போகன் – விமர்சனம்

1

நோக்கு வர்மத்தை மறந்தவர்களுக்கு வேண்டுமானால் ‘போகன்’ புதுசா இருக்கலாம்! மற்றபடி தமிழ்சினிமாவும் ரசிகர்களும் முன்பே ‘அனுபவித்த’ படம்தான் இது. ஆனால் அரவிந்த்சாமி என்ற நடிப்பு ராட்சசன், நம்மை விரல் கூட்டிக் கொண்டு நடக்கிறார் நடக்கிறார். அந்த ரெண்டரை மணி நேரம் நிமிஷமாய் கடந்துவிடுகிறது. அதற்கப்புறம் அந்த கட்டுமஸ்தான திரைக்கதையும் கூட ஒட்டுமொத்தமாக நம்மை ஆட் கொண்டுவிடுகிறது. இவ்வளவும் ஒரிஜனல் என்றால், படத்தின் இயக்குனர் லட்சுமணன் தலையில் பால் குடத்தையே கவிழ்க்கலாம். ஐயகோ… சுட்டதாச்சே அவ்வளவும்! ஹாலிவுட்டின் பேஸ் ஆஃபுக்கு ஒரு தேங்க்ஸ் கார்டு கூட போடலையே பிரதர்?

வாழ்க்கை நாலு போக விளைச்சலுக்கே என்று நம்புகிற, அனுபவிக்கிற மனுஷன் அரவிந்த்சாமி. அதற்கு பணம் வேணுமே? மிக சுலபமாக அவர் பாக்கெட்டுக்கு வருகிறது அது. அதுவும் கொஞ்சநஞ்சமல்ல. கோடியும் லட்சங்களுமாக! எப்படி? ஒரு நகை கடைக்கு வெளியே காரை நிறுத்திவிட்டு கடை இன்சார்ஜை நோக்குகிறார். அதற்கப்புறம் நடக்கிறது மேஜிக். அந்த இன்சார்ஜ் கடையிலிருக்கிற மொத்த பணத்தையும் கொண்டு வந்து இவரது காரில் வைத்துவிட்டு ஸ்பாட்டிலேயே மயக்கம் போட்டுவிழ, காரை கிளப்பிக் கொண்டு போகிறார் அரவிந்த்சாமி. கொண்டு வந்து வச்சவனே குழம்பிப் போக… வாழ்வாங்கு வாழும் அரவிந்த்சாமி, வலையில் சிக்கியது எப்படி? சிக்க காரணமான சம்பவம் எது? அதற்கப்புறம் நடக்கும் அதிரிபுதிரிகள் என்ன? இதுதான் சுவாரஸ்யமான இரண்டரை மணி நேரம்.

போலீஸ் அதிகாரியான ஜெயம் ரவியின் அப்பாவே திருட்டு கொடுத்துவிட்டு போலீஸ் வலையில் சிக்கிக் கொள்ள, அப்பாவை மீட்க ஆய்வை மேற்கொள்கிறார் ரவி. எந்தவித லாஜிக் கோளாறும் இல்லாமல் இவர் அரவிந்த்சாமியை லாக் பண்ணுகிற அந்த காட்சிக்கு பலத்த கைதட்டல்! அப்புறம் கதையை தன் கையில் எடுத்துக் கொள்கிறார் அரவிந்த்சாமி. நினைத்தால் நினைத்த மாத்திரத்தில் ஜெயம் ரவி உடம்பிலும், கமிஷனர் உடம்பிலும், ஹன்சிகா உடம்பிலும் சுற்றி சுற்றி பாய்கிறார். குழப்பத்தை குத்தகைக்கு எடுத்து குந்துனாப்ல தலையில் வைக்கும் நிலைமை. ஆனால் எவ்வித குளறுபடிக்கும் இடம் இல்லாமல் நகர்கிறது கதை. அதுதான் இப்படத்தின் வெற்றியும்.

பக்கத்துல இருக்கிற போலீஸ்காரரை கொல்றதுக்கு பதிலா ஜெயம் ரவியையே போட்டுத் தள்ளிட்டா போச்சு என்பது போன்ற சுலபமான கேள்விகளை மதித்திருந்தால் இந்தப்படமே செல்லாக் காசாகியிருக்கும். பட்… சினிமாதானே? அதற்கெல்லாம் அவசியம் இல்லை.

ஜெயம் ரவிதான் ஹீரோ என்றாலும், வில்லனின் பின்னால்தான் ஓடுகிறது ரசிகர்களின் மனசு. அதற்கு பொறுத்தமாக தனது மேனரிசங்களை மாற்றி மிரட்டுகிறார் அரவிந்த்சாமி. இவருக்குள் ஜெயம் ரவி ஆன்மா வந்தபின், தவியாய் தவிப்பதெல்லாம் செம. முக்கியமாக தன் காதலியை தன் உருவத்தில் போய் லவட்டக் கிளம்பும் அரவிந்த்சாமி ஆன்மாவை சமாளிக்க அவர் போடுகிற திட்டங்கள் எல்லாம் பஸ்பம் ஆகும்போது கவலையாய் வருகிறது. ஜெயம் ரவி அரவிந்த்சாமி போல நடிக்க திணறுவதுதான் கொடுமை. அதே போல அரவிந்த்சாமியும் ஜெயம் ரவி போல நடிக்கும் போது சரியாய் வழுக்கி விழுகிறார்.

ஹன்சிகா குடித்துவிட்டு பண்ணும் அலப்பறையும், அவருக்கு சவீதா கொடுத்திருக்கிற டப்பிங் குரலும் படு பயங்கர எரிச்சல். என்ன செய்வது? ஆனால் பொருத்தமாக உள்வாங்கி நடித்திருக்கும் ஹன்சிகாவின் நடிப்புக்கு அள்ளி அள்ளி தரலாம் மார்க்குகளை.

நாசர் கொஞ்சமே கொஞ்சம் வருகிறார். அந்த ஓலைச்சுவடியை அடைய திருட்டு சிரிப்பு சிரிக்கிறார். கைதட்டல்களை அள்ளிக் கொண்டு திகட்டுவதற்கு முன் செத்தும் போகிறார்.

பொன்வண்ணன், ஆடுகளம் நரேன் போன்றோர் சமர்த்தாக நடித்திருக்கிறார்கள். நாகேந்திர பிரசாத், அந்த தாடி வைத்த புதுப்பையன் எல்லாம் போலீஸ் அதிகாரிகள் என்றால் முட்டிக் கொண்டு சாக வேண்டியதுதான். கடவுளே… கடவுளே… அந்த போலீஸ் பியூட்டி ஒண்ணு வருதே, யார் பாஸு அது?

டி.இமானின் இசையில் செந்தூரா பாடல் கிளாஸ். டமாலு டுமீலு மாஸ். ஆட்டனியின் கட்டிங் படத்தையும் நம்மையும் நசுங்காமல் காப்பாற்றி அனுப்புகிறது. சவுந்தர்ராஜாவின் ஒளிப்பதிவுக்கு பளிச்சென ஒரு கைதட்டல்!

போகன்- திருட்டுக் கதையாக இருந்தாலும் இருட்டுக்கடை அல்வா!

-ஆர்.எஸ்.அந்தணன்

1 Comment
  1. Nimalan says

    Muthalla poi Face Off padatha paarunga. Onnum theriyaama poi sollatheenga.

Leave A Reply

Your email address will not be published.