ஆகஸ்ட் 1 முதல் சினிமா ஸ்டிரைக்! பரபரப்பில் கோடம்பாக்கம்!

1

‘அடிச்ச மொட்டை போதும். ஆளை விடுங்க சாமீய்…’ என்று சினிமா தொழிலாளர் சம்மேளனத்தை பார்த்து கையெடுத்து கும்பிட ஆரம்பித்துவிட்டார்கள் தயாரிப்பாளர்கள். அந்தளவுக்கு சம்பள பேட்டா விஷயத்தில் போட்டுத் தாக்கிய பெப்ஸி தொழிலாளர்களுக்கு ‘டூக்கா’ விட்டுவிட்டு தன் போக்குக்கு படம் எடுக்கிற துணிச்சல் முடிவுக்கு விஷாலும் பச்சைக் கொடி காட்ட, கடந்த ஒரு வாரமாகவே தயாரிப்பு தரப்பில் புது வசந்தம் புதுப் பொலிவு.

“நீங்க வேலைக்கே வேணாம். நாங்க பார்த்துக்குறோம். உங்க அமைப்பில் இல்லாதவங்களை வச்சுக் கூட வேலை பார்த்துக்குறோம்” என்று இவர்கள் கொக்கரிக்க, ஆகஸ்ட் 1 ந் தேதியில் இருந்து ஸ்டிரைக் என்று அறிவித்திருக்கிறது பெப்ஸி.

தயாரிப்பாளர் சங்கத்தினர் சொன்ன மாதிரி, 1 ந் தேதிக்கு பின் நடக்கும் படப்பிடிப்புகளில் யார் வேலை செய்வார்கள்? வேலை செய்தால் தடுக்க வரும் பெப்ஸியை சமாளிக்கும் விதங்கள் என்னென்ன? படப்பிடிப்பு தளங்களில் நடக்கும் சண்டை சச்சரவுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்படி? இதையெல்லாம் உடனே யோசித்தாக வேண்டிய கட்டாயத்திலிருக்கிறது விஷாலின் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம்.

இந்த இடத்திலும் ரஜினிக்குதான் கடும் தர்ம சங்கடம். அவரது காலா படப்பிடிப்பு ஈவிபி ஸ்டூடியோவில் நடந்து வருகிறது. அதில் வேலை செய்பவர்கள் எல்லாருமே பெப்ஸி தொழிலாளர்கள்தான். தயாரிப்பாளர் சங்கம் பெப்ஸி அல்லாதவர்களை வைத்து ஷுட்டிங் நடத்த சொன்னால் ஷுட்டிங் நடக்குமா? அதற்கு ரஜினி ஒப்புக் கொள்வாரா?

ஒருவேளை ரஜினி மவுனம் காத்தால், ‘ரஜினி தொழிலாளர்களுக்கு எதிரானவர்ப்பா…’ என்ற கலகக்குரல் ஸ்டார்ட் ஆகும். இதற்கு அஞ்சி பெப்ஸிக்கு ஆதரவு அளித்தால், ‘ஒரு நல்லது நடக்கும்னு நினைச்சோம். ரஜினி புகுந்து கெடுத்துட்டாரே…’ என்று குரல்கள் தயாரிப்பாளர் சங்கத்தில் கேட்கும்.

ஆக மொத்தம் ரஜினியின் தலை, ஆயிரத்து சொச்சமாவது தடவையாக உருளப் போவது நிச்சயம்.

பின்குறிப்பு- பெப்ஸியின் ஸ்ட்ரைக் அறிவிப்புக்கு பின் கருத்து தெரிவித்திருக்கும் விஷால், “எடுத்த முடிவில் மாற்றமில்லை. பார்க்கலாம்” என்று கூறியிருக்கிறார்.

1 Comment
  1. Daniel Rak says

    தலைவர் ரஜினி அவர்கள் எது செய்தாலும் தமிழ் சமுதாயத்துக்கு நன்மையே பயக்கும்.

Leave A Reply

Your email address will not be published.