மும்மடங்கு மகிழ்ச்சி! தேசிய விருதுக்குப் பின் தனுஷ் நெகிழ்ச்சி
விசாரணை படத்திற்கு தேசிய விருது கிடைத்திருப்பதால் பெரும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார் தனுஷ். இப்படத்தின் தயாரிப்பாளர் அவர்தானே? அதனால்தான் இந்த மகிழ்ச்சி. இது குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார் அவர்.
தனுஷ்-
சில படைப்புகளை துவங்கும்போது நமக்கே தெரியும் , இப்படைப்பு மிக முக்கிய இடத்தை பெறும் என்பது. அதை போன்ற ஒரு படைப்பு தான் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்து விமர்சன ரீதியாகவும் , வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றிபெற்ற ” விசாரணை ” . நான் ” விசாரணை ” திரைப்படத்துக்காக தேசிய விருது பெற்றுள்ள சமுத்திர கனி மற்றும் படத்தொகுப்பாளர் கிஷோருக்காக மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். விசாரணை படத்துக்கு 3 விருதுகள் என்பது எனக்கு 3 மடங்கு மகிழ்ச்சியான விஷயமாகும் , மூன்று தேசிய விருதுகளை தந்துள்ள இயக்குநர் வெற்றிமாறனுக்கு நன்றி கூறுவது எனது கடமையாகும். இதை போன்ற படைப்புகளை தமிழ் மக்கள் நிச்சயம் ஏற்றுகொள்வார்கள் என்ற விஷயம் எனக்கு மகிழ்ச்சியையும் , மேலும் இதை போன்ற படைப்பை வழங்க உற்ச்சாகத்தையும் தருகின்றது.
சமுத்திரக்கனி கூறியிருப்பதாவது-
64வது தேசிய விருது பட்டியலில் எனக்கு சிறந்த துணை நடிகர் விருது, நடிகர் தனுஷ் தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கிய விசாரனை படத்திற்க்காக கிடைத்துள்ளது. எனக்கு இவ்விருது கிடைக்க உறுதுணையாய் இருந்த உங்கள் அனைவருக்கும், விசாரணை படக்குழுவுக்கும், தேசிய விருது தேர்வுகுழுவுக்கும் எனது நன்றியை இங்கு தெரிவித்து கொள்கிறேன். விசாரணை படத்திற்கு சிறந்த தமிழ் பட விருதும், காலம் சென்ற படத்தொகுப்பாளர் கிஷோர் அவர்களுக்கு விசாரணை படத்திற்காக சிறந்த படத்தொகுப்பாளர் விருதும் கிடைக்கபெற்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. படக்குழுவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் நன்றிகள். மேலும் தேசிய விருது வென்ற அனைத்து கலைஞர்களுக்கும் எனது பாராட்டுகள். எனது அடுத்த படைப்பான “அப்பா” விரைவில் வெளிவரவுள்ளது. உங்கள் மேலான ஆதரவை எனக்கும், சிறந்த தமிழ் படைப்புகளுக்கும் தொடர்ந்து அளிக்குமாறு பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்.