நிறைய பொறுப்புகள் இருக்குண்ணே! காமெடி சூரியின் சென்ட்டிமென்ட் டச்!

0

வைகைப்புயல், காமெடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களை குலுக்கி எடுத்த புண்ணியவான்களுக்கு ஹீரோ ஆசை வந்ததன் விளைவு? தமிழ்சினிமா பலத்த பாலைவனம் ஆகியிருந்தது. டென்ஷனை தணிக்க ஆண்டவனால் அனுப்பி வைக்கப்பட்ட கரும்பு கமர்கட்டுதான் சூரி. ‘மக்க சனம் அம்புட்டும் இவர் வந்தாலே சிரிக்குது. வாயத் தொறந்தா குதிக்குது’ என்று விநியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் சர்டிபிகேட் கொடுக்க… சூரியின் வாழ்வில் சுட சுட பணமழை! இப்பவும் நாள் சம்பளத்தில் சிகரம் தொடுகிற நம்ம சூரி, நேற்று பிரஸ் தோழர்களை சந்தித்தார்.

“96 ல் சென்னைக்கு வந்தேன். பெயின்ட் அடிக்கிற வேலை. செட் வொர்க்குன்னு நிறைய கஷ்டப்பட்டுருக்கேன். நம்ம முன்னேற்றத்துக்கு நீங்களும் ஒரு காரணம்ணே… நன்றி சொல்லதான் இந்த மீட்டிங்” என்றவரிடம், ஏராளமான கேள்விகளை போட்டு துளைத்தது பிரஸ். நிறைய(?) பேசிய சூரி, இறுதியாக பேசும்போது அத்தனை பேரின் மனசையும் ‘டச்’ பண்ணிவிட்டு போனது அழகு!

“நிறைய ட்ராமா போட்ருக்கேன்னு சொல்றீங்க? ஏன் நீங்களே டைரக்ஷன் பண்ணக் கூடாது?” என்ற கேள்விக்கு சூரியின் ரிப்ளை இது.

“அண்ணே… என்னை நம்பி ஒரு பெரிய குடும்பம் இருக்கு. அண்ணன் தம்பிங்க ஆறு பேரு. எல்லாருக்கும் புள்ளக்குட்டிகள் இருக்கு. என் பிள்ளைங்களை மட்டும் நல்லா வச்சுக்கணும்னு நினைக்கல. என் பிள்ளைக்கு எவ்வளவு பேங்க்ல போட்டு வைக்கிறேனோ, அதே பணத்தை என் தம்பிகளோட புள்ளைகளுக்கும் போடுறண்ணே. குழந்தைங்க கூட ‘சித்தப்பா, பெரியப்பா’ன்னு கூப்பிட்டு பழக்கமில்ல. எங்க எல்லாரையுமே அப்பான்னுதான் கூப்பிடுதுங்க. தனித்தனி வயிறா இருந்தாலும், நாங்க ஒண்ணுதான். சொந்த பந்தங்க எல்லாத்தையும் சந்தோஷமா வச்சுக்கணும். அதுக்காக நிறைய உழைக்க வேண்டியிருக்குண்ணே. இப்ப போயி டைரக்ஷன் அது இதுன்னு டைவர்ட் ஆகக் கூடாது பாருங்க” என்றார்.

வசதி வந்ததும் பெற்ற அம்மாவையே, “யாரும்மா நீ” என்று கேட்கிற உலகத்தில் அண்ணன் தம்பி சொந்த பந்தங்களுக்காக ராப்பகல் பாராமல் உழைக்கிற சூரியை என்ன சொல்லி பாராட்ட?

முத்துக்கு முத்தாக… சொத்துக்கு சொத்தாக… அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் ஒண்ணுக்கு ஒண்ணாக…!

Leave A Reply

Your email address will not be published.