிருந்து நீங்க மீண்டு வருவீங்க” என்றோ, ஒரு வார்த்தை பேசலாமல்லவா? அங்குதான் ஈகோவுக்கு ஈசி சேர் போட்டு உட்கார வைத்து விட்டாரோ என்று அஞ்ச வைத்திருக்கிறார் அஜீத்.

வேறொன்றுமில்லை, கடந்த சில வாரங்களுக்கு முன் பிரபல தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தின் அப்பா ஆந்திராவில் காலமாகிவிட்டார். 90 வயதை கடந்தவர் என்பதாலும், துக்கத்தில் கலந்து கொள்ள நினைத்தாலும் ஆந்திரா வரைக்கும் வர வேண்டியிருக்குமே என்பதாலும், நெருக்கமானவர்களை தவிர வேறு யாருக்கும் சொல்லவில்லை ஏ.எம்.ரத்னம். அந்த நெருக்கமானவர் லிஸ்ட்டில் அஜீத்தும் இருந்ததால் அவரது காதுக்கு செல்லும்படி விஷயத்தை தெரிவித்துவிட்டு ஆந்திராவுக்கு கிளம்பிவிட்டாராம். மகன் செய்ய வேண்டிய எல்லா கடமைகளையும் முடித்துவிட்டு அவர் சென்னை திரும்பி இத்தனை நாளாகிவிட்டது. ஆனால் அஜீத்தோ, வேறு யாருமோ கூட அவரிடம் துக்கம் விசாரிக்கவில்லையாம். மிக சமீபத்தில் அவருடன் இணைந்து படம் பண்ணிய அஜீத், நேரில் போயிருக்க வேண்டாமா? என்ற குரல்கள் கேட்க ஆரம்பித்திருக்கிறது கோடம்பாக்கத்தில்.

அவ்வளவு பெரிய தயாரிப்பாளரான ஏ.எம்.ரத்னம் இதற்கு முன் அஜீத்தை மட்டுமல்ல, ஷங்கர், விஜய், விக்ரம், என்று ஏராளமான டாப் கிளாஸ் திரையுலகத்தினருடன் பயணம் செய்திருக்கிறார். ஒருவர் கூட அவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவில்லை என்பதை நினைத்தால், ‘காயமே இது பொய்யடா’ என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா?

Leave A Reply

Your email address will not be published.