பாஸ்போர்ட் தொலைஞ்சுது! வேறு வழியில்லாமல் படமெடுத்த டைரக்டர்!
“படாத பாடு பட்டு படம் எடுக்குறீங்க? அதை ரிலீசுக்கு முன்னாடி நீங்க ஒரு தடவ போட்டு பார்ப்பீங்களா சார்?” என்றொரு கேள்வியை அநேகமாக முக்கால்வாசி இயக்குனர்களிடம் கேட்டு கதற விடுகிற அளவுக்குதான் இருக்கிறது ஒவ்வொரு படங்களும். ஆனால் ரிலீசுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே, மாணவக் கூட்டத்தை ஸ்பெஷலாக வரவழைத்து எங்கெல்லாம் ரசிக்கிறாங்க, எங்கெல்லாம் சுணங்குறாங்க என்று கணித்து கத்திரி போட்ட படம் ‘சென்னை டூ சிங்கப்பூர்’ என்றால் வியப்பாக இருக்கிறதல்லவா? யெஸ்… படத்தின் இயக்குனர் அப்பாஸ் அக்பர் அப்படியொரு விஷயத்தை செய்திருக்கிறார். ரிசல்ட்?
“பசங்க விழுந்து விழுந்து சிரிச்சாங்க தெரியுமா?”
சிங்கப்பூர் தமிழரான அப்பாஸ், பிரபல மியூசிக் டைரக்டர் ஜிப்ரானுடன் ஒன்றாக படித்தவர். படம் எடுக்கும் முடிவொடு சென்னைக்கு வந்தவர், ஜிப்ரானை அழைத்துக் கொண்டு சிங்கப்பூருக்கு போய், அங்கேயே ஒரு படத்தை தயாரித்து இயக்குவதாக திட்டம். மதி ஒண்ணு நினைச்சா, விதி வேறொன்று நினைப்பதுதானே இயற்கை? இங்கு வந்த அப்பாஸ் தன் பாஸ்போர்ட்டை தொலைத்துவிட்டார். அதற்கப்புறம் அது கைக்கு வர சுமார் இரண்டு மாதங்கள் ஆகும் என்றதும், தனது கனவு படத்தை சென்னையிலேயே ஷுட் பண்ண ஆரம்பித்துவிட்டார். சென்னையில் 70 சதவீதமும், சிங்கப்பூரில் 30 சதவீதமும் உருவான படம்தான் சென்னை டூ சிங்கப்பூர்.
இந்தப்படத்தின் பிரமோஷனுக்காக சென்னையிலிருந்து தரை வழியாகவே கிளம்பி, பூடான், மியான்மர், தாய்லாந்து வழியாக மலேசியா சென்று அங்கிருந்து சிங்கப்பூரை அடைந்திருக்கிறது இந்த படக்குழு. வழியெல்லாம் நாங்க பட்ட சிரமங்களை பொழுதுபோக்கா எடுத்துகிட்டோம் என்றார் ஜிப்ரான்.
படத்தையும் பொழுதுபோக்காதான் எடுத்திருக்காங்களாம். “சிரிச்சுட்டு சொல்லுங்க” என்றார்கள் ஜிப்ரானும், அப்பாசும். சிரிக்க விடுகிற நாள்? இம்மாதமே! யெஸ்… சென்னை டூ சிங்கப்பூர் இந்த மாத இறுதியில் ரிலீஸ்!