உள் குத்து மீது விழுந்த ஊமை குத்து! ஆல் ரூட் கிளியர்! அத்தனை புகழும் விஷாலுக்கே!

0

அறம், அருவியை தொடர்ந்து தமிழ்சினிமாவின் அடுத்த பரபரப்பு ‘உள் குத்து’ படமாகதான் இருக்கும் என்கிறார்கள் இங்கே! முதல் இரண்டும் கமர்ஷியல் படமல்ல. ஆனால் கமர்ஷியலாகவும் ஹிட். ஆனால் இந்த ‘உள்குத்து’ கமர்ஷியல் படமும் கூட என்று அடிஷனல் ‘பிட்’ விழுகிறது. ‘இப்படிதான்யா போறப் போக்குல ஊரை உசுப்பிட்டு போயிருவானுங்க. படம் வந்த பின்புதான் தெரியும் லட்சணம்…’ என்று முகவாயில் இடிக்கிற கோஷ்டிகளுக்காகதான் பின் வரும் தகவல்!

‘திருடன் போலீஸ்’ என்ற சூப்பர் படத்தை இயக்கிய கார்த்திக் ராஜுவின் இரண்டாவது படம்தான் இது. ஒரே நேரத்தில் பல படங்களை தயாரித்த கெனன்யா பிலிம்சின் கடன் பிடிக்குள் ‘உள் குத்து’ சிக்கிக் கொண்டது காலத்தின் அலங்கோலம். அந்த நேரத்தில் இந்தப்படத்தை பார்த்த ஜி.விட்டல் குமார் என்பவர், ‘அடடா… இவ்வளவு நல்லப்படம் முடங்கிவிடக் கூடாதே’ என்று தானே முன் வந்து படத்தை வெளியிட நினைத்தால்…? வரிசையாக வந்தன பாம்பும் தேளும்! எனக்கு இவ்ளோ பாக்கி, அவ்ளோ பாக்கி… என்று கடன் காரர்கள் வரிசை கட்டி நிற்க, சற்றே மிரண்டுதான் போனார். உள் குத்து மேல இவ்வளவு ஊமைக் குத்தா? என்று கதி கலங்கிப் போயிருக்கிறார்.

நடுவில் இந்தப்படம் பற்றி கேள்விப்பட்ட உதயநிதி ஸ்டாலின், நாமே வெளியிடலாம் என்ற முடிவில் படத்தை பார்த்தாராம். ‘படம் செமையா இருக்கு. ஆனால் அதுக்கும் மேல பஞ்சாயத்தும் இழுபறியும் இருக்கும் போலிருக்கே? வேணும்னா படத்து மேல இருக்கிற பஞ்சாயத்தையெல்லாம் முடிச்சுட்டு என்.ஓ.சி வாங்கிட்டு வாங்க. என்ன விலையோ? கொடுத்துட்டு நானே படத்தை வெளியிடுறேன்’ என்று சொல்ல, இதென்ன அரக்கனை எழுப்பி அமிர்தாஞ்சன் தடவச் சொல்றாரே… என்று மேலும் மிரண்டது உள் குத்து டீம்.

கடைசியாக விட்டல் குமார் சரண் அடைந்தது தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷாலிடம். பொறுமையாக எல்லாவற்றையும் கேட்ட விஷால், கடந்த மூன்று மாதங்களாக ஒவ்வொரு கடன் காரர்களாக அழைத்துப் பேசி, அடைப்புகளை சரி செய்து பிரச்சனைகளை பேக்கப் பண்ணிவிட்டார். ரூட் கிளியர். படம் இம்மாதம் 29 திட்டமிட்டபடி துளி சிராய்ப்பும் இல்லாமல் வெளியாகிறது. இந்த வெளியீட்டை முன்னின்று நடத்தும் பொறுப்பை தயாரிப்பாளர் சங்கம் ஏற்றுக் கொள்ளும் என்று உத்தரவாதம் கொடுத்திருக்கிறாராம் விஷால்.

‘மனசார விஷால் சாருக்குதான் நன்றி சொல்லணும்’ என்று கையெடுத்து கும்பிடுகிறார் விட்டல்!

சுபமஸ்து….!

Leave A Reply

Your email address will not be published.