பைரவா விமர்சனம்

ஒன் மேன் ஆசாமிக்கும் பவர்புல் பீரங்கிக்கும் நடக்கிற ஃபைட்டில், யாருக்கு வெற்றி? இதுதான் பைரவா! செய்தித் தாளை திறந்தால் பதினாறு பக்கத்திலும் பதினாறு பிரச்சனைகள் இடம்பெற்றிருக்கும். முதல் பக்கத்தில் வந்த தண்ணீர் பிரச்சனையை ‘கத்தி’ படத்தில் டீல் பண்ணிய விஜய், இந்தமுறை ரெண்டாம் பக்கத்தில் வந்த கல்வி பிரச்சனையை டீல் பண்ணியிருக்கிறார். மூன்று மாநிலமும் விரும்பும் ஹீரோ ஆகிவிட்ட பின், மாநிலத்திற்கொன்றாக சீன் வைப்பதுதான் கடினம். அதை மிக எளிதாக கையாண்டிருக்கிறார் இயக்குனர் பரதன். ஆக்ஷன் அடிதடியில் ஆந்திராவின் காரம் தெரிகிறதென்றால், சென்ட்டிமென்ட்டில் முங்குவதற்கென்றே ஒரு சேச்சி மாணவி வருகிறார்.

இப்படி கலந்து கட்டிய கமர்ஷியல் கூட்டுப் பொரியலில் விஜய்யின் காரம் மணம் தூக்கல். இவற்றுடன் ‘உப்பு’ பெறாத சதீஷை வைத்துக் கொண்டு காமெடி பண்ணவும் துணிந்த பரதனுக்கு ஒரு பலத்த எதிர்ப்பை விஜய் ரசிகர்கள் சார்பில் தெரிவித்துவிட்டு விமர்சனத்திற்குள் நுழையலாம்.

வர்லாம் வர்லாம் வா… வர்லாம் வர்லாம் வா…! இரண்டே முக்கால் மணி நேர படத்தில் கண் அசருகிற நேரத்திலெல்லாம் இந்த தீம் ஸாங்கை ஓட விட்டு, படீரென மூளைக்குள் தண்ணீர் பீய்ச்சுகிற அந்த டெக்னிக்குக்கே தனி வணக்கம். பைரவாவுக்கு கொடுத்த பணம், இந்த தீம் சாங்குக்கே போதும் என்றாகிவிட்ட பின், மற்றதெல்லாம் எக்ஸ்ட்ரா லக்கேஜ்!

தனியார் வங்கியில் கலெக்ஷன் ஏஜென்ட் வேலை பார்க்கும் விஜய், பேங்க் மேனேஜர் ஒய்.ஜி.மகேந்திரனுக்காக ஒரு ரவுடியை அடித்து துவைத்து பணத்தை வசூல் பண்ணிக் கொடுக்கிறார். அதே மேனேஜர் வீட்டுக் கல்யாணத்திற்கு போகும் விஜய் அங்கு கீர்த்தி சுரேஷை சந்திக்க, மேற்படி கல்யாண களேபரம் முடிவதற்குள் காதல் வருகிறது இவருக்கு. பொக்கேவுடன் காதலை சொல்லப் போனால், ஒரு ரவுடிக்கும்பல் கீர்த்தியை கொல்ல முயல்கிறது. பின்னாலேயே விரட்டும் விஜய் ரவுடிகளை புரட்டி புரட்டி பொங்கல் வைத்துவிட்டு கீர்த்தி சுரேஷிடம் பிளாஷ்பேக் கேட்டால், ரத்தம் வழிய வழிய ஒரு ரணகளம். அப்புறமென்ன? கல்வித்தந்தை ஜெகபதிபாபுவிடமிருந்து கீர்த்தியை காப்பாற்ற திருநெல்வேலிக்கே ட்ரிப் அடிக்கிறார். செகன்ட் ஆஃப் முழுக்க திருநெல்வேலியும் ரத்தம் தெறிக்கும் ஆக்ஷனும்தான்.

அவ்வளவு ரணகளத்தையும் விளையாட்டாக எடுத்துக் கொண்டு பிரித்து மேயும் விஜய்யை திகட்ட திகட்ட ரசித்தாலும், சற்றே இழுத்து இழுத்துப் பேசும் அந்த ஸ்டைல் மட்டும் ரொம்ப இடிக்குது சாரே… விஜய்க்கான ஓப்பனிங் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என்றாலும், அதை தொடர்ந்து உடனே வரும் அந்த பைட்டும், உலகத்திலிருக்கிற அத்தனை கிரிக்கெட் ஸ்டாரோடும் அவரை இணைத்து புகழும் அந்த கற்பனையும் விஜய் ரசிகர்களை வாய் பிளக்க வைக்கும். திருநெல்வேலி சாலையில் விஜய்யை விரட்டி விரட்டி வெற்றுடம்பு மேல் வீசும் பெட்ரோல் பாக்கெட் பைட், படு பயங்கரம். படு சீரியஸ் ஆன சீன் அது. அவர் மீது சின்ன பரிதாபம் கூட வந்துவிடுகிறது. திருநெல்வேலிக்கு என்ட்ரி கொடுத்து வில்லனிடம் கறுப்புப்பண வேட்டையாடும் அந்த இன்கம்டாக்ஸ் எபிசோட் செம விறுவிறுப்பு.

நீதிமன்றத்தில் விஜய் பேசும் அந்த சீரியசான ஸ்பீச்சை அப்படியே நறுக்கி சமூக வலைதளங்களில் வெளியிட்டால், அப்படியே பற்றிக் கொள்ளும். அந்தளவுக்கு சூடு! வசனம் எழுதிய விரல்களுக்கு விஜய் தங்க மோதிரம் அணிவிக்கலாம்.

விஜய்க்கு இந்த நேரத்தில் ஒரு அட்வைஸ். உங்களுக்கு வகை தொகையான காமெடியன்கள் மட்டுமே போதும் என்று நினைத்து சதீஷை வாழ வைத்தால், ரசிகர்களை நோக வைத்த பாவத்திற்கு ஆளாவீர்கள். ப்ளீஸ்… இனிமேலாவது சூரி, யோகிபாபு, வடிவேலு, சந்தானம் என்று தோஸ்த்தை மாற்றுங்க!

வெறும் பொம்மை போல வருவதோடு ஹீரோயினின் கடமை முடிந்தது என்று நினைக்காமல், கீர்த்தி சுரேஷை ஆங்காங்கே அழ வைத்து நடிப்புக்கும் ஸ்கோப் கொடுத்திருக்கிறார் பரதன். செம க்யூட் கீர்த்தியும் லவ்வுக்கு லவ். அழுகைக்கு அழுகை என்று நடிப்பு கல்வெட்டில் தன் அடையாளத்தை பதிக்கிறார்.

கசாப்பு கடையிலிருந்து கல்வித் தந்தை வரைக்கும் விஸ்வரூபம் எடுக்கும் ஜெகபதிபாபு, கடைசிவரைக்கும் தன் கோரத் தாக்குதலை நிரூபித்துக் கொண்டேயிருக்கிறார். பிரதமரின் பாதுகாப்புக்கும் இவருக்கும் முடிச்சுப் போட்டு கோர்த்து வாங்கும் அந்த கிளைமாக்ஸ் சீனும் அதிலிருந்து விஜய் தப்பிப்பதும் காதுல பூ ரகமாக இருந்தாலும், சண்டைப்பிரியர்களுக்கு ஆஹா ஓஹோ.

‘வர்லாம் வர்லாம் வா’ தவிர, படத்தில் உருப்படியான பாடல்கள் ஒன்று கூட இல்லை. பின்னணி இசையும் படு மோசம். விஜய் கூட்டணியிலிருந்து உடனே கழற்றப்பட வேண்டியவர் சந்தோஷ் நாராயணன்தான்! சுகுமாரின் ஒளிப்பதிவு சுவிட்சர்லாந்தில் காதல் குளிரையும், திருநெல்வேலியில் ஆக்ஷன் நெருப்பையும் தியேட்டருக்குள் பரவ விட்டிருக்கிறது.

படத்தின் நீளத்தை குறைந்தது அரை மணி நேரமாவது குறைத்திருந்தால், ‘போலாம் போலாம் வா…’ என்று தியேட்டருக்கு வெளியே இழுத்திருக்காது மனசு!

-ஆர்.எஸ்.அந்தணன்

 

3 Comments
  1. பைரவா says

    படம் படு போர். ஒரு தடவை கூட பார்க்க தகுதி அற்ற படம்.
    மேலும் மக்களின் கவனமும் ஜல்லிக்கட்டு மீது தான். அதனால் தான் ஜல்லிக்கட்டு விவகாரம் கடந்த ஒரு வாரகாலமாக தமிழ்நாட்டில் அணைத்து இடங்களிலும் பற்றி இருக்கிறது. இப்ப தான் படத்தின் கதாநாயகன், ஜல்லிக்கட்டு பற்றி வாயை திறந்து இருக்கிறான். இதிலிருந்தே படம் வசூலில் தோலிவியடைந்து விட்டது என தெரியவருகிறது. மேலும், நான்கு நாட்களில் 100 கோடி வசூல் என்பது கருப்பை வெள்ளையாகும் முயற்சி தான்.

  2. அறிவுமதி says

    பைரவா தமிழகத்தில் திரையிட்ட அனைத்து திரையரங்கில் படத்தை தூக்கி விட்டார்கள். படம் மாபெரும் படுதோல்வி படம். தமிழக மக்களின் கவனம் எண்ணம் எல்லாம் ஜல்லிக்கட்டு மேல் உள்ளதால் மக்களின் கவனத்தை ஈர்க்க படம் தவறி விட்டது. விஜய்க்கு பலத்த அடி. இனி சினிமாக்காரன் அனைவர்க்கும் இது தான் பதில்.
    தமிழர்கள் ஒற்றுமை ஓங்குக.

  3. SIVA says

    பைரவா படம் படுதோல்வி. படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்கள் தகவல். தேறி அளவிற்கு கூட வசூல் புரியவில்லை.

Reply To SIVA
Cancel Reply

Your email address will not be published.

Read previous post:
“I DON’T CARE!!” Arya Reply To Jallikattu Supporters.

https://youtu.be/Ts99uYLJiuU

Close