இதுக்கு எருமை மாட்டை வச்சு படம் எடுத்துருக்கலாம்! ஆர்யாவின் கட முடா கடம்பன்!

0

ஒரு கேக்ரடருக்காக தன்னை அர்ப்பணிக்கிற விஷயத்தில், ஆர்யாவை இன்னொரு கமல் என்றால் அந்த கமல்ஹாசனே விசனப்பட மாட்டார். இந்த மனப்பாடத்தை ஆர்யாவுக்கு ஊட்டியவர் நான் கடவுள் பாலா என்றால், அதற்கப்புறம் வந்த பல இயக்குனர்கள் ஆர்யாவின் எலும்பையும் சதையையும் இஷ்டத்துக்கு ஆட்டி வைக்க ஆரம்பித்துவிட்டார்கள். தற்போதைய ரிங் மாஸ்டர் மஞ்சப்பை வெற்றிப்பட இயக்குனர் ராகவா. ஆர்.பி.சவுத்ரி தயாரித்திருக்கும் இந்தப்படம், இம்மாத இறுதியில் திரைக்கு வருகிறது.

படம் குறித்து ஆர்யா பேச ஆரம்பிக்கிறார். இன்னும் மூன்று மணி நேரம் பேசினால் கூட கேட்டுக் கொண்டேயிருக்கலாம் போல சுவாரஸ்யம் கொட்டுகிறது அந்த பேச்சில்.

கதையா சொல்லும்போதே நான் பாதி பிரமிச்சுப் போயிட்டேன். ஔவையார் படத்திற்கு பிறகு க்ளைமாக்சில் எழுபது யானைகள் வர்றது இந்தப்படத்தில்தான். ஒரே நேரத்தில் எழுபது யானைக்கு எங்க போறது? அதுக்காக தாய்லாந்து கிளம்பிப் போயிட்டோம். அங்கு யானைகள் கூட்டு முகாம்னு இருக்கு. அங்கே போய் எங்களுக்கு புடிச்ச யானைகளை செலக்ட் பண்ணிட்டோம். அப்புறம்தான் விசாரிச்சோம். ஒவ்வொரு யானைக்கும் வாடகை ஒன்றரை லட்சத்திற்கும் மேல. அதுங்களுக்கு சாப்பாட்டு செலவு தனி. இப்படி 12 நாள் எழுபது யானையை வச்சு ஷுட்டிங் பண்ணினோம். தயாரிப்பாளர் சவுத்ரி சார்தான் நொந்துட்டார்.

ஏன்யா… இந்த கதையை எருமை மாடுகளை வச்சு இங்கேயே எடுத்துருக்கக் கூடாதான்னு சிரிச்சுகிட்டே கேட்டார் என்று சொல்லிவிட்டு ஆர்யா சிரிக்க, அதைவிட பலமாக சிரித்தார் ஆர்.பி.சவுத்ரி.

பாகுபலி ரேஞ்சுக்கு கிராபிக்ஸ் செலவு பண்ணலேன்னாலும், நிறைய செலவு பண்ணியிருக்கோம் என்ற ஆர்யா, ஒரே ஒரு விஷயத்திற்காக அச்சப்பட்டாராம். அந்த யானைகள் கூட்டத்தின் நடுவில் பைட் சீன். யானைங்க கால்ல பூந்து பூந்து வாங்கன்னு சொல்றார் டைரக்டர். எனக்கு உயிரே இல்ல. நல்லவேளை… சமர்த்து யானைங்க. ஒரு பிரச்சனையும் தராமல் எங்களை உயிரோட அனுப்பி வச்சுது என்று ஆர்யா முடிக்கும் போது, அவர் பட்ட அவஸ்தையெல்லாம் அந்த மூச்சு வழியாக வெளியேறியதை உணர முடிந்தது.

ஐயோ பாவம்… இந்த யானை டென்ஷனில் படத்தின் ஹீரோயின் கேத்ரீன் தெரசாகிட்ட கூட நிம்மதியா கடல போட முடியல என்று ஆர்யா கவலைப்பட்டதை எங்கு போய் சொல்ல?

Leave A Reply

Your email address will not be published.