தன்ஷிகாவை கஷ்டப்படுத்திய டைரக்டர்!

0

ஊட்டியில் ஷுட்டிங் என்றால், லூட்டிக்கு பஞ்சம் இருக்காது. ஏனென்றால் க்ளைமேட் அப்படி! ஆனால் வேஷ்டிய காணோம், ஜீன்சை காணோம் என்று ஓட்டமெடுக்காத குறையாக அவஸ்தை பட்டு திரும்பியிருக்கிறது ஒரு படக்குழு. “எல்லாத்துக்கும் காரணம் நான்தான். என்னை மன்னிச்சுருங்க. உங்க எல்லாரையும் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்” என்று கையெடுத்து கும்பிட்டார் இயக்குனர் விக்கி ஆனந்த். இவர் இயக்கிய ‘உரு’ படத்தில்தான் இப்படி உருக்குலைந்து ஓட்டமெடுக்கிற அளவுக்கு போனார்கள் அத்தனை பேரும். முக்கியமாக சாய் தன்ஷிகா.

க்ரைம் த்ரில்லர் கதை. அதற்காக இவர் தேர்ந்தெடுத்த லொக்கேஷன் ஊட்டி. அதுவும் பல்லும் பல்லும் தந்தியடிக்கிற பலத்த கொழுத்த டிசம்பர் மாத குளிரில். ஹீரோயின் சாய் தன்ஷிகா, ஹீரோ கலையரசன் உள்ளிட்ட டீம் ரெடி. நைட் ஷுட்டிங். ஏற்கனவே கிடுகிடு. இதில் இன்னும் படுபயங்கரமாக தண்ணீர் லாரியை கொண்டு வந்து நிறுத்தி ரெயின் எபெக்டுக்கு திட்டம் போட்டாராம் டைரக்டர்.

அங்குதான் குலை நடுங்கிப் போயிருக்கிறார்கள் அத்தனை பேரும். இருந்தாலும் நான் ரெடி என்று களமிரங்கிவிட்டார் சாய் தன்ஷிகா. ஆள் உயிரோடு திரும்பியதே அந்த ஆண்டவன் புண்ணியம் என்கிற அளவுக்கு போனதாம் நிலைமை. “இழுத்த இழுப்புக்கெல்லாம் உயிரை கொடுத்து வேலை பார்த்த சாய் தன்ஷிகா, கலையரன் உள்ளிட்ட அத்தனை பேருக்கும் நன்றி. அவங்க மட்டும் சம்மதிக்கலைன்னா இந்த படமே இல்ல” என்று நெக்குருகினார் படத்தின் தயாரிப்பாளர் வி.பி.விஜி.

ஷுட்டிங் ஸ்பாட்டில் ஏழெட்டு ஸ்வெட்டர்களை ஓரே நேரத்தில் மாட்டிக் கொண்டு வேலை பார்த்த உதவி இயக்குனர்களை மேடைக்கு அழைத்து கவுரவித்த இந்த தயாரிப்பாளர், உங்கள்ல யாரு வேணும்னாலும் கதை சொல்லலாம். பிடிச்சுருந்தா அடுத்த படத்துக்கு முகூர்த்தம் பார்த்துடலாம் என்று அதே மேடையில் அறிவிக்க…. தயாரிப்பாளர்னா இப்படியல்லவா இருக்கணும் என்று ஆசிர்வதித்தது நிருபர் கூட்டம்.

மொத்தத்தில் உரு படத்தின் பிரஸ்மீட், சில நல்ல உள்ளங்களின் ‘உரு’வத்தை காட்டி நெகிழ வைத்ததே நிஜம்!

Leave A Reply

Your email address will not be published.