இதோட நிறுத்திக்கணும்… பாரதிராஜாவை எச்சரிக்கிறேன்! பொங்கி வெடித்த பாலா!

0

குற்றப்பரம்பரை படத்தை ஆரம்பிப்பதற்கு முன்பே வெட்டுக்குத்து ஆகிடும் போலிருக்கே? என்று ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் ‘ஒரு மாதிரி’ மனநிலைக்கு ஆளாக்கிவிட்டார்கள் இரண்டு மாபெரும் இயக்குனர்கள். ஒருவர் பாரதிராஜா. இன்னொருவர் பாலா. இந்த பிரச்சனை வெடித்த நாளிலிருந்தே அமைதி காத்த பாலா, இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் பொங்கிவிட்டார் பொங்கி! “கொடுக்க வேண்டிய விளக்கமெல்லாம் கொடுத்தாச்சு. இதற்கப்புறமும் என்னை பற்றி பேசுனா… அவ்வளவுதான். உங்க ரெண்டு பேரையும் எச்சரிக்கிறேன்” என்று தனது பேச்சை முடித்துக் கொண்ட பாலா, முன்னெப்போதும் நாம் பார்க்காத டென்ஷன் பாலா! ஆமாம் இந்த இன்னொரு நபர் யார்?

கருத்தம்மா, பசும்பொன் என்று பாரதிராஜாவின் படங்களுக்கு வசனம் எழுதிய ரத்னகுமார். செங்காத்து பூமியிலே உள்ளிட்ட சில படங்களை இயக்கியவர். இப்போது பாரதிராஜா இயக்கவிருக்கும் குற்றப்பரம்பரை படத்தின் வசனகர்த்தாவும் இவர்தான்.

குற்றப்பரம்பரை கதையை பாலா திரைப்படமாக எடுத்தால் அவர் மீது வழக்கு போடுவேன் என்றும், இயக்குனர் சங்கத்தில் பாலா மீது புகார் கொடுத்திருப்பவரும் கூட இவர்தான். இன்று கடைக்கு வந்த குமுதம் இதழில் இவர் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்றுதான், பாலாவை கொந்தளிக்க வைத்துவிட்டது.

அந்த கொடுமையை பாலாவே விவரிக்கிறார்-

“வேல.ராமமூர்த்தியின் குற்றப்பரம்பரை கதையிலிருந்து ஒரு பகுதியை மட்டும் எடுத்து அதில் நிறைய கற்பனை கலந்து வேறொரு கதையாக உருவாக்கியிருக்கிறோம். அதைதான் நான் படமாக்கப் போறேன். அதுக்கு தலைப்பும் குற்றப்பரம்பரை இல்லை. நான் இயக்கப் போவது கதை. பாரதிராஜா இயக்கப் போவது வரலாறு. இரண்டுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. இன்னொன்று… வரலாற்றை யார் வேணும்னாலும் படமா எடுக்கலாம். அதை எடுக்கக்கூடாதுன்னு சொல்றதுக்கு யாருக்கும் உரிமையில்லை”

இருந்தாலும் தயாரிப்பாளர் தனஞ்செயன் மூலமாக உங்க படத்திற்கும் என் படத்திற்கும் எந்த சம்பந்தமும் இருக்காது என்று பாரதிராஜாவுக்கே சொல்லியனுப்பி விட்டேன். அவர் கூப்பிட்டால் நானே அந்த பட துவக்கவிழாவில் கலந்துக்குறேன். அவரை என்னிடம் பேச சொல்லுங்க என்றும் சொல்லியனுப்பினேன். இன்னைக்கு காலையிலிருந்து மூன்று முறை அவருக்கு போன் அடிச்சுட்டேன். போனை எடுத்துட்டு, “மூணாவது முறையா போன் பண்றான்யா…” என்று போனை கட் பண்ணுகிறார். நான் குருவாக மதித்து வணங்குகிற ஒரே இயக்குனர் பாலுமகேந்திரா மட்டும்தான். ஆனால் இந்த ரத்னகுமார்ங்கிறவன் நான் ஏதோ பாரதிராஜாவிடம் வாய்ப்பு கேட்டு வந்ததாகவெல்லாம் பேட்டி கொடுக்குறான். எனக்கு கூர் இல்ல என்கிறான். (அப்படியென்றால் அறிவில்லை என்று அர்த்தமாம்) என்னை கதை திருடன் என்கிறான். அவன் பெயரையெல்லாம் உச்சரிப்பதே அவமானம்னு நினைப்பவன் நான். அப்படியிருந்தும் என்னை அவன் பேரை சொல்ல வச்சுட்டான்” என்றார் பாலா கடும் ஆவேசத்தோடு.

“பாரதிராஜா எளிதில் உணர்ச்சிவசப்படுகிறவர். அது மட்டுமில்ல, வயசானவர் வேற… ஏதோ சொல்லிட்டார்” என்று நிருபர் ஒருவர் சூட்டை தணிக்க முயன்ற போது மேலும் சூடானார் பாலா. ஏங்க… வயசானவர்னா எது வேணும்னாலும் பேசலாமா? அவர் பேசுறதெல்லாம் பொறுத்துக்க முடியுமா? என்றார் கோபம் குறையாமல்.

“…. உங்க ரெண்டு பேரையும் எச்சரிக்கிறேன். என்னை பற்றி பேசுறதை இன்னையோட நிறுத்திக்கணும். இல்லேன்னா…? – இறுதியாக இப்படிதான் அந்த பிரஸ்மீட்டை முடித்தார் பாலா.

பாலா கோபத்தில் நிறைய நியாயம் இருக்கிறது. பாரதிராஜா இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறாரோ?

Leave A Reply

Your email address will not be published.