சினிமா மேடையில் ஒரு திருக்குறள் முனியம்மா! அசர வைத்த நடிகை!

0

திருக்குறள் முனுசாமியே திரும்ப உயிரோடு வந்து, “நல்லாயிரும்மா நீ” என்று ஆசிர்வாதம் பண்ணினாலும் ஆச்சர்யமில்லை. சினிமா மேடையில் ஒரு திடீர் அதிர்ச்சியை தந்தார் நடிகை சாரா! ‘சிவலிங்கா’ படத்தின் இரண்டு ஹரோயின்களில் ஒருவர். அப்படியென்ன அதிர்ச்சி தந்தார் என்பதை இறுதியில் பார்ப்போம். முதலில் படம் பற்றி சில தகவல்கள்.

ஏப்ரல் 14 ந் தேதி திரைக்கு வரப்போகிறது சிவலிங்கா. மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் வெற்றியை (?) தொடர்ந்து இந்தப்படத்தை அதிகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் லாரன்ஸ். இறுதிச்சுற்று நாயகி ரித்திகா சிங், சாரா, சக்திபி.வாசு, வடிவேலு இவர்களுடன் போலீஸ் அதிகாரியாக லாரன்ஸ் நடித்திருக்கும் சிவலிங்காவுக்கு சில பல விசேஷங்கள் உண்டு. சந்திரமுகி டைப்பான படம் இது. கன்னடத்தில் 100 நாட்கள் ஓடிய படத்தின் தமிழ் ரீமேக். இப்படி பல விசேஷங்களை சொல்லிக் கொண்டே போனாலும், பி.வாசு சினிமாவில் அறிமுகமாகி முப்பது வருஷங்களுக்குப் பின்பும் அதே ஸ்பிரிட்டோடு இயக்கியிருக்கிற படம்!

இந்தப்படத்தின் பிரஸ்மீட்டுக்கு அத்தனை பேரும் வந்திருக்க, இனிய திருக்குறளோடு தன் உரையை துவங்கினார் சாரா. நுனி நாக்கு ஆங்கிலத்தில் தனக்கே புரியாத மாதிரி பேசிவிட்டு போகும் ஹீரோயின்களுக்கு மத்தியில் சாரா சொன்ன அந்த திருக்குறளும், அதன் விளக்கமும் பலரையும் ஆச்சர்யப்படுத்த… கேள்வியாகவே கேட்டுவிட்டார்கள் அவரிடம்.

“சினிமா மேடைகளில் திருக்குறள் சொல்கிற வழக்கம் பழம்பெரும் இயக்குனர் எஸ்.பி.முத்துராமனுக்குதான் இருக்கு. நீங்க எப்படி இந்த ஸ்டைலில்?” என்று கேட்டு முடிக்க… சின்ன புன்னகையோடு பேச ஆரம்பித்தார் சாரா.

சார்… எனக்கு சின்ன வயசுலேர்ந்து திருக்குறள் மீது ஈடுபாடு உண்டு. திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் பல முறை பரிசுகள் வாங்கியிருக்கேன். மிக சிறப்பான கருத்துக்களை கொண்ட திருக்குறளை எல்லா மேடைகளிலும் சொல்லணும்ங்கறத நான் வழக்கமா வச்சுருக்கேன். இனிமே சினிமா மேடைகளிலும் அதை தொடர்வேன் என்றார்.

பலரும் வாயடைத்துப் போனதென்னவோ உண்மை!

Leave A Reply

Your email address will not be published.