அமைதிப்படை ரிப்பீட்டா அண்ணனுக்கு ஜே?

0

‘அமைதிப்படை’ படத்திற்கு அப்புறம், அரசியல் நையாண்டி படங்கள் அந்தளவுக்கு கவனம் பெற்றிருக்கிறதா? ‘இல்லைங்க’ என்று ஏக்கமாக சொல்கிறவர்கள் ‘அண்ணனுக்கு ஜே’ படத்திற்காக காத்திருக்கலாம். (அட… இந்தப்படத்தின் டைரக்டர் ராஜ்குமாரே நாலு வருஷமா காத்துக்கிடக்காருப்பா… அது வேற விஷயம்)

வெற்றிமாறன் தயாரிப்பில் அட்டக்கத்தி தினேஷ், மகிமா நம்பியார் நடித்திருக்கும் இப்படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்திருக்கிறார் ராதாரவி. ராஜ்குமார் இயக்கிய ஒரு குறும்படத்தை வெற்றிமாறன் கவனித்து பாராட்ட, அன்றிலிருந்தே இவரது அசிஸ்டென்ட்டுகளில் ஒருவராகிவிட்டார் ராஜ். ஒருநாள் இந்தக்கதையை வெற்றிமாறனிடம் சொல்லி, “இதை படமா எடுத்தா நல்லா வரும்” என்று சொல்ல… “ஆமாம் தம்பி. வேலையை ஸ்டார்ட் பண்ணு” என்று அட்வான்ஸ் கொடுத்து ஆரம்பித்தும் வைத்துவிட்டார் வெற்றிமாறன்.

மெல்ல மெல்ல படம் வளர்ந்து முடிக்கும்போது நாலு வருடத்தை முழுங்கிவிட்டது. இரண்டு பிள்ளைகளுக்கு அப்பாவான ராஜ்குமாருக்கு காதல் திருமணம். மனைவியிடம், “நான் டைரக்ட் பண்ணிய படத்தைதான் நாம சேர்ந்து பார்க்கணும். அதுவரைக்கும் வேற படங்களை பார்க்கவே கூடாது” என்று சொல்லப் போக, இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்பும் காத்திருக்கிறார் திருமதி ராஜ்குமார். அந்த நாள் நெருங்கிக் கொண்டே இருப்பதுதான் ஆறுதல்.

தினேஷ் நடிக்கிற படமெல்லாம் ஒரு தினுசாதான் இருக்கு. அவரும் வதவதன்னு படங்களை ஒப்புக்கறதில்ல என்கிற விமர்சனத்தையெல்லாம் தாங்கிக் கொண்டு, அதே வலுவுடன் இருக்கிறார் தினேஷ். படத்திற்காக கொஞ்சம் சதையும் போட்டிருக்கிறார். இந்தப்படத்தின் பிரஸ்மீட்டில், “அரசியலுக்கு வருவீங்களா?” என்று ஒரு கேள்வி விழ… “ஏன் வரலாமே? அதுக்கென்ன. வருவேன்” என்றார் கான்பிடன்ட்டாக!

நடிகர் திலகம் ரஞ்சித்தே (?) பா.ம.க வில் இணைந்துவிட்ட பிறகு, யாரு அரசியலுக்கு வந்தாலென்ன? வாங்க தினேஷ். மந்திரி பதவி மாடி மேல காயுது. ஈரம் உலரட்டும். எடுத்து உடுத்திக்கலாம்!

Leave A Reply

Your email address will not be published.