எங்கிட்ட மோதாதே /விமர்சனம்

1

‘தலைமுறைகள் மாறலாம், தக்காளி சோறு அதேதான் ’ என்பது போல, ‘நடிகர்கள் மாறலாம். ரசிகர்கள் அப்படியேதான் ’ என்பதை சொல்ல வந்திருக்கும் படம். இன்று அஜீத் விஜய்க்காக அடித்துக் கொள்ளும் ரசிகர்களின் அப்பன், மாமன்களின் கதைதான் இந்த ‘எங்கிட்ட மோதாதே’.

80களில் ரஜினி ரசிகர்களும், கமல் ரசிகர்களும் எப்படி அடித்துக் கொண்டார்கள்? அன்று தியேட்டர்களில் வைக்கப்பட்ட கட்அவுட்டுகளின் பின்னணி என்ன? அவற்றால் வரும் பிரச்சனைகள் என்ன? இவற்றையெல்லாம் கால சக்கரத்தில் ஏறி ஒருமுறை சுற்றி வந்திருக்கிறார் அறிமுக இயக்குனர் ராமு செல்லப்பா. அவர் சுற்றி வந்ததும் அல்லாமல், இந்தகால ப்ளஸ் டூ காலேஜ் பசங்களையும் அதில் ஏற்றி, ‘பாருங்கப்பா எங்க பழம் பெருமைகளை’ என்று கூறியிருக்கிறார்.

பின் வரும் காலங்களில் அனிருத், குறளரசனுக்காகவும் கூட ரசிகர்கள் அடித்துக் கொள்ளலாம். ஆனால் அந்த கட் அவுட் காலம்? ‘சே… திரும்ப வராதப்பா’ என்கிற உணர்வை அப்படியே அள்ளி நிரப்பியிருக்கிறது படம்!

கட் அவுட் பெயின்ட்டரான நட்டி நட்ராஜ் ரஜினி ரசிகர். அவரது உயிர் நண்பரான ராஜாஜி கமல் ரசிகர். ஒண்ணுக்குள் ஒண்ணு என்று இருக்கிற இவர்களை பிரிக்க வருகிறது ஒரு சம்பவம். அதற்கப்புறம் தனித்தனியாக முறைத்துக் கொள்கிற இருவரும் சேர்ந்து ஒரு பொது எதிரியை போட்டு பொளந்து கட்டுவதுதான் மெயின் ஸ்டோரி. இதில் இவர் தங்கையை அவரும், அவர் தங்கையை இவரும் லவ்வடிப்பது படத்தின் வண்ணத்தை மேலும் அழகுபடுத்துவதால், யூத்துகளில் துவங்கி, எபவ் ஃபிப்டிக்கும் கூட படம் பிடிப்பது 100 சதவீத கியாரண்டி! (இருந்தாலும் ரசிகர்களுக்கு ஒரு முன்னெச்சரிக்கை. இப்படத்தின் இரு ஹீரோயின்களில் ஒருவர் பார்வதி நாயர். சும்மாவே சூயிங்கம். இந்த லட்சணத்துல இவரு முகத்துல எண்ணை வழியுற கெட்டப் வேறு. பரவசத்துல பல்லு நடுங்குது சாமியோவ்)

படம் நடக்கும் காலம், அதற்காக எழுதப்பட்ட வசனங்கள், ஒரு ரயில் கிளம்பி வேகம் எடுப்பதை போல எடுக்கும் திரைக்கதை… இவை எல்லாவற்றையும் தாண்டி கைகுலுக்க வேண்டிய ஒரு நபர் உண்டென்றால், அவர் இப்படத்தின் ஆர்ட் டைரக்டர். இவரது கை வண்ணத்தில் எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்திருக்கிறது எய்ட்டீஸ் சுவடுகள்! அது மட்டுமல்ல… இந்த படத்திற்காக பயன்படுத்தப்பட்டிருக்கும் ஒவியங்களும், அவற்றை வரைந்த கைகளுக்கும் கூட மானசீகமாக ஒரு வணங்கம்ங்க!

ரஜினி ரசிகராக நடிப்பதற்கு நட்டியை விட்டால் பொருத்தமான ஆளே இல்லை என்று நிரூபித்திருக்கிறார் அவர். நடக்கும் ஸ்டைல், பார்க்கும் அலட்சியம், பேசும் வேகம், என்று அச்சு அசலாக ரஜினியை செதுக்கியிருக்கிறார். தெரிந்து நடந்ததா, தெரியாமல் நடந்ததா, தெரியவில்லை. இந்தப்படத்தில் காட்டப்பட்டிருக்கும் ரஜினி ரசிகன், பெருந்தன்மை மிக்கவனாகவும், மன்னிக்கும் மனசுள்ளவனாகவும் இருக்கிறான். ஆனால் கமல் ரசிகன் அப்படியில்லை. (ஏதும் உள்குத்து இருக்கா ராமுசெல்லப்பா?) இவருக்கும் ராதாரவிக்கும் நடுவே பிரச்சனை ஸ்டார்ட் ஆன பின் அதுவரைக்கும் நடந்த கதை நாலு கால் வேகத்தில் பாய்கிறது.

ரசிகர்கள் உற்சாக மிகுதியில் தியேட்டர் சேர்களை அடித்து நொறுக்குவது, இன்னபிற ஐட்டங்களுக்கு சேதம் விளைவிப்பது போன்ற கொடுமைகளை அச்சடித்தாற் போல சொல்லியிருக்கிறார் டைரக்டர். மனசுல வச்சுக்க வேண்டிய விஷயம்தான்! அந்த காலத்தில் மட்டுமல்ல, இந்த காலத்திலும் கூட தேர்தல் வந்தால் சினிமா ரசிகர்களின் பங்கு எத்தகையது என்பதை ஒரு சீனில் பிரமாதமாக விளக்கியிருக்கிறார்கள். ‘ஓட்டு பறிபோய்டும் போலிருக்கே’ என்ற அச்சத்தில் ராதாரவி படக்கென பல்டி அடிப்பதை சந்தோஷமாக கைதட்டி ரசிக்கிறது தியேட்டர்.

விஜய் முருகனின் வில்லத்தனமும், அவரது பைக் ரெய்டும் செம! அளவு குறைத்தோ, கூட்டியோ நடிக்கவில்லை. தேறிவிட்டார் முழு நடிகராக!

கமல் ரசிகர்கள் எல்லா காலத்திலும் பாவம்தான் போலிருக்கிறது! ராஜாஜி நல்ல உதாரணம்!

ஜாக்கெட் அளவு கொடுக்க வரும் சஞ்சிதா ஷெட்டி, “சைசே மாறிப்போச்சு. எல்லாம் உங்க அண்ணனாலதான்” என்று சொல்கிற வசனம், படு பச்சை. ஆனால் அது மண்டைக்குள் ஏறுவதற்குள் அடுத்த பாய்ச்சலுக்கு நம்மை கொண்டு போய்விடுகிறார் டைரக்டர். பெரிய காமெடி நடிகர்கள்தான் வேண்டும் என்றில்லாமல் புதிய நபர்களை கொண்டு பிரமாதப்படுத்தியிருக்கிறார்கள். அந்த தாடிக்காரருக்கு பிரகாசமான எதிர்காலம் தெரிகிறது. விட்றாதீங்க பிரதர்…

நடராஜன் சங்கரன் இசையில் பாடல்கள் பெரிதாக ஈர்க்காவிட்டாலும், பின்னணி இசை மயங்க விடுகிறது. படத்தில் வரும் பைட்டுகள் அத்தனையும் எய்டீஸ் ஸ்டைலிலேயே அமைக்கப்பட்டதால் கொஞ்சம் வேகம் கம்மி.

தலைப்பை பார்த்துவிட்டு வழக்கமான ஒரு ஆக்ஷன் படம் போல இருக்கும் என்று நினைத்து உள்ளே போனால், கூரான ஆயுதம் கொண்டு கூந்தல் சீவி அனுப்புகிறார்கள். மனசுக்கு பிடித்த மோதல்தான்!

-ஆர்.எஸ்.அந்தணன்

1 Comment
  1. Mohammed Aneez says

    சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் ரசிகன் என்ற முறையில் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Leave A Reply

Your email address will not be published.