நன்றியே உன் விலை என்ன?

0

ஆர்மோனியப் பெட்டியின் அத்தனை கட்டைகளிலும் உயிர் சேர்த்து வைத்திருக்கும் ஒரே கலைஞனான இசைஞானி இளையராஜாவுக்கு இப்படியொரு சோதனையா? சிங்கிள் பேரீச்சம் பழத்திற்குக் கூட தேறாத படங்களை கூட தன் பாட்டு வலிமையால் பல நாட்கள் ஓட வைத்தவருக்கு சினிமாவுலகம் கொடுத்த நன்றி இதுதானா?

இப்படி ஓராயிரம் கேள்விகளை உருவாக்கிவிட்டது இளையராஜா- பிரசாத் ஸ்டூடியோ லடாய். திடீரென அவரை வெளியே அனுப்பிவிட்டு கதவை பூட்டிய நிர்வாகம், பஞ்சாயத்தை கோர்ட் வரைக்கும் கொண்டு போய்விட்டது. நாற்பதாண்டுகளாக ஒரு கோவில் போல பாவித்த இசைக்கூடத்தில் நமக்கே இடம் இல்லையே என்று கவலை தோய்ந்து காணப்படுகிறாராம் இளையராஜா. ‘இதென்னப்பா ஸ்டூடியோ? இதைவிட பெருசா பிரமாதமா நாங்க கட்டித் தர்றோம். அங்க வாங்க’ என்று யுவனும் கார்த்திக் ராஜாவும் அவரை தேற்ற முயன்றாலும் ராஜாவின் முகத்தில் கவலை அப்பிக் கிடப்பதாக தகவல்.

இந்த விவகாரத்தில் இளையராஜாவின் பக்கம் நிற்க வேண்டிய சினிமா பிரபலங்கள் பலர் ‘நமக்கென்ன…?’ என்று ஒதுங்கிப் போவதுதான் வேடிக்கை. (ஒரு காலத்தில் இளையராஜாவின் ட்யூனால் வாழ்ந்து, பவுனாய் மினுக்கியவர்கள் கூட இந்த விவகாரத்தில் தலையிடவில்லை) நல்லவேளையாக இயக்குனர் பாரதிராஜா அழையா தலைவராக உள்ளே நுழைந்து, ‘ராஜாவை விட்டுக் கொடுக்க முடியாது’ என்று கூறியதுதான் ஆறுதல்.

இந்த பிரச்சனையை அவரே முன்னின்று பேசி வருகிறாராம். அவ்வளவு பெரிய கலைஞனை நீங்க வெளியே போக சொல்லக் கூடாது. ராஜாவே சில நாட்களில் அங்கிருந்து கிளம்பிவிடுவார் என்று உத்தரவாதமும் கொடுத்திருக்கிறாராம்.

ராஜாவைக் கூட மதிக்க வேண்டாம். காற்றலைகளில் மிதந்து கொண்டிருக்கும் அவரது ஆயிரக்கணக்கான பாடல்களையாவது மதிக்கலாமே? கவனிங்க பெரியவர் பிரசாத்தின் சின்னஞ்சிறு வாரிசுகளே….!

Leave A Reply

Your email address will not be published.