அஞ்சலியப் பற்றி எதுவும் கேட்காதீங்க! அப்செட்டில் மு.களஞ்சியம்!!

0

சற்றே இடைவெளிக்கு பிறகு மீண்டும் மு.களஞ்சியத்தை பற்றிய பேச்சு கோடம்பாக்கத்தில் எழ ஆரம்பித்திருக்கிறது. ஆனால் இந்த முறை “ஆஹா ஓஹோ… ” என்று! அவர் நடித்து சமீபத்தில் வெளிவந்திருக்கும் ‘கோடை மழை’, அவருக்கு வேறொரு வாசலை திறந்து வைத்திருக்கிறது. “நான் ஒரு டைரக்டர்னு நினைச்சு கேமிரா முன்னாடி நிக்கல. கோடைமழை டைரக்டர் கதிரவன் என்ன சொன்னாரோ, அதை செஞ்சேன். இன்னைக்கு இன்டஸ்ட்ரியிலேர்ந்தும், வெளியிலேர்ந்தும் நிறைய பாராட்டுகள் கிடைக்குது. தொடர்ந்து நடிக்கலாம்ங்கிற எண்ணத்தையும் அது உருவாக்கியிருக்கு” என்று பேச ஆரம்பிக்கிறார் மு.களஞ்சியம். பூமணி, பூந்தோட்டம், கிழக்கும் மேற்கும், நிலவே முகம்காட்டு, மிட்டாமிராசு, கருங்காலி ஆகிய படங்கள் இவரது இயக்கத்தில் வெளிவந்தவை.

இப்போது ‘முந்திரிக்காடு’ என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறாராம். “இது முழுக்க முழுக்க தஞ்சாவூர் பேக்ரவுண்ட்ல நடக்கிற கதை. எப்படி நெல் விவசாயம் பெரிய அளவில் நடக்குதோ, அதே போல பெரிய வரவு செலவுள்ள விவசாயத்தில் முந்திரியையும் சேர்த்துக்கலாம். ஆனால் இன்னைக்கு அவங்க வயிற்றிலேயும் அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. வெளிநாட்லேயிருந்து முந்திரி இறக்குமதி செய்யறதால இவங்க வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகிவிட்டது. பட்டினி சாவுகள் நிகழ ஆரம்பிச்சுருக்கு. அதையெல்லாம் சொல்ற படமா முந்திரிக்காடு இருக்கும்” என்றார் களஞ்சியம். இதில் சீமான் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கிறாராம். “எலக்ஷன் பிசியில இருக்கார் அண்ணன். முடிச்சுட்டு வந்துட்டார்னா படமும் முடிஞ்சுரும்” என்றவரிடம், அந்த கேள்வியை கேட்காமல் நகர்ந்துவிட முடியுமா?

உங்களுக்கும் அஞ்சலிக்குமான பிரச்சனை முடிஞ்சுருச்சா. ஊர் சுற்றி புராணம் படத்தை எப்படி வெளியிடுறீங்க? என்றோம்.

“சார்… அந்த படத்தை பற்றியோ, அஞ்சலி பற்றியோ இப்ப பேச முடியாது. ஏன்னா அந்த பிரச்சனையை சங்கங்களின் பொறுப்புல விட்டுட்டேன். அவங்களும் மீடியாவுல எதையும் பேச வேண்டாம்னு சொல்லியிருக்காங்க. நான் நம்பிக்கையோட காத்திருக்கேன். அந்த படத்திற்காக நான் வெளியில் நிறைய பைனான்ஸ் வாங்கியிருக்கேன். அதுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியிருக்கு. எல்லாம் நல்லபடியா நடக்கும்னு நம்புறேன்” என்றார் மு.களஞ்சியம்.

நடு விரலை சுண்டு விரல் நம்பலேன்னா நடக்கறதே கூட சிரமம்தான். நம்பிக்கையோட காத்திருங்க டைரக்டர்!

Leave A Reply

Your email address will not be published.