மிக்சியில் போட்டு அரைச்சுருவேன்! டைரக்டரை மிரட்டிய குட்டீஸ்!

0

கோலிவுட், டோலிவுட், மல்லுவுட், அல்லுவுட், ஜொள்ளுவுட்… இப்படி எந்த வுட்டாக இருந்தாலும், கதைதான் ஹீரோ. மற்றதெல்லாம் அடிஷனல்தான் என்பதை மறுபடியும் நிரூபிக்க வந்திருக்கிறார் விஜய் மில்டன். அவர் தந்த ஒரு கோலி சோடாவுக்கே இன்னும் ஊரெல்லாம் மணந்து கொண்டிருக்கிறது. அதற்கு சற்றும் குறைவில்லாமல் இன்னொரு படத்தோடு களம் இறங்கிவிட்டார் மில்டன்! படத்தின் பெயர் கடுகு! ‘நம்மள நாமளே நம்பணும்’ என்பதுதான் கதையின் கான்செப்ட்!

மிக மிக எளிமையான ஒருவன், சொசைட்டியில் ஸ்டிராங்காக இருக்கும் ஒருவனை அடித்து நொறுக்குவதுதான் கதை. முற்றிலும் மைண்ட் கேம் வகையை சேர்ந்த திருப்பங்களுடன் அதிரடியாக வருகிறது கடுகு. இம்மாதம் 24 ந் தேதி ரிலீஸ்.

படத்தின் முதல் அதிசயமே மிஸ்டர் ராஜகுமாரன்தான். (விலாசத்தை சரியா சொல்லுப்பா என்பவர்களுக்கு… ‘இவர் நடிகை தேவயானியை காதலித்து மணந்தவர்’) படத்தில் புலிவேஷம் கட்டும் சாமானியனாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் இவர்தான் நடிக்கணும் என்று வீடு தேடிப்போன விஜய் மில்டனிடம், ஏம்பா… போய் வேற வேலை இருந்தா பாரு என்றாராம் ராஜகுமாரன். ஏன்? நம்மெல்லாம் ஒரு ஹீரோ மெட்டீரியலா என்று அவர் நினைத்ததுதான் காரணம்.

ஆனால், முதல்ல உங்களை நீங்க நம்பணும் என்று வளைத்த விஜய் மில்டன் இந்த கதையை முழுசாக சொல்ல சொல்ல, ஷுட்டிங் எப்போன்னு கிளம்பிவிட்டார் ராஜகுமாரன். சும்மா சொல்லக்கூடாது. திரையிடப்பட்ட அந்த ட்ரெய்லரே சொன்னது ராஜகுமாரனின் திறமையையும் அர்ப்பணிப்பையும்!

வீட்டை விட்டு கிளம்பும்போது விஜய் மில்டனிடம், ராஜகுமாரன் தேவயானியின் குட்டிப் பெண் இப்படி சொன்னாளாம். “எங்கப்பாவை மட்டும் அழகா காட்டல… மில்டன் மாமா, உங்கள மிக்சியில போட்டு அரைச்சுருவேன்” என்று!

மற்றவர்களின் விமர்சங்களை விட, இந்த குட்டீஸ்களின் விமர்சனத்திற்காகதான் ரொம்பவே படபடப்புடன் காத்திருக்கிறார் மில்டன்!

ட்ரெய்லரை வெளியில் விடுங்க. இந்த ஊர் உலகமே மார்ச் 24 க்காக காத்திருக்கும்!

பின் குறிப்பு- இந்த படத்தை பார்த்த மாத்திரத்தில் மொத்தமாக கொள்முதல் செய்துவிட்டார் நடிகர் சூர்யா. அவரது 2டி நிறுவனம்தான் இப்படத்தை முறையாக வெளியிடுகிறது.

Leave A Reply

Your email address will not be published.