பாரதிராஜாவின் பதிமூணு நாள் பரவசம்!

0

“ஆய்த எழுத்து படத்தில் நீங்கதான் நடிக்கணும்” என்று தோளில் கைபோட்டு இழுத்து வந்தார் மணிரத்னம். அவர் மீதிருந்த மரியாதை காரணமாக ஸ்கிரீனுக்கு பின்னாலிருந்த பாரதிராஜா தயக்கமிருந்தாலும், தைரியமாக முன்னால் வந்தார். அதற்கப்புறம் நடித்த ‘ரெட்டச்சுழி’யை இமயம் எரேஸ் பண்ணிவிட்டது. (உள் அரசியல் நமக்கெதுக்கு?)

மிக நீண்ட இடைவெளிக்கு பின், பாரதிராஜா முக்கிய ரோலில் நடிக்கும் படம் ‘படைவீரன்’. ஆச்சர்யம் என்னவென்றால், இந்த முறை இவரை கைபிடித்து அழைத்து வந்தது அதே மணிரத்னத்தின் சிஷ்யன் தனா!

போலீஸ் வேலைக்கு போனால் சரக்கடிக்கலாம். மாமூல் வாங்கலாம் என்று ஆசைப்படும் ஒருவன், கஷ்டப்பட்டு போலீஸ் ஆகிறான். வந்தால்… கடமையும் கட்டுப்பாடும் அந்த நினைப்பை அழித்து பொறுப்புள்ள ஒரு போலீஸ் அதிகாரியாக்குகிறது. அந்த போலீஸ் அதிகாரியின் மாமாவாக நடித்திருக்கிறார் பாரதிராஜா. அந்த போலீஸ் யார்? பிரபல பாடகர் யேசுதாசின் மகன் விஜய் யேசுதாஸ். இவர் ஹீரோ என்றாலும், நிஜ ஹீரோ பாரதிராஜாதான் என்கிறார்கள்.

இப்படத்தில் நடிக்க பதினைந்து நாட்கள் கால்ஷீட் கொடுத்தாராம் பாரதிராஜா. ஆனால் பதிமூன்றே நாட்களில் தன் போர்ஷனை முடித்துக் கொடுத்துவிட்டார். இந்தப்படம் வந்தால், சிவாஜிக்கு எப்படி முதல் மரியாதை பேசப்பட்டதோ, அப்படி பாரதிராஜாவுக்கு ஒரு ‘படைவீரன்’ என்று உலகம் கொண்டாடும் என்கிறார்கள் இன்டஸ்ட்ரியில்.

மறுபடியும் ஒரு மணி‘ரத்ன’ பாராட்டுக்காக காத்திருக்கிறது இமயத்தின் மனசு!

Leave A Reply

Your email address will not be published.