தனுஷ் ஆபிஸ் முற்றுகை! டிராபிக் ஜாம்?

0

கோவிலுக்கு நேர்த்திக் கடன் செலுத்தப் போவது போல கும்பல் கும்பலாக கிளம்பி வருகிறார்கள் ரசிகர்கள். தங்கள் போற்றுதலுக்குரிய தலைவனை நேரில் பார்த்து ஒரு போட்டோ எடுத்துவிட்டால், ‘போதும்டா சாமீய் நம் குலப் பெருமை’ என்பதுதான் அவர்களது லட்சியம்! ரஜினியில் ஆரம்பித்து, நேற்று வந்த யோகிபாபுவின் ஆபிஸ் வரைக்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இந்தக் கூட்டம், அலை போல ஆர்ப்பரித்து கடல் போல பொங்கும் போதுதான் அரசியல் ஆசை துளிர்விடுகிறது ஹீரோக்களுக்கு!

அப்படியொரு ஹீரோவாக தனுஷையும் ஆக்கிவிடுவார்கள் போலிருக்கிறது. ஏன்? ஏனென்றால் அப்படியொரு கூட்டம் அவரது ஆபிஸ் முன். விஜய் டி.வி. சிவகார்த்திகேயனின் அலுவலகம், இன்னும் சில முக்கியமான ஆடிட்டர்களின் ஆபிஸ் போன்றவை அமைந்திருக்கும் மிக பரபரப்பான சாலை அது. அங்குதான் நேற்று இரவு கூடியது பெரும் கூட்டம். “தலைவா…. தெய்வமே… ஏழைகளின் குல விளக்கே…” என்றெல்லாம் கோஷமிட்டுக் கொண்டு அவர் ஆபிசை கிட்டதட்ட முற்றுகையிடாத குறையாக சூழ்ந்து கொண்டார்கள் அவரது ரசிகர்கள்.

என்னடா விஷயம் என்று காது கொடுத்துக் கேட்டால், எல்லாம் நல்ல விஷயம்தான்! அகில உலக தனுஷ் ரசிகர் மன்றத் தலைவர் கடந்த சில மாதங்களாகவே பொறுப்போடு செயல்படாமல் வெளிநாடு சென்றுவிட்டாராம். சங்கத் தலைமை இல்லாமல் தவித்த ரசிகர்கள், தனுஷை ஓயாமல் தொணப்பி எடுக்க, “மாவட்ட செயலாளர்கள் மட்டும் வாங்க. பேசலாம். ஒரு தலைவரை தேர்ந்தெடுக்கலாம்” என்று அழைப்பு விடுத்திருக்கிறார் தனுஷ். அதற்காக கிளம்பி வந்த கூட்டம்தான் அது.

தலைவரை தேர்ந்தெடுத்தார்களா தெரியாது. ஆனால் விரைவில் வரப்போகும் கொடி படத்தின் பிரமோஷன் எப்படி நடக்க வேண்டும்? எவ்வாறு கலக்க வேண்டும்? என்று பேசினார்கள். ஆக மொத்தம் கொடி திரைக்கு வரும் நாளில், கோட்டை கொத்தளமெல்லாம் கிடுகிடுக்கிற அளவுக்கு கொடி கட்டுவார்கள் போலிருக்கிறது. மாமனார் செய்யாததை மருமகன் செய்ய நினைத்தால், அதை யாரால் தடுக்க இயலும்?

To listen audio click below:-

 

Leave A Reply

Your email address will not be published.