அந்த நூற்றைம்பது பேருக்கு நன்றி! இஞ்ச் பை இஞ்ச் இமான்!

0

ஃபர்ஸ்ட் புளோர் ஏறியவுடன், படியை இடிப்பதே முதல் வேலை என்று இருப்பவர்கள் ‘சினிமாக்காரர்களா, அல்லது அரசியல்வாதிகளா?’ என்று பட்டிமன்றமே வைக்கலாம். அந்தளவுக்கு பொங்கி வழியும் நன்றியுணர்ச்சிக்கு இவ்விரு துறை வெற்றியாளர்களே உதாரணம். தனித்தனியாக பட்டியல் இட்டால், கல் விழும். கலவரம் வரும் என்பதால் விட்டு தள்ளுக.

ஆனால் டி.இமான் அப்படிப்பட்டவர் அல்ல என்பதை ஒரு பெருமூச்சோடு சொல்வதில் எவ்வித சிக்கலும் இருக்கப் போவதில்லை. விரைவில் திரைக்கு வரப்போகும் ‘டிக் டிக் டிக்’ இமான் இசையமைத்த 100 வது படம். இந்த நிகழ்வை பத்திரிகையாளர்களுடன் சொல்லி பகிர்ந்து கொள்ள வந்திருந்தார் அவர்.

வந்த இடத்தில்தான் ஒரு நீண்ட பட்டியலை மூச்சு விடாமல் வாசித்து, ‘அட அவ்ளோ நல்லவரா நீங்க?’ என்ற இமேஜை அடைந்தார் அவர். ஸ்கூல் படிக்கும் போது தனக்கு மியூசிக் சொல்லித் தந்த குருவில் ஆரம்பித்து, அவ்வப்போது கீ போர்டு, ஆர்மோனியம் வாங்குவதற்கு பணம் கடனாக கொடுத்த சேட்டுகள் வரைக்கும் தனித்தனியாக நன்றி சொன்னார் இமான். இப்படி அவர் வாசித்த பட்டியலில் இடம் பிடித்தவர்கள் சுமார் 150 பேர்.

இவர் இசையமைத்த முதல் படம் காதல் சுவாசம் இன்னும் திரைக்கு வரவில்லை. ஆனால் இரண்டாவதாக இசையமைத்த தமிழன்தான் முதலில் வந்தது. காதல் சுவாசம் படத் தயாரிப்பாளர் குட்டி பத்மினிக்கும், தமிழன் படத் தயாரிப்பாளர் மறைந்த ஜி.விக்கும் ஸ்பெஷலாக நன்றி தெரிவித்துக் கொண்டார் அவர்.

‘எந்த நிகழ்ச்சிக்கு போனாலும் டிரஸ் பற்றி பெரிசாக அலட்டிக் கொள்ள மாட்டேன். ஆனால் இங்கு வரும்போது தேடிப்பிடித்து இந்த கோட் அணிந்து கொண்டேன். பத்திரிகையாளர்களாக நீங்கள் என் வாழ்வில் மிக முக்கியமான இடத்தில் இருக்கிறீர்கள். அதை சொல்லதான் இந்த கோட்’ என்றார்.

ஒரு மனுஷனுக்கு நன்றி சொல்லதான் எத்தனையெத்தனை வழிகள்? முறைகள்? வாவ்…

Leave A Reply

Your email address will not be published.