வந்ததை வரவில் வை! வராததை தொலைவில் வை!!

0

உம்மென்று இருக்கும் உலகத்தை ஜம்மென்று மாற்றுகின்றன சிரிப்புப்படங்கள்! ஆக்ஷன் படங்களும் ஆவிப்படங்களும் கோடம்பாக்கத்தை ஆக்ரமித்தாலும், சிரிக்க வைக்காத படங்களை சீண்டிக்கூட பார்ப்பதில்லை ரசிகர்கள். ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ என்ற படத்தை தொடர்ந்து விஷ்ணுவிஷால் தயாரித்து அவரே நடிக்கும் ‘கதாநாயகன்’ காமெடிக்கு கியாரண்டி கொடுக்கிற படம். முருகானந்தம் இயக்கியிருக்கிறார்.

வாயை மூடிக் கொண்டிருந்தால் கூட, ஓரத்தில் கொஞ்சம் சிரிப்பை கசிய விடும் முகம் முருகானந்தத்திற்கு. மரகதநாணயம் படத்தில் முக்கிய ரோலிலும் நடித்திருக்கிறார் இவர். முருகானந்தம் இயக்கி வெளிவருகிற முதல் படம் கதாநாயகன். வெளிவர முடியாமல் முடங்கிக் கிடக்கும் இன்னொரு படம் மல்லுக்கட்டு. ‘வந்ததை வரவில் வை. வராததை தொலைவில் வை’ என்று அப்படத்தை மறந்தேவிட்ட முருகானந்தம், இந்தப்படத்தில் பண்ணியிருக்கும் காமெடி கலகலப்புகள் கொஞ்ச நஞ்சமல்ல என்று பாராட்டு மழை பொழிகிறது கோடம்பாக்கம்.

“இந்தப்படம் ஜெயிக்குதோ, தோற்குதோ… அது பற்றி கவலையில்ல. முருகானந்தம்ங்கிற நல்ல நண்பனை ஜாலியான நண்பனை எனக்கு அறிமுகப்படுத்தியிருக்கு. அதுபோதும்” என்று மகிழ்ந்தார் விஷ்ணுவிஷால். (மனுஷன் அம்புட்டு ‘ஜோக்’காளியாங்க?)

வரம் கொடுக்கும் பிள்ளையாருக்கே மூக்கு பெரிசாயிருக்கேன்னு கவலை இருக்கும். விஷ்ணுவிஷாலுக்கு இருக்காதா? பெரிய போலீஸ் அதிகாரியின் மகனான இவர், “வெற்றியும் தோல்வியுமா வாழ்க்கையை கடந்திருக்கேன்” என்றார். “மாவீரன் கிட்டு தோல்விக்கு அப்புறம் ரொம்ப அப்செட் ஆகிட்டேன். அப்பா வேலை பார்த்த திண்டுக்கல் போய், அங்கு நான் சின்ன வயசில் விளையாடிய இடம், சுற்றி சுற்றி அரட்டையடித்த இடம்னு சுற்ற ஆரம்பிச்சுட்டேன். பத்து நாள் இப்படியிருந்து ஃபிரஷ் ஆகிட்டு சென்னை வந்தேன். அதற்கப்புறம் நானே படம் தயாரிக்கணும்னு முடிவு பண்ணி எடுத்த படம்தான் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன். அது ஹிட். இதோ அடுத்து கதாநாயகன். இதுவும் ஜெயிக்கும்” என்றார்.

தோல்வியை தோற்கடிக்கிற யாராக இருந்தாலும், அவர்களை நேசிப்பதுதான் மக்களின் இயல்பு.

கதாநாயகனே… கமான் கமான்…!

முக்கியமான குறிப்பு- இப்படத்தின் துவக்கத்தில் சிம்பு பேசுகிறார். விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் ஒரு காட்சியில் நடிக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.