எந்த நேரத்திலும் விமர்சனம்

0

ஐன்ஸ்டீன் தத்துவம் மாதிரிதான் ஆவிப்படங்களும். ஆக்க முடியும். அழிக்க முடியாது. தமிழ்சினிமாவில் வரிசைகட்டி நிற்கும் தொள்ளாயிரத்து சொச்ச ஆவிப்படங்களில் ஒன்றுதான் இந்த ‘எந்த நேரத்திலும் ஒன்று’. ஆர்.முத்துக்குமார் எழுதி இயக்கியிருக்கிறார்.

ஒரு பணக்காரனுக்கும் ஏழைக்குமான காதல். அந்த காதலை பிடிக்காத பணக்கார குடும்பம். எல்லாரும் சேர்ந்து கொண்டு காதலியை கொல்ல, கொல்லப்பட்ட ஆவி கொடூரமாக துரத்த… வந்த வேலை முடிஞ்சுதா, ஆவிக்கோபம் அடங்குச்சா? மிக மிக சுருக்கமான இந்த கதையை வைத்துக் கொண்டு மனசுக்கு நெருக்கமாக ஒரு சினிமா தர முயற்சித்திருக்கிறார்கள். முயற்சி திரு-வினை(?) ஆகியிருக்கிறது.

பா.விஜய்யில் கொஞ்சமும், சினேகனில் கொஞ்சமும் கலந்து போட்டு பிசைந்தால் படத்தின் ஹீரோ ராமகிருஷ்ணன் ரெடி. அந்த இருவரையுமே, ‘சற்றே தள்ளியிரும் பிள்ளாய்’ என்று ஒதுக்கி விட்ட ரசிகர்கள், ராமகிருஷ்ணனை ஏற்றுக் கொள்கிறார்களோ, இல்லையோ? இந்த கதையில் வரும் அழுத்தமான கேரக்டர் என்பதால் அவரை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். லீமா பிரபுவை வளைத்து வளைத்து காதலிக்கும் அவர், தன் அக்காவிடம் அவரை காண்பிக்க அழைத்து வருகிறார். பார்த்தால்… தங்களால் கொல்லப்பட்ட அதே பெண் உருவத்தில் இந்த லீமா. இந்த திடீர் திருப்பத்தால் அவர் குழம்ப, அக்கா ஏண்டா குழம்புகிறார் என்று நாம் குழம்ப… அந்த பிளாஷ்பேக் விரிகிறது. ஒருவேளை பிளாஷ்பேக்கை முதலில் காட்டி, அதற்கப்புறம் லீமாவை காட்டியிருந்தால், அந்த சுவாரஸ்யமும் பதற்றமும் நமக்கும் தாவியிருக்குமோ என்னவோ?

இம்சிக்கும் ஆவியாகவும், இளக வைக்கும் காதலியாகவும் இருவேறு கெட்டப்புகளில் வருகிறார் லீமா. இவருக்குதான் படத்தில் அதிக வேலை. கொடுக்கப்பட்ட கேரக்டரை மெனக்கெட்டு சுமந்திருக்கிறார். இரண்டு கேரக்டர்களுக்கும் முக ஒற்றுமை இருக்கிறதே தவிர, வேறெந்த ஜென்ம பிராப்தமும் இல்லை. அது ஏன் என்பதையும் சொல்லியிருக்கலாம்.

ராமகிருஷ்ணனின் அக்காவாக நடித்திருக்கும் சான்ட்ரா, பல நேரங்களில் ரோப்பில் தொங்குகிறார். எவ்வளவு சிரமம்? ஆனால் அவ்வளவு சிரமத்தையும் பொறுத்துக் கொண்ட சான்ராவுக்கு, கைதட்டலும் இருக்கிறது தியேட்டரில்.

ஒரு ஆவி எப்பவும் சுலபமாக ஒரு குழந்தை உருவத்திற்குள் மட்டும் புகுந்து கொள்கிறதே… அது ஏன்யா? ஐயோ பாவம் அந்த குழந்தை விஜிதா. உயிரை கொடுத்து நடித்திருக்கிறாள்.

சிங்கம் புலியின் காமெடிக்கு சிரித்தாக வேண்டும் என்றால், வேறு ஏதாவது விசேஷ ட்ரிட்மென்ட் இருந்தால்தான் உண்டு. அப்படியிருந்தும் படம் முழுக்க வருகிறார் புலி.

ஒரு ஆவிப்படத்திற்கு என்ன நேர்மை செய்ய முடியுமோ, அவ்வளவு நேர்மை செய்திருக்கிறது சாலை சகாதேவனின் கேமிரா. பி.சதீஷின் இசையில் பாடல்கள் சுமார். சபேஷ் முரளியின் பின்னணி இசை மட்டும் தேவலாம் ரகம்.

துவைச்ச துணியை துவைக்கவும், அரைச்ச மாவை அரைக்கவும் இவ்வளவு செலவு என்றால், இதை அந்த ஆவியே கூட மன்னிக்காது.

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.