குறுக்கே நிற்கும் சங்கம்! நெருக்கடிக்கு ஆளான இளையராஜா?

0

காலையும் நீயே… மாலையும் நீயே… என்று இளையராஜாவிடம் சரணாகதியாகிக் கிடக்கிறார்கள் நல்ல பாட்டு விரும்பும் ரசிகர்கள். கார் வைத்திருப்பவர்களின் ஹைவேஸ் தோழன், ஹெட் செட் இருந்தாலே போதும்… வாக்கிங் தோழன், எண்பதுகளின் ராஜா எங்களின் இதயராஜா என்று ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள் அவரை.

இன்னமும் அவர்களை தன் கட்டுக்குள் வைத்திருக்கிறார் ராஜா. அவரே மேடையில் தோன்றி இசைக்கச்சேரி நடத்துகிறார் என்றால், காத்திருக்கும் செவிகள் சும்மாவா இருக்கும்? எங்கே எங்கே என்று டிக்கெட் தேடி அலையாதா? இதையெல்லாம் மனதில் கொண்டு விஜய் தொலைக்காட்சி இளையராஜாவின் இசைக்கச்சேரிக்கு ஏற்பாடு செய்திருந்தது. அவரது 1000 வது பட சாதனையை கொண்டாடும் விதத்தில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த விஜய், பிப்ரவரி 27 ந் தேதி அதை சென்னையில் பிரமாண்டமாக நடத்தவும் முடிவு செய்திருந்தது. இப்போது அதில் ஒரு சிக்கல்?

இளையராஜாவின் இசை நிகழ்ச்சிகளை தமிழகத்தின் நான்கு மாவட்டங்களில் நடத்துவதாக ஏற்கனவே முடிவு செய்து, அதற்கான முஸ்தீபுகளில் இருக்கிறது தயாரிப்பாளர் சங்கம். இது ஒரு புறமிருக்க, மேற்படி விஜய் தொலைக்காட்சி தமிழ் படங்களின் சேட்டிலைட் உரிமையை வாங்குவதில்லையாம். அப்படி வாங்காத தொலைக்காட்சிகளுக்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்று முடிவெடுத்து, அதில் உறுதியாகவும் இருக்கிறது சங்கம். இந்த நேரத்தில் இளையராஜாவை வைத்து கச்சேரி நடத்தினால் சும்மாயிருக்குமா? ராஜாவிடம், ‘‘போகாதீங்க” என்று விண்ணப்பம் வைத்திருக்கிறதாம். அதோடு, அந்த நிகழ்ச்சியில் தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள், இயக்குனர்கள், யாரும் கலந்து கொள்ளக் கூடாது என்றும் கூறியிருக்கிறதாம்.

இளையராஜாவின் 1000 வது பட சாதனை நிகழ்ச்சி என்றால், அந்த சாதனைக்கு படிக்கல்லாக இருந்த பாலா அங்கு வர வேண்டும். சசிகுமார், வரலெட்சுமியெல்லாம் கூட வர வேண்டும். அவர்களை போகாதே என்று தடுத்தால் என்னாகும்? இளையராஜா, விஜய் தொலைக்காட்சி, பாலா ஆகிய முத்தரப்புக்கும் இப்போது சங்கடம்.

சட்டென்று உணர்ச்சிவசப்படும் இளையராஜா இந்த விஷயத்தில் என்ன முடிவெடுக்கப் போகிறாரோ?

Leave A Reply

Your email address will not be published.