தன் படத்திற்கு தானே சங்கு ஊதிய பாபி சிம்ஹா!

0

உடைஞ்ச மட்டையில முடைஞ்ச பாய் மாதிரி ஆகிருச்சு பாபி சிம்ஹாவின் மார்க்கெட்! கொஞ்சம் கொஞ்சமாக முழு வில்லன் ஆகிக் கொண்டிருக்கிறார் அவர். இந்த நேரத்தில் அவருக்கு அவரே இங்க் தெளித்துக் கொண்ட அநியாய விஷயம் ஒன்று வெளியாகி, ஐய்யோ குய்யோவாக்கியிருக்கிறது இன்டஸ்ட்ரியை!

வேறொன்றுமில்லை. பாம்புசட்டை என்ற படத்தில் இவர்தான் ஹீரோ. இப்படத்தின் முதல் பிரதி தயாரிப்பாளராக மனோபாலாவும், பணம் போடும் தயாரிப்பாளர்களாக நடிகை ராதிகாவும், லிஸ்டினும் இருந்தார்கள். நடிகர் சங்க விவகாரத்தில் மனோபாலா ராதிகாவின் எதிர்பக்கம் நின்றார் அல்லவா? அந்த வேதனையில் பாம்பு சட்டை படத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார் ராதிகா. சுமார் நான்கு கோடி ரூபாய் அதில் முடங்கிக் கிடந்தால் யாருக்குதான் லாபம்? ஒருவழியாக ராதிகா விலகிக் கொண்டு, பொறுப்பை லிஸ்டின் வசமே ஒப்படைத்துவிட்டார்.

அவரும் ஒரு நல்ல காரியம் செய்தார். கண்டும் காணாமல் நெட்டித்தள்ளப்பட்ட மனோபாலாவை அழைத்து, படத்தை நீங்களே உங்க பொறுப்புல ரிலீஸ் பண்ணிக்குங்க. எங்க பணத்தை செட்டில் பண்ணிருங்க என்று கூறிவிட்டார். இதற்கப்புறம் நடந்ததுதான் இம்சையிலும் இம்சை. பிரபல தயாரிப்பு நிறுவனம் ஒன்று படத்தை வெளியிட முன் வந்ததாம். அப்படி அவர்கள் படத்தை வெளியிட்டு விட்டால், இதில் பணம் போட்ட அத்தனை பேரும் நிம்மதியாகிவிடுவார்கள்.

பாம்பு சட்டை மட்டும் நினைச்ச மாதிரி ரிலீஸ் ஆகிட்டா, அந்த பாம்பு கோவிலுக்கே வந்து பத்து முட்டை, எட்டு லிட்டர் பால், ஏழெட்டு புரோட்டாவை காணிக்கையாக்குகிறேன் என்று வேண்டிக் கொண்டாராம் மனோபாலா. அந்த நேரத்தில்தான் தன் குறுக்கு கொடுக்கை விஷம் குறையாமல் ஏற்றியிருக்கிறார் பாபிசிம்ஹா. படத்தை வாங்கி வெளியிடுவதாக சொன்ன நிறுவனத்தை தொடர்பு கொண்டு, “எதுக்கும் படத்தை ஒரு தடவ பார்த்துட்டு வாங்குங்க. அவசரப்பட்டு வாங்கிட்டு அப்புறம் தவிக்காதீங்க” என்று சொல்லிவிட்டாராம்.

அதற்கப்புறம் பாம்பு சட்டையை வாங்க அவர்கள் என்ன அறியாத அப்ரசண்டுகளா? எடுத்தார்கள் ஓட்டம்! அங்க என்னய்யா அழுக சப்தம் கேட்குது? ஓ… நம்ம மனோபாலா!

To listen audio click below :-

 

Leave A Reply

Your email address will not be published.