டைரக்டர் செல்வராகவனுக்கு நீதிமன்றம் பலத்த குட்டு!

0

‘திருடாதே… பாப்பா திருடாதே…’ மாதிரியான பாடல்களை இப்போது எழுதினால், சம்பந்தப்பட்ட கவிஞரின் வீட்டுக்குள் இருக்கிற எறும்புகள் கூட கூட்டு சேர்ந்து கடித்து வைக்கும்! சமயங்களில் தெருநாய்தான் குலைக்கிறதோ என்று சந்தேகப்படும் படியான ட்யூன் மற்றும் குரல்களுடன், வரிகளை தின்று ஏப்பம் விடும் இசையமைப்பாளர்களால், கவிஞர்கள் என்ன எழுதுகிறார்கள் என்பதே இப்போது தேவையில்லாத ஒன்றாகிவிட்டது. பாடல் எழுதுவதற்கு கவிஞர்களும் தேவையில்லாத ஒன்றாகிவிட்டார்கள். அதே நேரத்தில் அரிதான சில இசையமைப்பாளர்களும், கவிஞர்களும் அற்புதமான கூட்டணி அமைத்து இப்போது நல்ல நல்ல மெலடிகளை வழங்கி வருவதால்தான் தமிழ்சினிமா கொஞ்சநஞ்ச மானத்தோடு நடமாடுகிறது.

ஒரு சின்ன பிளாஷ்பேக். செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த ‘மயக்கம் என்ன’ படத்தில் வரும் பாடல் இது. பல்லவி ‘அடிடா அவள….. வெட்டுடா அவள..’ என்பதாகும். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்த பாடலைதான் இப்போது மீண்டும் நினைவுபடுத்தி காறித் துப்பியிருக்கிறார்கள் மகா கனம் பொருந்திய நீதிபதிகள். இதன் விபரம் பின் வருமாறு-

சுவாதி படுகொலை தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் அது தொடர்பான தங்களது கருத்துக்களை கோபத்தோடு வெளிப்படுத்தினார்கள்.

‘அடிடா அவளை வெட்ரா அவளை’ என்றெல்லாம் பாட்டுக்கள் சினிமாவில் வருகின்றன. அதை விட மோசமாகவும் வருகின்றன. இதையெல்லாம் இந்த அரசு தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதா? அதுதொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கைதான் என்ன? பெண்களை மோசமாகவும், வன்முறையைத் தூண்டும் வகையிலுமான இது போன்ற பாடல்களை ஏன் அரசு அனுமதிக்கிறது?

நீதிபதிகள் இவ்வாறு கேட்டதும் நீதிமன்றம் பரபரப்பானது.

இந்த தகவல் செல்வராகவனுக்கோ, ஜி.வி.பிரகாஷுக்கோ, அதில் நடித்த தனுஷுக்கோ சென்று சேர்ந்திருக்குமா தெரியாது. ஒருவேளை சேர்ந்திருந்தால், அடுத்த படத்தில் குறைச்சுக்கோங்க. இல்லேன்னா நிறுத்துங்க. அதுதான் நீதிமன்றத்துக்கு நீங்கள் தரும் மரியாதை.

Leave A Reply

Your email address will not be published.