மெர்சல் படத்தில் ஜிஎஸ்டியை விமர்சிக்கும் வசனங்கள் கட்! பிஜேபி மிரட்டலால் அதிர்ச்சி!

0

இனி அந்தந்த நடிகர்களே படம் எடுத்துக் கொண்டால்தான் உண்டு என்கிற அளவுக்கு தயாரிப்பாளரின் மென்னியை கடித்து துப்ப ஆரம்பித்துவிட்டது சுற்றுபுற அரசியல். நீங்க அரசியலுக்கு வரலாம். நாங்க சினிமாவுக்குள்ள வரக்கூடாதா? என்று நக்கல் சிரிப்பு சிரித்துக் கொண்டே நசுக்க கிளம்பிய அரசியல் கூட்டத்தில் சமீபத்திய வரவு பாரதீய ஜனதா கட்சி.

முந்தைய திமுக ஆட்சியும், இன்றைய அதிமுக ஆட்சியும் சினிமாவுக்கும், ஹீரோக்களுக்கும் கொடுத்து வந்த குடைச்சல்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அதன் விளைவைதான் கமலின் அடங்காத வாயால் அனுபவித்துக் கொண்டிருக்கிறார் முதல்வர் எடப்பாடி. இனி பகிரங்கமாக பேச வேண்டிய சூழலுக்கு விஜய்யையும் தள்ளிவிடுவார்கள் போலிருக்கிறது.

மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி க்கு எதிராக விஜய் பேசும் வசனங்களுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு. இதையடுத்து பொங்கி வெடித்த தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், உடனடியாக அந்த வசனங்களும் காட்சியும் நீக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தார். தொடர்ந்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தயாரிப்பாளர் முரளி இராம.நாராயணனுடன் பேசியிருக்கிறார். அந்த காட்சிகளை நீக்கச் சொல்லி பொன்னார் கேட்க, மறுபேச்சில்லாமல் ஒப்புக் கொண்ட மெர்சல் தயாரிப்பாளர் சுமார் 20 நிமிட காட்சியை நீக்கியிருக்கிறார் இப்போது.

இதனால் விஜய் ரசிகர்கள் கொதித்துப் போவது ஒருபக்கம் இருக்கட்டும். அரசியல்வாதிகளே இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். தணிக்கை துறையால் சான்றிதழ் பெறப்பட்ட படத்தை மறு சென்சார் செய்கிற உரிமை யாருக்கும், எந்த கட்சிக்கும் இல்லை என்று தமிழக கட்சிகள் பல கருத்து தெரிவித்துள்ளன.

இங்கு இருந்தால்தானே இந்த கருமத்தையெல்லாம் கண்ணால் பார்க்க வேண்டும்? காதால் கேட்க வேண்டும்? பொறுக்க மாட்டாமல் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார் அட்லீ.

விஜய்யிடமிருந்து ஒரு பதிலும் இல்லை.

Leave A Reply

Your email address will not be published.