சிங்கம், ஏழாம் அறிவை விட கலெக்ஷன் அதிகம்! லிங்குசாமியின் ‘அஞ்சான்’ விளக்கம்!

‘அஞ்சான்’ பத்திரிகையாளர் ஷோவுக்கு வந்திருந்தார்கள் சூர்யாவும் லிங்குசாமியும்! படம் வெளியான நேரத்திலிருந்தே அஞ்சான் பற்றி சமூக வலை தளங்களில் வந்த விமர்சனங்கள் எதிலும் அகிம்சை இல்லை. இவருக்கு அவர் போட்டி, அவருக்கு இவர் போட்டி. யார் வளர்ந்தாலும், இன்னொரு காலை பிடித்து இழுக்க இங்கே அடாத போட்டி. இதில் சூர்யாவும் சிக்கி கொண்டதாக அவரது ரசிகர்கள் புலம்ப, ஒருத்தருடைய உணர்வையும் மதிப்பதாக இல்லை கல்லெறிவோர் குரூப். இந்த நிலையில்தான் பேஸ்புக், ட்விட்டர் விமர்சனங்கள் பற்றி மனதார பொங்கினார்கள் இருவரும்.

அதிலும் லிங்குசாமிதான் ஆத்திரத்தின் உச்சத்திலிருந்தார். ‘இதை சொல்லலாம்னு நினைச்சு வரல. ஆனா சொல்லணும்னு தோணுச்சு. பேஸ்புக் ட்விட்டர்ல வேணும்னு ஒரு குரூப் எழுதுது. படம் பார்த்துட்டு விமர்சனம் பண்ணினா கூட பரவாயில்ல. படம் ரிலீஸ் ஆவறதுக்கு அரை மணி நேரத்துக்கு முன்னாடியே அஞ்சான் பற்றி தவறான விமர்சனம் வருதுன்னா அதை என்னன்னு சொல்றது?’ என்றார். வேதனையோடு. கூடவே அவர் சொன்ன ஆதாரங்களை நம்பிதான் ஆக வேண்டும். ஏனென்றால் அவர் சொன்னது பொத்தாம் பொதுவான ரிப்போர்ட் அல்ல. சம்பந்தப்பட்ட  படங்களின் பெயரையும்  சொல்லுவதால் அதில் உண்மையின் சதவீதம் அதிகமாகவே இருக்கலாம்.

உதாரணத்திற்கு கோவை ஏரியாவை எடுத்துக்கங்க. ஹரி சார் இயக்கிய சிங்கம் படத்தின் கலெக்ஷனை விட அஞ்சானுக்கு அதிகம். அதே போல முருகதாஸ் இயக்கிய ஏழாம் அறிவு படத்தை விடவும் கலெக்ஷன் அதிகம். தியேட்டருக்கு போனால், சூர்யா ரசிகர்கள் ஆவலா வந்து கையை பிடிச்சிக்கிறாங்க. பெண்களும், தாய்மார்களும் பாராட்டுறாங்க என்றார் அடுக்கடுக்காக. பக்கத்திலேயே நின்று கொண்டிருந்த சூர்யா பேச்சில் லேசாக வருத்தம் இழையோடியது.

விமர்சனங்களை ஏத்துக்கிறவன்தான் நான். ஆனால் அது ஒருவருடைய வளர்ச்சியில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிற அளவுக்கு அது இருக்கக் கூடாது. நான் போகும் பாதையில் முள்ளை போடுறாங்க என்றார் கவலையோடு. இந்த படம் பற்றி தனது பேஸ்புக் பக்கத்தில் கிண்டலாக விமர்சித்திருந்த சூது கவ்வும் இயக்குனர் நலன் குமாரசாமி பற்றி கேள்வி எழுப்பட்டபோது, இல்லைங்க… நான் அவரை கூப்பிட்டு பேசிட்டேன். அந்த பிராப்ளம் சால்வ் ஆகிருச்சு என்றார் சூர்யா, அந்த கேள்வியை மேற்கொண்டு வளர்க்க விரும்பாமல்!

இதெல்லாம் ஒரு புறம் இருக்க, அஞ்சான் மூன்றே நாளில் முப்பது கோடி வசூல் என்கிறது தியேட்டர் வட்டார தகவல்கள்!

அப்புறம் சமூக வலைதளங்கள் சட்டிப்பானையை உருட்டினால் என்ன, சாம்பலை பூசிக் கொண்டால்தான் என்னவாம்? அடிச்சு பின்னுங்க அஞ்சான்ஸ்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அஞ்சான்- விமர்சனம்

‘அண்டர் வேல்டு’ கதைகளில் எல்லாம் ஒரு அண்டர் ‘ஓல்டு’ தத்துவம் இருக்கும்! அது...? ‘துரோகிக்கு மருந்து, தொண்டைக்குழியில துப்பாக்கிதான்’ இந்த படத்திலும் அப்படி சில துரோகிகளை பந்தாட...

Close