சிரிப்புப் படத்தால் அழுகை! சிந்திய கண்ணீரில் நேர்மை!

0

‘இதற்காகதான் ஆசைப்பட்டாயா பாலகுமாரா’ படத்தில் வரும் அந்த சுருட்டை முடி நண்பனின் முகம் மறந்தாலும், “ப்ரண்டீய். லவ் மேட்ரூ. ஒரு ஆஃப் சாப்ட்டா கூலாய்டுவாப்ல” என்ற வசனத்தை மறக்கவே முடியாது. குரலும், அதற்குள் ஒளிந்திருக்கும் மாடுலேஷனும் வெகுவாக கவரப்பட, அந்த டயலாக் ஒலிக்காத இளைஞர் கூட்டமே இல்லை என்கிற அளவுக்கு போனது வரவேற்பு. அதற்கப்புறம் சொல்லிக் கொள்ளும்படியான வாய்ப்புகள் அமையவில்லை அந்த டயலாக் பையனுக்கு. பெயர் டேனியல்.

சமீபத்தில் வந்த ரங்கூன், மற்றும் மரகத நாணயம் படங்கள் மூலம் மீண்டும் டேனியின் கொடி பறக்க ஆரம்பித்துவிட்டது. மரகத நாணயம் பட வெற்றி டேனியை என்னவாக வைத்திருக்கிறது. அழுதுட்டாரு மனுஷன். ஏன்?

சில தினங்களுக்கு முன் அப்படத்தின் வெற்றி சந்திப்பு நடந்தது. பத்திரிகையாளர்கள் முன் மைக்கை பிடித்த டேனி, கண்ணீர் விட்டே அழுதுவிட்டார். காரணம், இந்தப்படம் கமிட் ஆன நேரம் அப்படி. எப்பவும் உருப்பட மாட்டே உருப்பட மாட்டே என்று திட்டிக் கொண்டேயிருப்பாராம் அவர் அப்பா. அவர் சந்தோஷப்படுகிற மாதிரியாக ஒரு விஷயமாவது செய்துவிட வேண்டும் என்று காத்திருந்த டேனிக்கு அவரது மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்குமல்லவா? அவர் சடலம் கிடத்தி வைக்கப்பட்டிருந்த நேரத்தில்தான் மரகதநாணயம் பட இயக்குனர் ஏ.ஆர்.கே சரவண் இவரை போனில் அழைத்திருக்கிறார்.

நடந்து கொண்டிருக்கும் சோகத்தை சொல்லாமல் அவரிடம் பேசிய டேனிக்கு பெரும் அதிர்ச்சி. போனிலேயே கதை சொல்ல ஆரம்பித்துவிட்டாராம் சரவண். பொறுமையாகவும் பொங்கி வரும் அழுகையை அடக்கிக் கொண்டும் முழு கதையையும் கேட்ட டேனி, அப்படத்தின் நடிக்க சம்மதித்திருக்கிறார். அடுத்தடுத்த சில நாட்களுக்குள் படப்பிடிப்பு. கதைப்படி ஆவிகளுடன் பயணிக்க வேண்டும். எப்படியிருக்கும் டேனிக்கு? தன்னுடன் தன் அப்பா ஆவியே வருவதாக நினைத்துக் கொண்டு நடித்தாராம்.

இவ்வளவு பெரிய வெற்றி… இந்த படத்தை காண அவரில்லையே என்று நினைத்து கண்ணீர் விட்டார் டேனி. விமர்சனங்களில் எல்லாம் அவரையும் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார்கள். ஆனால் எதுவும் எங்கப்பாவுக்கு போய் சேராதே… என்று அவர் கண்ணீர் விட்டதை கண்டு கலங்கியது மீடியா.

இன்னும் நல்லா வரட்டும் டேனி…!

Leave A Reply

Your email address will not be published.