எங்க அம்மா ராணி விமர்சனம்

0

அம்மாக்களுக்கு சோதனையான நேரம் இது. தமிழகமே அம்மா, சின்னம்மா என்று அரசியலில் மூழ்கிக் கிடக்க…. தன்ஷிகா காட்டியிருக்கும் இந்த அம்மா அவதாரம், அடடா… அற்புதம்! ஒரு தாய் தன் குழந்தைகளிடம் காட்டுகிற அன்பும் அரவணைப்பும் தியாகமும் எப்படிப்பட்டது என்பதை இரண்டு அம்மாக்களுக்கு தாயாக இருந்து நிரூபித்திருக்கிறார் தன்ஷிகா. இளம் நடிகைகள் யாரிடம் கேட்டாலும், “என்னது… அம்மாவா நடிக்கணுமா?” என்று அரண்டு ஓடுவார்கள். ஆனால் தன்ஷிகா, ஒன்றல்ல, இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்கத் துணிந்தது சிறப்பு. நடிப்பு? அதைவிட சிறப்பு.

காதல் திருமணம் செய்து கொண்டு மலேசியாவில் செட்டில் ஆகிவிடும் தன்ஷிகாவுக்கு அடுக்கடுக்காக சோதனைகள். காணாமல் போய்விடும் கணவன். திடீரென இறந்துவிடும் மகள். மற்றொரு மகளுக்கு வினோதமான நோய். குளிர் பிரதேசத்தில் இருந்தால் நோயை கட்டுப்படுத்தலாம் என்று வேறொரு இடத்திற்கு வந்தால், வந்த இடத்தில் அந்த குழந்தையை அட்டாக் பண்ணும் பக்கத்துவீட்டுக் குழந்தையின் ஆவி.

என்ன செய்தார் தன்ஷிகா என்பதை விறுவிறுப்பான க்ளைமாக்ஸ்சில் ரிவீல் பண்ணுகிறார் டைரக்டர்பாணி. நமது மனசோ ஆஹா என்று ரிலீப் ஆகிறது.

மகளின் உடம்பில் ஆவி புகுந்தபின், அவளது நோய் போய்விடும். ஆவியை விரட்டினால் நோய் வந்துவிடும். நோயும் போகணும். ஆவியும் போகணும் என்ற டைட்டான முடிச்சுதான் இப்படத்தின் வியக்கத்தகுந்த க்ளைமாக்சின் ஆதாரம். அதை சேதாரம் இல்லாமல் நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறார் பாணி.

வர வர தன்ஷிகா தனக்கு பெயர் சொல்லும்படியான ரோல்களை மட்டுமே செலக்ட் பண்ணி நடிக்கிறார். பரதேசி தந்த ஊட்டமாக இருக்கலாம். (வாழ்க பாலா) அதற்காக ஒரு பெண்ணின் வாழ்க்கையில் இத்தனை சுமைகளை ஏற்றியா கொல்வது? பரிதாபம் மிஸ்டர் பாணி.

படத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும் ரசிகர்களை பாக்கெட்டில் திணித்துக்கொண்டு கிளம்பிவிடுகிறார் நமோ நாராயணன். வெல்டன்.

வர்ணிகா, வர்ஷா என்ற இரண்டு குழந்தைகளுமே சினிமா என்பதை புத்திக்கு உணர விடாத  அளவுக்கு நடித்திருக்கிறார்கள். அதிலும் ஆவி உடம்புக்குள் புகுந்த பின் தனது பாடி லாங்குவேஜ் பார்வை என்று எல்லாவற்றையும் மாற்றி காட்டி அசத்துகிறாள் அந்த சிறுமி.

படத்தின் ஜீவ நாடியே இளையராஜாவின் பாடல்களும் பின்னணி இசையும்தான். தாய் பாசத்தை இசையில் வடிக்கிற சக்தி, இன்னமும் இளையராஜாவின் ஆர்மோனியத்துக்குதான் 100 சதவீத சாத்தியமாகியிருக்கிறது. பின்னணி இசை? சொல்லவே வேண்டாம். மனசு கனக்கிறது.

மலேசியாவை இவ்வளவு சுலப டிக்கெட்டில் காட்டிய ஒளிப்பதிவாளருக்கு ஒரு ஸ்பெஷல் வணக்கம்.

இது ஆவி சீசன்தான். ஆனால் அதற்குள் அற்புதமான அம்மா சென்ட்டிமென்ட்டை குழைத்து புது சீசனுக்கு வழியேற்படுத்தியிருக்கிறார் இயக்குனர் பாணி. உங்க பாணி வெல்லட்டும்!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.