இலை /விமர்சனம்

0

‘அடுப்பெரிக்கும் பெண்களுக்கு படிப்பெதற்கு?’ என்று கேட்ட ஆணாதிக்க சிந்தனைக்கு பெட்ரோல் ஊற்றி பற்ற வைத்து அநேக வருஷமாச்சு என்று சந்தோஷப்பட்டால், அந்த சந்தோஷத்தில் இரண்டு மணி நேர அபாயத்தை அள்ளி வைத்திருக்கிறது இலை! சராசரிக்கும் கீழான கிராமத்தில், அதைவிட சராசரியான குடும்ப சூழலில் இருக்கும் பெண் ஒருத்தி தன் லட்சியக் கனவான படிப்பை தொடர்வதற்காக எதிர்கொள்ளும் இடைஞ்சல்களும், அதை அவள் சமாளிப்பதும்தான் இந்த ‘இலை’ திரைப்படம். அதென்ன இலை? வேறொன்றுமில்லை… ஹீரோயினுக்கு படத்தில் சூட்டப்பட்டிருக்கும் பெயர்தான் அது. (ஒரு கோ இன்சிடென்ட். படத்தின் தயாரிப்பாளருக்கும் ‘இரட்டை இலை’ கட்சிக்கும் அப்படியொரு ஒட்டுறவு. படத்தில் சில இடங்களில் ஜெ.வின் படத்தை காட்டி, பெண்ணியத்தின் பெருமை சேர்க்கவும் ட்ரை பண்ணியிருக்கிறார் இயக்குனர் பினிஷ்ராஜ்)

முதலில் பச்சை பசேலென்ற அந்த கிராமத்திற்கும், அந்த பசேல் குளிர்ச்சியை நம் மனசுக்குள் இடப்பெயர்ச்சி செய்த ஒளிப்பதிவாளர் சந்தோஷ் அஞ்சலுக்கும் மானசீகமாக ஒரு வணக்கத்தை போட்டுவிட்டு இந்த விமர்சனத்தை ஆரம்பிப்பதே சாலப் பொருத்தம்!

தன் மகள் இலை நன்றாக படித்து, நல்ல வேலைக்குப் போக வேண்டும் என்கிற லட்சியத்தை சுமந்து கொண்டிருக்கும் ஏழை விவசாயி, பல கிலோ மீட்டர்கள் தாண்டிப் போய் அவளை படிக்க வைக்கிறார். அதே ஊரிலிருக்கும் பண்ணையார் வீட்டுப் பெண்ணும் அதே ஸ்கூலில் படிக்கிறாள். எல்லா பரிட்சையிலும் முதல் மார்க் வாங்கும் இலை மீது பண்ணையார் மகளுக்கு பொறாமை. இது ஒருபுறமிருக்க… இலையின் அம்மாவுக்கும் தாய் மாமனுக்கும் அவள் படிக்கவே கூடாது என்பதில் கொள்ளை வெறி. இந்த இக்கட்டான சூழலில்தான் 10 ம் வகுப்பு பரிட்சை வருகிறது. இலை அந்த பரிட்சையை எழுதக் கூடாது என்று சதி செய்யும் பண்ணையார், அவளது அப்பாவை ஆள் வைத்து தாக்குகிறார். குற்றுயுரும் குலையுயிருமாக மருத்துவமனையில் அவர். மகளுக்கோ பரிட்சை. குடும்பமே மருத்துவமனைக்கு ஓட, தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட கைக்குழந்தையான தங்கையை எங்கு ஒப்படைத்துவிட்டு பரிட்சைக்கு போவது? அல்லாடும் இலையின் அடுக்கடுக்கான அவஸ்தைகள்தான் முக்கால்வாசி படம். எப்படியோ பரிட்சை ஹாலுக்குள் அவள் என்ட்ரியாகிற அந்த நிமிஷத்தில் தியேட்டரில் கைதட்டல் விழுவதால், அதுவரை பொறுமை காத்தவர்களுக்கு ஆளுக்கொரு பாரத ரத்னாவே கொடுக்கலாம்.

படத்தின் கருத்து வலிமையாக இருந்தாலும், கதை ஒரே இடத்தில் நின்ற கொண்டு நகர முடியாமல் அடம் பிடிக்கிறது. மிக செயற்கையான காட்சிகளால் நிரப்ப முயல்கிறார் டைரக்டர். ஆனாலும் முழு கதையையும் தன் தலையில் சுமக்கும் இந்த இலை கதாப்பாத்திரத்தை ஏற்றுக் கொண்ட நடிகை சுவாதி நாராயணனின் தவிப்பையும் அழகையும் பார்த்துக் கொண்டேயிருக்கலாம்! கமர்ஷியல் படங்களில் நடிக்க வந்தால், கல்லா நிரம்பும் பெண்ணே…!

இவரைத் தவிர படத்தில் நடித்திருக்கும் எல்லாருமே, இந்த லோ பட்ஜெட் படத்திற்கு இது போதும் என்கிற மாதிரியே நடித்திருக்கிறார்கள். ஆனால் எல்லாவற்றையும் பேலன்ஸ் பண்ணி ஓங்கி நிற்கிறது மையக் கருத்து.

விஷ்ணு வி திவாகரனின் இசை, மனசுக்கு இதமாக இருக்கிறது. அந்த டைட்டில் பாடல் நல்ல மெலடி!

இலை,  கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால், தலைவாழை இலையாகவே அமைந்திருக்கும்! பட்…?

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.