சிவகார்த்திகேயன் மீது புகார்? தயாரிப்பாளர் சங்கத்தில் பஞ்சாயத்து!

0

வளர்ந்த பனை மரத்தை குனிஞ்சு புடுங்க முடியுமா?

ஏன் முடியாது என்பவர்கள்தான் சினிமாவில் ஜாஸ்தி. ஒரு கல்லைத் தூக்கிப் போடுவோம். உடைஞ்சா கண்ணாடி… உடையலேன்னா எனக்கு என்னாடி? என்று நடையை கட்ட வேண்டியதுதான் என்பவர்களும் இங்கே ஜாஸ்தி. இப்படிப்பட்ட இடியாப்ப சிக்கலுக்குள் தலையை கொடுத்தாலும், தப்பிக்கிற ‘தில்’லோடு ஓடிக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் நிறுவனத்திற்காக தயாரிக்கப்படும் மூன்று படங்களில் அடுத்தடுத்து நடிக்க கமிட் ஆகிவிட்டார் அவர். இந்த நிறுவனம், சிவகார்த்திகயேனின் நெருங்கிய நண்பர் ஆர்.டி.ராஜாவுக்கு சொந்தமானது. ரெமோ, அதற்கப்புறம் ஜெயம் ராஜா இயக்குகிற படம், பிறகு பொன்ராம் இயக்கும் படம். இப்படி ஒரே நிறுவனத்தில் அடுத்தடுத்து நடிக்கிற படங்களுக்கு பஞ்சாங்கம் குறித்துவிட்டார் சிவா.

“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பாமல், இப்படி ஒம்பாட்டுக்கு ஒரே கம்பெனிக்கு கால்ஷீட் கொடுத்தால், விட்ருவோமா?” என்று கிளம்பிவிட்டார்கள் இங்கே! அவருக்கு அட்வான்ஸ் கொடுத்திருந்த தயாரிப்பாளர்கள் தங்கள் கிடுக்கிப்பிடியை இறுக்கிப் போட்டுவிட்டார்கள் சிவகார்த்திகேயன் மீது.

ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா, எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன், மற்றும் அம்மா கிரியேஷன்ஸ் சிவா ஆகிய மூவரும், “சிவகார்த்திகேயன் எங்களிடம் முன்பே போட்டிருக்கும் ஒப்பந்தப்படி எங்களுக்கு கால்ஷீட் கொடுக்க வேண்டும்” என்று தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார்களாம். இன்று விசாரணைக்கு வருகிறது புகார். அங்கு என்ன முடிவெடுக்கப் போகிறார்களோ?

‘முடிஞ்சா இவன புடி’ பட பாடல் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பேசியதுதான் நினைவுக்கு வருகிறது. “எனக்கு உனக்குன்னு கால்ஷீட் கேட்டு கம்பெனிகள் நம்மள விரட்டுற அளவுக்கு வளரணும்னு நானும் சதீஷும் ஆசைப்படுவோம்…” என்றார்.

அதானே நடக்குது இப்போ?

 

Leave A Reply

Your email address will not be published.