சின்னப்படத் தயாரிப்பாளர்களை இப்படியா நசுக்குவது? வேதனைப்படுத்தும் விஷால்!

0

நாலு பேருக்கு நல்லதுன்னா போட்டுத் தள்றது கூட தப்பில்லை! என்கவுன்ட்டர்களின் தாத்பரியம், தத்துவமெல்லாம் இதுதான். ஆனால் ஐயகோ… திரையுலகத்திற்கு நல்லது பண்ணுகிறேன் பேர்வழி என்று சின்னப்பட தயாரிப்பாளர்களை என்கவுன்ட்டர் பண்ணுகிறார் விஷால் என்று கொதிக்கிறது கோடம்பாக்கம்.

தமிழக அரசு மத்திய அரசு அறிவித்திருந்த ஜி.எஸ்.டி போக, கேளிக்கை வரியாக நேரடி தமிழ் படங்களுக்கு 10 சதவீத வரியை விதித்திருக்கிறது. இதை எதிர்த்துதான் ஸ்டிரைக் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் விஷால்.

இம்மாதம் 6 ந் தேதியிலிருந்து எந்த புதுப்படங்களும் வெளியிடப்பட மாட்டாது என்று ஒரே போடாக போட்டுத் தள்ளிவிட்டார் அவர். விழித்திரு, களத்தூர் கிராமம் உள்ளிட்ட சுமார் 9 படங்கள் இந்த வார ரிலீசுக்காக காத்திருந்தன. இதில் பலரும் ரிலீசுக்காக லட்சக்கணக்கில் செலவு செய்திருக்கிறார்கள். இவர்களிடம் ஒரு வார்த்தை கூட கலந்தாலோசிக்காமல் திடீரென ஸ்டிரைக்கை அறிவித்துவிட்டார் விஷால்.

நிஜமான துணிச்சல்காரராக அவர் இருந்திருந்தால், இந்த ஸ்டிரைக்கை வருகிற தீபாவளி தினத்திலிருந்து அறிவித்திருக்க வேண்டியதுதானே? என்றும் கேள்வி எழுப்புகிறார்கள் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்கள்.

கேளிக்கை வரி தொடர்பாக ஏற்பட்டிருக்கும் பிரச்சனை ஏதோ இப்போது ஏற்பட்டதல்ல. ஜி.எஸ்.டி அறிவித்த நாளில் இருந்தே இருக்கிறது. அப்படியிருக்க… துப்பறிவாளன் படம் 2 வது வாரம் போஸ்டர் ஒட்டும்வரை பிரச்சனையை கிடப்பில் போட்ட விஷால், இப்போது மட்டும் திடீர் ஸ்டிரைக்கை அறிவிப்பது முறையல்ல… என்பதும் இவர்களின் கூக்குரல்.

இதுவே விஜய்யின் ‘மெர்சல்’ ரிலீஸ் நேரத்தில் இப்படி அவரால் சொல்லிவிட முடியுமா? சொன்னால்தான் விட்டுவிடுவார்களா? என்று குமுறி குமுறிக் கோபப்படுகிறார்கள்.

(துப்பறிவாளன் 2 வது வார போஸ்டர் ஒட்டியாச்சு போலிருக்கே?)

Leave A Reply

Your email address will not be published.