ஐஸ்வர்யா ராயிடம் கதை சொன்னீங்க! அப்புறம் என்னாச்சு தனுஷ்?
“அரேபிய குதிரைக்கு ட்ரை பண்ணினேன். ஆனா ஆந்திரா ஆடுதான் கிடைச்சுது….” என்பதாகவே முடிந்துவிடுகிறது அநேக முயற்சிகள். வேலையில்லா பட்டதாரி பார்ட் 2 வுக்கு இறக்கையை கட்டிக் கொண்டு படபடவென்று பறக்க ஆரம்பித்துவிட்டார் தனுஷ். சவுந்தர்யா ரஜினி இயக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் அத்தனையும் தனுஷ்தான். கதை அழகாக வந்துவிட்டது. வசனங்கள் தாறுமாறாக நின்று விட்டது. பொருத்தமான நடிகர்கள் நடிகைகள் கிடைத்தால் பொளந்து கட்டிவிடலாம் அல்லவா? அங்குதான் திடீர் பள்ளம் விழுந்தது தனுஷின் மனசில்.
படத்தில் வரும் ஸ்டிராங்கான கேரக்டர் ஒன்றில் ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்கலாமே என்று ஆசைப்பட்டாராம். அவரது சம்பளம் ஆறு கோடி. மற்றும் வந்து போகிற விமான செலவு, ஓட்டல் பில் என்று கணக்குப் போட்டால் எக்ஸ்ட்ரா ஐம்பது லட்சம். போதும் பார்த்துக் கொள்ளலாம் என்கிற திட்டத்துடன், ஐஸ்வர்யா ராய்க்கு போன் அடித்தாராம். ஏற்கனவே இந்தியில் அமிதாப்புடன் நடித்தவர். நடித்த இரு இந்திப் படங்களில் ஒரு படம் தாறுமாறு ஹிட். எல்லாவற்றுக்கும் மேல் இந்த தனுஷ், ரஜினியின் மருமகன் என்ற வகையில் இவரது போனுக்கு உடனடி ரெஸ்பான்ஸ்.
போனிலேயே முழு கதையையும் கேட்டாராம் ஐஸ். கடைசியாக அவர் சொன்னதுதான், பள்ளத்திலும் பள்ளம். பாதாளமே அஞ்சுகிற பள்ளம்.
“இதில் எனக்கு என்ன பெரிசா வேலை இருக்கு? என் கேரக்டர் படம் ஆரம்பிச்சு கடைசி வரைக்கும் இருக்கணும். இதில் அவ்வளவு ஹோப் இல்ல. சாரி…” என்றாராம். அப்புறம் என்ன? குதிரையை வைக்கிற இடத்தில் ஆடு இருக்கிறதே… அதை வைத்து சமாளிக்கலாம் என்று முடிவெடுத்துவிட்டார் தனுஷ். அந்த ஆடுதான் காஜோல் என்றால், இளசுகளுக்கு நிச்சயம் கோபம் வராது. அப்படியே வந்தாலும், அவர்கள் காஜோலின் 90 கள் பட ரசிகர்களாக இருந்திருப்பார்கள்.