“ தூங்க விடுங்களேன்ப்பா ” கருத்து சொன்ன தயாரிப்பாளரை கதற விட்ட அஜீத் பேன்ஸ்!

0

ஒண்ணுக்கு வந்தாலே உச்சி ராத்திரியா இருக்கே… என்று ‘அடக்கி’க் கொண்டு படுத்திருக்கும் அநேகம் பேருக்கு, நள்ளிரவு ‘பனிரெண்டு ஒன்னுக்கு’ வெளியிடப்பட்ட விவேகம் ட்ரெய்லர் குறித்து என்ன கவலை இருக்கப் போகிறது? இப்படி நினைத்தால், அங்குதான் மண்டை காய்கிறது. அந்த பனிரெண்டு ஒன்னுக்கும் விழித்திருந்து ட்ரெய்லரை ட்ரென்டிங்கில் கொண்டு வந்தார்கள் ரசிகர்கள். போட்ட அடுத்த நிமிஷமே அது பல ஆயிரங்களை கிராஸ் பண்ணிவிட்டதாக கூறுகிறது இன்டஸ்ட்ரி. தற்போதையக் கணக்குப்படி பல லட்சங்களை தாண்டிவிட்டது.

ஆனால் “இந்த ட்ரெய்லரை காலையில் வெளியிட்டா என்னவாம்? ராத்திரி 12 மணி வரைக்கும் வெயிட் பண்ணி பார்க்கணுமா?” என்று தனது கருத்தை இதே ட்விட்டரில் வெளியிட்டிருந்தார் தயாரிப்பாளர் தனஞ்செயன். அண்மையில் வெளிவந்த வனமகன், இவன் தந்திரன் படங்களெல்லாம் தனஞ்செயனின் ரிலீஸ்தான். இது தவிர ஏராளமான படங்களை தயாரித்திருக்கிறது தனஞ்செயன் தலைமையிலான நிறுவனங்கள்.

கருத்து கந்தசாமிகள் யாராக இருந்தாலும், அவர்களை பிரித்து மேய்கிற ரசிகர்கள் தனஞ்செயனை மட்டும் விட்டுவிடுவார்களா என்ன? பிலுபிலுவென பிடித்துக் கொண்டார்கள். வனமகன் படத்திற்காக நள்ளிரவு 12 மணிக்கு ட்ரெய்லரை ரிலீஸ் பண்ணியதையும், அந்த அறிவிப்பை தனஞ்செயன் ட்விட் பண்ணியதையும் தேடி எடுத்து வைத்துக் கொண்டு திரும்ப திரும்ப தாளித்தார்கள்.

சூப்பர் மார்க்கெட்டுன்னு நினைச்சு, சுடுகாட்டு கதவ தட்டிட்டோமோ? ஆந்தைகள் சவுண்டு ஓவராயிருக்கே? என்று அரண்டு போய் ‘அலேக்’ ஆகிவிட்டார் தனஞ்செயன்.

Leave A Reply

Your email address will not be published.