இந்துக் கடவுள்னா இளக்காரமா போச்சா? அருவியை உருவிய நிருபர்கள்!

0

தரமான படங்களை மட்டுமே தயாரித்து வருகிறது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ். இந்த நிறுவனத்தின் இன்னொரு படைப்புதான் அருவி. பாலுமகேந்திராவின் அசிஸ்டென்ட் அருண் பிரபு இயக்கியிருக்கும் இப்படத்திற்கு இப்பவே இன்டஸ்ட்ரியில் ரகசிய கைதட்டல்கள் கேட்க துவங்கியிருக்கின்றன. ஒரு சாதாரண குடும்பம்… அக்குடும்பத்தை சேர்ந்த ஒரு இளம் பெண்…. அவள் எப்படி டெரரிஸ்ட் ஆக்கப்படுகிறாள் என்பதுதான் இந்தப்படத்தின் கதையாக இருக்க வேண்டும். அதிதி பாலன் என்ற புதுமுகம் வெயிட்டான இந்த ரோலை ஏற்றிருக்கிறார்.

முதலில் இந்த ரோலில் நடிக்க அழைக்கப்பட்டவர் நயன்தாராதான். கதையை கேட்டவுடனே தெறித்து ஓடிவிட்டார் அவர். அதற்கப்புறம் இன்னொரு முன்னணி ஹீரோயினான ஸ்ருதிஹாசனிடம் கேட்டார்களாம். அவரும் அதே பதிலை சொல்ல.. சுமார் 500 புதுமுகங்களுக்கு டெஸ்ட் வைத்து கடைசியாக கண்டுபிடிக்கப்பட்டவர்தான் இந்த அதிதி பாலன்.

இந்தப்படத்தின் விளம்பரங்களே ஒரு கவன ஈர்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த விளம்பரங்களில் ஒன்றுதான், இந்துமத பெண் கடவுள் தன் கையில் துப்பாக்கியோடு நிற்கும் ஸ்டில்.

‘அதென்ன இந்து கடவுளை மட்டும் சீண்டுறீங்க. இதுவே வேறு மத கடவுளின் கையில் இதுபோன்ற ஆயுதங்களை கொடுக்கிற துணிச்சல் உங்களுக்கு இருக்கா?’ என்றார் இத்துத்வாவுக்கு பெயர் போன ஒரு நாளிதழின் நிருபர். அப்புறமென்ன? பிரஸ்மீட் களை கட்டிவிட்டது.

அதிரடியாக ஒரு படத்தை எடுத்திருந்தாலும் அதிர்ந்து பேசத் தெரியாத இயக்குனர் அருண் பிரபு, இதற்கு சமாளிப்புடன் கூடிய ஒரு பதிலை சொன்னார். ‘அந்த பெண் எந்த கடவுளும் இல்ல. உங்க கண்ணுக்கு இப்படி தெரியுது. இன்னொரு விளம்பர டிசைனை பார்த்துட்டு, இந்த படத்தில் பின்னாடி ஒரு சிலுவை தெரியுது. கிறிஸ்டின்னா அலட்சியமா போச்சான்னு வேறு சிலர் போன் பண்ணினாங்க. அதுக்கு என்ன சொல்றீங்க?’ என்றார் அவர்.

முதல்ல இப்படி ஒரு படத்தை தயாரிக்கவே பயந்தோம். கதை மீது இருக்கிற நம்பிக்கையில தயாரிச்சோம். அறம் மாதிரியான படங்களுக்கு மக்கள் கொடுத்த வரவேற்பு எங்களுக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்திருக்கு என்றார் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு.

தான் போகிற இடமெல்லாம் எப்படி பசுமையை விதைத்துவிட்டுப் போவது அருவியின் குணமோ, அதுபோல எல்லா இடங்களிலும் மனிதம் விதைக்கப்பட வேண்டும் என்பதுதான் இந்த படத்தின் மையக்கருவாம். நல்ல தலைப்பு. நல்ல கருத்து!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.