காஸி – விமர்சனம்

0

உலகத்தில் எதைப்பற்றி படம் எடுத்தாலும், “அதான் எனக்கு தெரியுமே…” திமிரோடு அமர்ந்திருக்கிற ரசிகனை கூட, இரண்டு மணி நேரம் வாயடைத்துப் போக வைக்க முடியுமா? ஒரு முறை ‘காஸி’யில் மூழ்குங்கள். சகலத்தையும் மறக்க வைக்கிற நிமிஷங்கள் அவை! நமக்கு முன் பின் தெரியாத நீர்மூழ்கி கப்பல் பற்றியும், அதற்குள் பல நாட்கள் நமக்காக போராடுகிற எல்லை பாதுகாப்பு படை வீரர்களை பற்றியும் கதைதான் காஸி. இருட்டுக்குள் தள்ளிவிட்டு அடிக்கிற எதிராளியை போல, தண்ணீருக்குள் நின்று கொண்டு தாக்க வருகிற பாகிஸ்தானின் காஸி என்கிற நீர்மூழ்கிக் கப்பலை, படு சேதம் ஆன இன்னொரு கப்பலை கொண்டு எப்படி தூள் தூளாக்குகிறார்கள் என்பதுதான் இந்தப்படம். புல்லரிக்க வைத்திருக்கிறார் புதுமுக இயக்குனர் சங்கல்ப்! இவரே எழுதிய புளு ஃபிஷ் என்ற கதையின் உருவாக்கம்தான் காஸி.

1971 ல் இந்தியாவுக்குள் ஊடுருவி விசாகப்பட்டினம் கடற்பகுதியை தாக்க வந்த காஸி பற்றி பலரும் அறியாத பல விஷயங்களை புட்டு புட்டு வைத்திருக்கிறார் சங்கல்ப்.

பாகுபலியில் வந்த பல்லாளத்தேவன் ராணாதான் இப்படத்தின் ஹீரோ. சி 21 இந்திய நீர்மூழ்கிக் கப்பலின் கேப்டனான இவரும் மற்றொரு கேப்டனான கே.கே.மேனனும் கடல் ரோந்துக்கு கிளம்புகிறார்கள். கடல் எல்லையில் இன்னொரு நீர்மூழ்கி கப்பலும் இருப்பதை உணரும் கேப்டன்கள், தங்கள் வீரர்களுடன் அதை எதிர்கொள்ள முயல… கடலுக்கு அடியில் நடக்கும் அந்த பரபரப்பு அப்படியே நம் நாடி நரம்புகள் எங்கும் ஏறி ஏறி ஓட ஆரம்பிக்கிறது.

எதிரி நாட்டு கப்பலுக்கு நிமிஷ நேரம் கூட மன்னிப்பு கிடையாது. போர்… தாக்குதல்… என்று வெறிகொள்ளும் கே.கே.மேனனும் அவரது கோபமும் அவர் மீது தனியாக அன்பு கொள்ள வைக்கிறது. மிக மிக துல்லியமான எக்ஸ்பிரஷன்கள், அலட்டிக் கொள்ளாத நடிப்பு என்று பளிச்சென மனதில் இடம் பிடித்துக் கொள்கிறார் மேனன். இந்த ஒரு காரணமே அவரது முடிவை தாங்கிக் கொள்ள முடியாத நெருக்கடிக்கு தள்ளுகிறது நம்மை.

ராணாவின் அகன்ற ஸோல்டர்களில் இன்னும் கூட ஏற்றி வைக்கலாம் என்கிற அளவுக்கு இடம் இருந்தும், மிக மிக சரியாக அவரை பயன்படுத்தியிருக்கிறார் சங்கல்ப். நீர்மூழ்கி கப்பல் முன்னும் பின்னும் நகர முடியாது. மேலே கீழே மட்டும்தான் போக முடியும் என்கிற சூழலில், துல்லியமாக கணக்கு போட்டு தாக்கும் அந்த மதி நுட்பத்தை புருவ மத்தியில் தேக்கி, புல்லரிக்க விடுகிறார் ராணா. கப்பலுக்கு வெளியே மிதந்து கடைசி குண்டை வெடிக்க வைக்கும் அவரது தைரியத்திற்கு தியேட்டரே எழுந்து நின்று சல்யூட் அடிக்கிறது. படத்தின் இறுதி நேரத்தில் ஒலிக்கும் தேசிய கீதம், கம்பீரம் கலந்த சென்ட்டிமென்ட் மூவ்!

இந்தப்படத்தில் ஏன் டாப்ஸி என்கிற கேள்வி எழாமல் இல்லை. ஆனால் அவரையும் அநாவசியமாக காட்டாமல் அர்த்தபூர்வமாக இணைத்துவிடுகிறார் இயக்குனர்.

நிஜக்கப்பல் ஒன்றிலும், கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்திலும் மிக்ஸ் பண்ணிய கம்பீரப்படம் இது. இதில் பங்குபெற்ற அத்தனை பேரும் மிக மிக சாமர்த்தியமாகவும் சாதுர்யமாகவும் திறமை காட்டியிருக்கிறார்கள். முக்கியமாக ஒளிப்பதிவாளர் மதியின் கேமிரா நுணுக்கமும், கே வின் பின்னணி இசையும் துருத்திக் கொண்டு தெரியாமல் கவனம் கொள்கின்றன.

இந்தியாவை நேசிக்கிற ஒவ்வொரு குடிமகனும் பார்க்க வேண்டிய படம். பள்ளிகளும், கல்லூரிகளும் தத்தமது மாணவர்களை கூட்டம் கூட்டமாக கூட்டிப்போக ஏற்றதொரு படம். நாளையிலிருந்தே உங்கள் பணியை ஆரம்பியுங்கள் ஆசிரியர்களே…!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.